சிதறி விழுந்த நட்சத்திரங்கள்

செண்பகக் காட்டில் வாழ்ந்த அணில் வனிதா, குரங்கு ஜெகதா, பச்சைக்கிளி பாப்பம்மா, சிட்டுக்குருவி சிங்காரி ஆகிய நான்கும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன.

ஒன்றாக உழைத்து, ஒன்றாக உண்டு, ஒன்றாக உறங்கி சந்தோசமாக இருந்த அவற்றைக் கண்டு அங்கு வாழ்ந்த மற்ற விலங்குகளும் பறவைகளும் பொறாமை கொண்டலைந்தன.

ஒரு நாள் இவர்களின் ஒற்றுமையைக் கேள்விப்பட்ட பருந்து கருங்காலன் இவர்களை சந்தித்தது.

“ஒன்றாய் உண்டு

நன்றாய் உறங்கி

நன்றாய் வாழும்

நண்பர்களே!

வானில் பறக்கும் கருங்காலன்

வணக்கம் கூறி வந்தேனே!

நானும் உங்கள் நட்பைத் தான்

நாடியே இங்கே வந்தேனே!”
என்று கூறியது.

 

நண்பர்களான நால்வரும் தங்களிடையே வந்து நட்பைக் கோரும் புதியவனான கருங்காலனுக்கு என்ன பதில் கூறுவது என கூடிப்பேசின. பின் கருங்காலன் வானத்தில் வெகு உயரமாக பறக்கும் வல்லமையுடையவன் என்பதால் அவனது நட்பு தங்களுக்குப் பயன்படும் என முடிவு செய்து அவனையும் தங்களுடைய நண்பனாக ஏற்றுக் கொண்டன.

புதிய நண்பனான கருங்காலன் பருந்து இப்போதெல்லாம் அதிகமாக உழைப்பதில்லை. உணவு நேரத்தில் கடுமையாக உழைத்து உணவு கொண்டு வரும் தன் நண்பர்களின் உணவில் பங்கு வாங்கி உண்டு காலம் கழித்தது.

சோம்பேறியாகிவிட்ட தங்களது நண்பனைத் திருத்துவதற்காக புதிய முடிவு ஒன்றை செயலாக்க நினைத்தன. அதன்படி ஒவ்வொருவரும் தனித் தனியாக மரக்கன்றுகளை நட்டு வளர்த்து அதன் மூலம் கிடைப்பவற்றை உணவாகக் கொண்டு வாழ்வது என தீர்மானம் செய்தன.

தாங்கள் செய்த முடிவின்படி, அணில் வனிதா மாங்கன்று ஒன்றையும், குரங்கு ஜெகதா வாழைக்கன்று ஒன்றையும், கிளி பாப்பம்மா கொய்யா மரக்கன்றையும் நட்டு வளர்க்கத் துவங்கின.

பருந்து கருங்காலன் எப்போதும் தூங்கிக் கொண்டிருந்தது. சின்னவள் சிட்டுக் குருவி சிங்காரிக்கோ தான் எதை வளர்ப்பது என புரியாததால் அங்குமிங்குமாக அலைந்து திரிந்தது.

எதுவும் செய்ய இயலாத தன் நிலையை நண்பர்களிடம் சொல்ல வெட்கப்பட்ட சிங்காரி சிட்டுக்குருவி தனக்கும் நல்ல மரக்கன்று கிடைக்கும் வரை தன் நண்பர்களைக் காண்பதில்லை என முடிவு செய்தது.

தனக்கேற்ற மரம் எங்குள்ளது என அங்குமிங்குமாக அலைந்து திரிந்த சிட்டுக்குருவி கண்ணில் கண்ட அனைவரிடமும் தனக்கு உதவுமாறு கேட்டது. தன் எதிரே வந்த யானையாரை சிட்டுக் குருவி வழிமறித்தது.

“பானை உடல் கொண்டவரே

பருத்த யானை நல்லவரே

தூணைப் போன்ற காலுமக்கு

நானும் வளர்க்க ஏற்றமரம்

எதுதான் என்றே சொல்வீரா?

வனிதா அணிலோ மாங்கன்றை

வளர்த்து வரத்துவங்கியது

குரங்கு ஜெகதா தனக்காக

குலைதரும் வாழை வளர்க்கிறது

பாவம் நானும் வளர்ப்பதற்கு

பக்குவமான மரம் எதுவோ?”

