விளாம்பழம்

விளாம்பழம் தன்னுடைய புளிப்பு கலந்த இனிப்பு சுவை மற்றும் தனிப்பட்ட மணத்தால் எல்லோரையும் கவர்ந்திழுக்கும்.

விளாம்பழத்தினை யானைகள் விரும்பி உண்ணுகின்றன. இப்பழம் ஆங்கிலத்தில் உட்ஆப்பிள், யானை ஆப்பிள், மங்கி புரூட் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது.

இதன் தாயகம் இந்தியா என்று கருதப்படுகிறது. தற்போது இது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், தாய்லாந்து, மியான்மார், கம்போடியா, மலேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

விளா மரம்
விளா மரம்

 

இப்பழம் வெப்ப மண்டலத்தில் வளரும் இயல்புடைய மர வகைத் தாவரத்திலிருந்து கிடைக்கிறது. மெதுவான வளரியல்பினை உடைய இம்மரமானது 30 அடி உயரம் வரை வளரும். இம்மரத்தில் பூக்கள் பச்சை அல்லது மங்கிய சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன.

விளாம்பழங்கள் பெரும்பாலும் வட்டம் அல்லது நீள்வட்டத்தில் 5-9 செமீ விட்ட அளவினை பெற்று காணப்படுகின்றன. இப்பழமானது வெளிப்புறத்தில் கடினமான ஓட்டினையும் உட்புறத்தில் கிரீம் போன்ற பழுப்பு நிற சதைப்பகுதியில் சிறிய வெள்ளை நிற விதைகளையும் கொண்டுள்ளது.

இப்பழம் நன்கு பழுத்தவுடன் வெளிப்புற ஓட்டினை விட்டு பழசதைப்பகுதி தனித்து உருண்டையாகக் காணப்படும். இப்பழமானது அப்படியேவோ, பழச்சாறாகவோ உண்ணப்படுகிறது. இம்மரத்தின் இலைகள், பட்டைகள், பழங்கள் ஆகியவை மருந்துப் பொருட்களாக பழங்காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 

விளாம்பழத்தில் காணப்படும் ஊட்டச்சத்துகள்

இப்பழத்தில் விட்டமின்கள் சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃபோளவின்), பி3(நியாசின்) போன்றவையும், தாதுஉப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மெக்னீசியம், குரோமியம், மாங்கனீஸ், துத்தநாகம் போன்றவையும், புரோடீன்கள், கார்போஹைட்ரேட்டுகள், நார்சத்துக்கள் ஆகியவையும் காணப்படுகின்றன.

 

விளாம்பழத்தின் மருத்துவ பண்புகள்

நல்ல செரிமானத்திற்கு

இப்பழமானது குடலில் உள்ள புழுக்களை அழித்து உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது. நாள்பட்ட வயிற்றுக்கடுப்பினை இப்பழம் சரிசெய்கிறது. இம்மரத்தின் தண்டுகள் மற்றும் கிளைகளில் காணப்படும் பிசினானது வயிற்றோட்டம் மற்றும் வயிற்று உளைச்சலுக்கு நல்ல மருந்தாகும்.

இப்பழம் அல்சர் மற்றும் மூலநோயினை சரிசெய்கிறது. மேலும் இப்பழம் மலமிளக்கியாகச் செயல்பட்டு மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

 

இரத்த சுத்திகரிப்புக்கு

இப்பழச்சாற்றுடன் வெதுவெதுப்பான தண்ணீரும், சர்க்கரையும் சேர்த்து அருந்திவர இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு இரத்தம் சுத்தகரிக்கப்படுகிறது. இதனால் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்திற்கான பளு குறைக்கப்படுவதோடு உடலில் உள்ள நச்சானது எளிதாக வெளியேற்றப்படுகிறது.

 

காது வலிக்கு

இப்பழமரத்தின் வேரானது காதுவலிக்கு சிறந்த தீர்வாக உள்ளது.

 

ஸ்கர்வி ஏற்படாமல் தடுக்க மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பெற

இப்பழத்தில் காணப்படும் விட்டமின் – சியானது ஸ்கர்வி நோய் ஏற்படாமல் தடுக்கிறது. எனவே இப்பழத்தினை உண்டு ஸ்கர்வி ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கலாம்.

