விளக்கேற்ற வந்தவள் – சிறுகதை

அன்று கார்த்திகை தீபம்!

அக்ரஹாரம் முழுவதும் தீப ஒளி பிரகாசித்துக் கொண்டிருந்தது.

மடிசார் மாமிகள், பட்டுப்பாவாடைச் சிறுமிகள், இந்த இரண்டுக்கும் மத்தியிலுள்ள திருமணமாகாத, திருமணமான இளம் பெண்கள் எனப் பெண்கள் வீடுகளின் திண்ணையில் அகல் விளக்குகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

ஏற்றிய அகல் விளக்குகளை வலது கையில் ஏந்தி, தீபத்தை காற்றுக்குப் பலி கொடுக்காமல் சர்வ ஜாக்கிரதையுடன் இடது உள்ளங்கையைக் குவித்து அணைத்தபடி திண்ணைக்கு வந்த பர்வதம் மாமியிடம், எதிர்வரிசை திரிபுரம் மாமி கேட்டாள்.

“ஏண்டி பர்வதம்? அடுத்த திருக்கார்த்திகைக்காவது விளக்கேற்ற நாட்டுப் பெண் வந்துடுவாளா?”

திரிபுரம் மாமி எதனால் அப்படிக் கேட்கிறாள் என்பது பர்வதத்திற்குப் புரியாமல் இல்லை.

வாசலில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்து கொண்டிருந்த விக்னேஷைக் கவனித்துவிட்டுத்தான், அவன் காதிலும் விழுகிற மாதிரி திரிபுரம் மாமி கேட்டிருக்கிறாள்.

“விக்னேஷ்! எதுத்தாத்து மாமி கேட்கிறது காதில் விழறதா?”

சித்தி கேட்டதை அவன் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. வேகமாக உள்ளே சென்றுவிட்டான்.

கை கால் முகம் கழுவி டவலால் முகத்தை அழுந்தத் துடைத்தவாறே ஹாலுக்கு வந்த விக்னேஷிடம் திருக்கார்த்திகைப் பொரி, அப்பம் அடங்கிய தட்டை நீட்டியவாறே,

“சாப்பிடுப்பா, காபி கலந்து எடுத்துண்டு வரேன்” என உள்ளே சென்றாள் பர்வதம்.

சூடான காபியை ஆற்றியபடி மீண்டும் வெளிப்பட்ட பர்வதம், “விக்னேஷ், இப்படி வர்ற வரன்களையெல்லாம் வேண்டாம் வேண்டாம்னு தட்டிக் கிட்டேட வந்தா எப்படிப்பா?

வர்ற தைக்கு முப்பத்தஞ்சு முடியறது. கேட்கிறவாளுக்கெல்லாம் பதில் சொல்லி மாளலை. நேத்திக்குக்கூட வக்கீலாத்து மாமி வந்திருந்தா.

அவ நாத்தனார் பெண் மதுரையில இருக்காளாம். வேலைக்குப் போறாளாம். ஜாதகம் கொண்டு தரட்டுமான்னு கேட்கிறா”

விக்னேஷ் மௌனம் சாதித்தான்.

“ஏண்டி, சும்மா தொண தொணன்னு? அவங்கிட்ட கேட்கிறதும் ஒண்ணுதான். சுவர்ல போய் முட்டிக்கிறதும் ஒண்ணுதான். நாம உயிரோட இருந்து அந்தக் காட்சியையெல்லாம் நம்ம கண்ணால பார்ப்போம்னு எனக்குத் தோணலை. வேற வேலையிருந்தா போய்ப்பாரு போ… போ….’

சித்தி கிளப்பிய எரிச்சல் தீ…. அப்பா சிவராமன் அதில் எண்ணெய் வார்த்தார்.

எதுவுமே சொல்லப் பிடிக்காத விக்னேஷ் ‘ஹிந்து’வில் கண்களை மேயவிட, விஷயம் அத்துடன் முடிந்தது அன்று.

விக்னேஷ்!

பட்டப்படிப்பை முடித்ததுமே அரசாங்க அலுவலகம் ஒன்றில் வேலை கிடைத்த ஓர் அதிர்ஷ்டசாலி!

வேலை கிடைக்கும் முன் நோய் வாய்ப்பட்டிருந்த தாயின் சிகிச்சைக்குக்கூட பணமின்றி ரொம்பவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த குடும்பம்.