பரபரப்பாக சென்று கொண்டிருந்த தன்னை வழிமறித்ததும் இல்லாமல் தன்னை தொந்தரவு செய்யும் சிட்டுக் குருவியை கோபத்துடன் பார்த்த யானை தனக்கு அதிக வேலையிருப்பதாக சொல்லிவிட்டு வேகமாக நடக்கத் துவங்கியது.

 

ஏமாற்றமடைந்த சிட்டுக்குருவி சிங்காரி சோகமாக நடந்து சென்றபடி இருந்தது. அப்போது அந்த வழியே வந்த கருவண்டு ரீங்காரனைக் கண்டது.

“கானம் பாடும் வண்டண்ணா

கறுத்த நிறம் உனக்கண்ணா

நான்தான் சிட்டுக்குருவிண்ணா

எனக்கு கொஞ்சம் உதவண்ணா

வனிதா அணிலவள் மாங்கன்று

வளர்ந்த வாழை ஜெகதாவும்

கொய்யா மரம் பாப்பம்மா

என்றே வளர்ந்து வருகிறது

எனக்கு ஏற்ற மரம் ஒன்றை

நீயும் சொல்லிச் செல்லண்ணா”
என சிட்டுக் குருவி கேட்டது. அதற்கு மறுமொழியாக

 

“சிட்டுக்குருவி சின்னவளே

சிறகில் அழகைக் கொண்டவளே

எட்டி வளர்ந்த மூங்கில்போல்

ஏற்ற மரம் ஏதம்மா

அந்த மூங்கில் துளைத்தேதான்

இனிய கீதம் நான் தருவேன்

நீயும் என்போல் மூங்கில் தேடி

நன்றாய் வளர்த்து வரலாமே!”

என கருவண்டு ரீங்காரன் சொன்னதைக் கேட்ட சிட்டுக்குருவி யோசித்தது.

மூங்கில் மரத்தால் தனக்கு என்ன பயன் உண்டாகும் என பல முறை யோசித்தும் விடை கிடைக்காததால் ரீங்காரன் வண்டின் யோசனையை கைவிட்டது.

மீண்டும் கவலையுடன் நடந்து சென்ற சிட்டுக்குருவி சிங்காரி அங்கு ஓரிடத்தில் மேய்ந்து கொண்டிருந்த வெள்ளாடு ஒன்றைக் கண்டது. மகிழ்வுடன் தலையை ஆட்டியபடி மேய்ந்து கொண்டிருந்த வெள்ளாட்டின் அருகில் சென்ற‌ சிட்டுக் குருவி அதனை அழைத்தது.

“பச்சைப் புல்லில் பசி தீர்க்கும்

பாசம் கொண்ட வெள்ளாடே

இச்சை கொண்டு நானுமிங்கு

வளர்க்க ஏற்ற மரம் சொல்லேன்

வனிதா வளர்ப்பது மாங்கன்று

ஜெகதா வாழை வளர்க்கின்றாள்

கிளியின் மரமோ கொய்யாவாம்

சரியாய் நானும் எதை வளர்க்க

சட்டென பதிலைச் சொல்வாயா?

என கேட்டதும் நுனிப் புல் மேய்ந்து பழக்கப்பட்ட வெள்ளாடு தன் அனுபவத்திற்கேற்றபடி பதில் கூறியது.

 

“கொய்யா மா, வாழையெல்லாம்

கொஞ்ச நாள் தான் பயன்படுமாம்

எல்லா நாளும் நமக்குணவை

இந்தப் புல்தான் தந்திடுமாம்

புல்லைப்போல இப்புவியில்

உயர்ந்தது எதுவும் கிடையாதே!

சிட்டுக்குருவி நீயும் தான்

சிறந்த புல்லை வளர்த்திட்டால்

செழிப்பாய் உடனே அதுவளரும்

சிறந்த உணவை உனக்குத் தரும்”

என்று தனக்குப் பிடித்தமான புல்லை வளர்ப்பதுதான் சிறந்தது என பேசிய வெள்ளாட்டின் யோசனையை சிந்தித்த சிட்டுக்குருவிக்கு அது தவறு என புரிந்தது. புல்லை வளர்ப்பதால் தனக்கு பலனில்லை என முடிவு செய்து கொண்டு அதைக் கைவிட்டது.

 

மேலும் யாராவது எதிர்ப்படுவார்களா? என எதிர்பார்த்தபடி சென்று கொண்டிருந்த சிங்காரி சிட்டுக் குருவிக்கு அந்த வளர்ந்த இலவ மரத்தைக் கண்டதும் சந்தோஷம் உண்டானது.
தான் இதுவரை தேடியலைந்தது வீண்போகவில்லை என தனக்குள்ளாக பேசிக் கொண்டது.