இப்பழத்தில் காணப்படும் விட்டமின் சியானது உடலுக்கு வலிமையான நோய் தடுப்பாற்றலை வழங்குகிறது. எனவே விளாம்பழத்தினை உண்டு வைரஸ் உள்ளிட்ட கிருமிகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்கலாம்.

 

சர்க்கரை நோயாளிகளுக்கு

இப்பழமரத்தின் கிளைகளில் காணப்படும் பிசினானது சர்க்கரை நோயின் தீவிரத்தை குறைத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரை இருப்பினை சரியான அளவில் நிர்வகிக்க உதவுகிறது.

இப்பழம் இரத்தத்தின் சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவினை சரியாக வைப்பதால் அபாயகரமான இரத்த சர்க்கரை ஏற்ற இறக்கம் தவிர்க்கப்படுகிறது.

 

சுவாச பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் பெற

இப்பழமரத்தின் இலைகள் நாள்பட்ட சளி மற்றும் சுவாச பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. சளியினால் ஏற்படும் நாள்பட்ட இருமல் மற்றும் தொண்டை புண் ஆகியவற்றை குணப்படுத்துகிறது. மேலும் இப்பழம் கபத்தினை நீக்கி சுவாச பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

 

ஆற்றல் அதிகரிக்க

100 கிராம் விளாம்பழத்தில் 140 கலோரி எரிசக்தி உள்ளது. இந்த எரிசக்தி உடல் உறுப்புகளின் செயல்பாடு மற்றும் உடல் சிதைமாற்றம் ஆகியவை துரிதமாக நடைபெற உதவுகிறது.

 

பாம்புக்கடி சிகிச்சை

ஆயுர்வேத மருத்துவத்தில் இப்பழமரத்தின் பட்டைகள், இலைகள், வேர்கள் ஆகியவை பாம்புக்கடி சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றது.

 

விளாம்பழத்தினை தேர்வு செய்யும் முறை

இப்பழத்தினை தேர்வுசெய்யும்போது பழம் ஒரே சீரான நிறத்துடன் கீறல்கள் ஏதும் இல்லாமல் வாசனையாகவும், கனமானதாகவும் இருக்க வேண்டும்.

நல்ல விளைச்சல் உடைய விளாம்காயானது அறை வெப்பநிலையில் பழுத்து விடும். இது பழுக்கும்போது பழத்தின் ஓடானது வெளிரிய பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறத்திற்கு மாறத் தொடங்கும்.

அத்துடன் பழுத்தவுடன் இப்பழத்திற்கான தனிப்பட்ட வாசனை வெளிவரும். இப்பழமானது உண்ணத் தகுதியானதா என்பதை அறிய இப்பழத்தினை சற்று உயரத்திலிருந்த தரையில் போடும்போது தட் என்ற ஒலியுடன் கீழே விழுந்து நின்றால் பழம் உண்ண தயார் என்பதினை அறியலாம்.

 

விளாம்பழத்தினைப் பற்றிய எச்சரிக்கை

இப்பழமானது அளவுக்கதிகமாக உண்ணும்போது வயிற்றில் வாயுத் தொந்தரவை ஏற்படுத்தும். எனவே இப்பழத்தினை அளவோடு உண்ண வேண்டும்.

விளாம்பழம் அதனுடைய‌ வெளிப்புற ஓட்டினை நீக்கி கருப்பட்டி அல்லது மண்டை வெல்லம் சேர்த்து ஒரு சேர பிசைந்து பின் உண்ணப்படுகிறது.

சில நேரங்களில் அப்படியே உண்ணப்படுகிறது. சில சமயங்களில் பழச்சாறாகவும், பாலுடன் சேர்த்து மில்க் சேக்காகவும் உண்ணப்படுகிறது.

இப்பழத்தின் காயிலிருந்து சட்னி தயார் செய்யப்படுகிறது. இப்பழமானது ஐஸ்கிரீம், ஜாம், சாலட் போன்றவைகளும் தயார் செய்யப் பயன்படுகிறது.

சத்துக்கள் நிறைந்த விளாம்பழத்தினை அளவோடு உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.