கடை ஒன்றில் கணக்கு எழுதிக் கொண்டிருந்த தந்தையின் சொற்ப வருமானத்தில் இழுத்துப் பிடித்து வாழ்க்கை வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த நிலையில் விக்னேஷ் அரசாங்க வேலையில் அமர, தாயோ போய்ச் சேர்ந்தாள்.

இவனுக்குக் கீழ் இரண்டு தம்பிகள். அவர்களின் பள்ளிப்படிப்பு, குடும்பச் சூழ்நிலை, வீட்டைக் கவனிக்கப் பொறுப்பாக பெண் இல்லாமை போன்ற காரணங்களால் தந்தை மறுமணம் செய்து கொள்ள, குடும்ப அங்கத்தினர் பட்டியல் சற்று நீண்டது.

நல்லது-கெட்டது என அனைத்துமே இவனது சம்பாத்தியத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால் திருமணமே செய்து கொள்ளமால் தட்டிக் கொண்டு வந்தான்.

சென்ற பதினைந்து ஆண்டுகளாக எத்தனை வரன்கள்? எத்தனைக் கெஞ்சல்கள், எல்லாவற்றுக்கும் மேலாக எவ்வளவு பேச்சுக்கள்?

அப்பேச்சுகளில் கலந்திருந்த குத்தல்களும், குதர்க்கங்களும், ஏளனங்களும் தான் எத்தனையெத்தனை?

ஜீரணிக்க முடியாமல் புளித்த ஏப்பக்காரனாக விக்னேஷ் நடமாடிக் கொண்டிருந்தான்.

‘இந்த உலகம் எப்போதுதான் வாயை மூடிக் கொண்டு இருந்திருக்கிறது, திருமணம் ஆகும் வரை ஒரு பேச்சு. திருமணம் ஆன பின் ஒரு பேச்சு.

இளைஞனாய் இருந்தாலும், நடுத்தர வயதாயிருந்தாலும், முதியவனாய் இருந்ததாலும் எல்லா நிலைகளிலுமே உலக வாயின் உள்புகுந்து வெளிவந்து கொண்டுதான் இருக்கிறோம்.’

இப்படித்தான் விக்னேஷ் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு.

ஓராண்டிற்குப் பின் மீண்டும் கார்த்திகை மாதத்தில் ஓர் நாள்!

கார்த்திகை தீபத்திற்கு ஓரிரு தினங்களே இருந்தன. அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய விக்னேஷ், வந்ததும் வராததுமாக சோபாவில் வந்து விழுந்தான். மிக்க சோர்வுடன் காணப்பட்டான்.

“என்ன விக்னேஷ்? உடம்புக்கு என்ன? ஏன் என்னவோ போலிருக்கே?” சிவராமன்தான் கேட்டார்.

“ஒண்ணுமில்லேப்பா. தலை சுத்தலா இருந்தது. இப்போ பரவாயில்லை. கொஞ்ச நேரத்துல சரியாயிடும்”

“அது போகட்டும். நாளைக்கு சாயங்காலம் வக்கீலாத்துக்கு நாம எல்லோருமா போறோம். போய் அந்த மாமியின் நாத்தனார் பெண்ணைப் பார்க்கிறோம்.

கார்த்திகை தீபமாச்சேன்னு மதுரையிலிருந்து அந்த மாமியோட நாத்தனார் தன் பெண்ணை மன்னி ஆத்துக்கு அனுப்பி வச்சிருக்கா. கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் வக்கீலாத்து மாமி வந்து சொல்லிட்டுப் போறா”

“என்னப்பா இது? எங்கிட்ட எதுவும் கேட்காம திடுதிப்புன்னு பெண்ணைப் பார்க்க கிளம்புன்னா எப்படி?”

“இப்போ எதுவும் பேசப் போறதில்லைடா. சும்மா பார்த்துட்டுத்தான் வரப்போறோம்.”

“நீங்க எல்லோரும் போங்க. நான் வரலை”

விக்னேஷை எரித்து விடுவது போலப் பார்த்தார் சிவராமன்.

மறுநாள்.

விக்னேஷைத் தவிர அனைவரும் வக்கீல் வீடு சென்று பெண்ணைப் பார்த்துவிட்டுத் திரும்பினார்கள்.

பெண்ணை விக்னேஷ் பார்ப்பதற்காக கார்த்திகை தீபத்தன்று தானே அழைத்து வருவதாக பர்வதத்திடம் கூறியிருந்தாள் வக்கீலாத்து மாமி.

அவுதும் சரிதான் என பர்வதமும், சிவராமனும் ஒப்புக் கொண்டிருந்தனர்.

கார்த்திகை தீப நாளும் வந்தது.

அக்ரஹாரம் முழுவதும் தீப ஒளி பிரகாசித்துக் கொண்டிருந்தது.

வக்கீலாத்து மாமி தன் நாத்தனார் பெண் சகிதம் பர்வதம் வீட்டிற்கு வந்து விக்னேஷின் வருகைக்காகக் காத்திருந்தாள்.

அனைவரும் ஆவலுடன் காத்திருந்த வேளையில், வீட்டின் முன் விக்னேஷின் ஸ்கூட்டருக்குப் பதில் டாக்சி ஒன்று வந்து நின்றது.

நாலு பேர் கைத்தாங்கலுடன் விக்னேஷைத் தூக்கி வந்தனர்.

பர்வதம், சிவராமனுடன் சேர்ந்து அனைவரும் பதறினர்.

“என்னாச்சு?” என்றார் சிவராமன்.

ஆபிஸ் நண்பர்கள் சொன்னார்கள்.

“பிற்பகல் மூன்று மணி இருக்கும். தலை சுத்தற மாதிரி இருக்குன்னாரு. சொல்லிக்கிட்டேயிருந்தவரு திடீர்னு மயங்கிக் கீழே விழுந்திட்டாரு. உடம்பு முழுக்க வேர்த்திடுச்சு. உடனே டாக்டர் ஒருத்தரை வரவழைச்சு முதலுதவி செஞ்சு இங்கு கொண்டு வந்தோம்”

சிவராமன் பதற்றமானார்.

டாக்சியில் விக்னேஷின் நண்பர்களை அனுப்பி சிறப்பு மருத்துவர் தேவநாதனை கையோடு அழைத்து வரச் சொன்னார்.

இருபது நிமிடங்களுக்குப் பிறகு டாக்டர் தேவநாதன் வந்தார்.

விக்னேஷ் அருகில் சென்று அவனைப் பரிசோதித்தவர் மூக்குக் கண்ணாடியை அமைதியாகக் கழற்றினார்.

“ஐயாம் ஸாரி மிஸ்டர் சிவராமன். ஹீ இஸ் டெட்”

திடீரென எங்கிருந்தோ வந்து அடித்த காற்றில் திண்ணையில் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்குகள் அனைத்தும் அணைந்தன.

“என்ன டாக்டர்? என்ன சொல்றீங்க?”

“மிஸ்டர் சிவராமன், உங்க பையன் நேற்று முன்தினம் என்னை வந்து பார்த்து தலைசுத்தலா இருக்கு. உடம்பை என்னவோ பண்ணுதுன்னாரு.

டெஸ்ட் பண்ணி மருந்து எழுதிக் கொடுத்தேன். மறுபடியும் இன்று வந்து பார்க்கச் சொல்லியிருந்தேன். அதற்குள் இப்படி…’

விஷயம் அறியாத எதிர்வரிசை திரிபுரம் மாமி,

“ஏண்டி பர்வதம், அடுத்த திருக்கார்த்திகைக்காவது விளக்கேற்ற நாட்டுப்பெண் வந்துடுவாளான்னு போன வருஷம் நான் கேட்ட முகூர்த்தம் வக்கீலாத்து மாமியின் நாத்தனார் பெண் உங்காத்து நாட்டுப் பெண்ணா வரப்போறாளாமே? காதுல விழுந்தது நிஜம்தானா?” என்று நீட்டி முழங்கியபடி உள்ளே நுழைய,

ஏற்றிய அகல்விளக்கு ஒன்றை வலது கையில் ஏந்தி, தீபத்தைக் காற்றுக்குப் பலி கொடுக்காமல் சர்வ ஜாக்கிரதையுடன் இடது உள்ளங்கையைக் குவித்து அணைத்தவாறே ஹாலில் கிடத்தியிருந்த விக்னேஷின் தலைமாட்டில் கொண்டு போய் வைத்து அமைதியாகக் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள் வக்கீலாத்து மாமியின் நாத்தனார் பெண்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.