ஏராளமான காய்களுடன் கிளைகள் பரவி நின்ற இலவ மரம் தனக்குப் பல நாள் உணவினைக் கொடுக்கும் என எண்ணியது. சிங்காரிக்கு மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போனது.
விரைந்து சென்ற அது இலவ மரத்திடம் கேட்டது.

“இலவ மரமே இலவ மரமே இந்தச் சின்னவளான சிங்காரிக்கு உன்னால் ஓர் உதவி செய்ய இயலுமா?” என்றது

சிங்காரி சிட்டுக் குருவிக்கு இலவ மரம் பதிலேதும் சொல்லாமல் மௌனமாக நின்றது. அதைக் கண்ட சிட்டுக் குருவி மீண்டும் பேசலானது.

“ஒன்றாய் உண்டு

நன்றாய் உறங்கி

நன்றாய் வாழ்ந்த

நண்பர்களில்

வனிதா வளர்த்தது மாங்கன்று

ஜெகதா குரங்குக்கு வாழை மரம்

கிளியோ வளர்த்தது கொய்யாவாம்

எனக்கு ஏற்ற மரம் தேடி

இக்காடு முழுதும் அலைந்தேன் நான்

இன்று உன்முகம் கண்டேன் நான்

எந்தன் பசிக்கு உணவாக

ஏற்ற காய்கள் உன்னிடத்தில் உள்ளதால் நீயும் உணவிடலாம்

உடனே சம்மதம் சொல்வாயா?”
என்றது.

 

சிட்டுக் குருவியின் ஆசையை முழுவதுமாக கேட்ட இலவமரம் இப்போது பேசியது. “சிட்டுக் குருவி சின்னவளே, உனக்கு உதவிட எனக்கும் ஆசை தான். ஆனாலும் என்னால் இயலாது. எந்தன் காய்கள் பழுத்தால் காய்ந்த இலவங் கூடுகளாகுமே தவிர உன் பசிக்கு உணவாகாது.

பாவம் நீ இலவு காத்த கிளியின் கதையை அறியவில்லை போலும்” என்று தான் உதவ இயலாத நிலையைக் கூறியது. கேட்ட சிங்காரி சிட்டுக் குருவிக்கு மீண்டும் மனச் சோர்வு உண்டானது.
சோர்வின் காரணமாக அந்த இலவ மரத்தடியிலேயே அமைதியாக அமர்ந்து தலை குனிந்து யோசித்தது.

 

சிங்காரி சிட்டுக்குருவியின் நிலையைக் கண்ட இலவமரம் இப்போது தானாகப் பேசியது.

“சிட்டுக் குருவி சின்னவளே

சோகம் வேண்டாம் நல்லவளே

உந்தன் பசிக்கு உணவை நான்

உருவாக்கித் தந்திட இயலாது

அங்கேயுள்ள மரத்தைப்பார்

அதிலே தொங்கும் காய்களைப் பார்

அதனைக் கொடிக்காய் என்றழைப்பர்

அதன்கனி உண்டிட ஏங்கிடுவர்

ஆனால் சிறிய முட்களைத்தான்

அளவுக் கதிகம் கொண்ட தம்மா

நீயும் சென்று அதன் கனியை

உண்டு பசியை ஆற்றிக்கொள்”

என்று சிங்காரிக்கு அருகிலிருந்த கொடிக்காய் மரத்தைக் காட்டி வழியனுப்பி வைத்தது.

 

உடனே மகிழ்ச்சியுடன் எழுந்த சிட்டுக்குருவி விரைந்து சென்று அந்த மரத்தை அடைந்தது. தன் நிலையை எடுத்துரைத்தது. சிட்டுக் குருவி சிங்காரியின் கனிவான பேச்சில் மயங்கிய முட்களைக் கொண்ட கொடிக்காய் மரம் மனமுவந்து உதவி ஒப்புக் கொண்டதுடன் சிங்காரியின் களைப்புத் தீர தன் கனிகளை உணவாக கொடுத்தது.

தன் வயிறார கொடிக்காய் கனிகளை உண்ட சிட்டுக்குருவிக்கு தன் நண்பர்களிடம் தன்னுடைய மரத்தின் கனிகளைக் கொண்டு சென்று காண்பித்து அவர்களுக்கு அதை உணவாகத் தரவேண்டும் என்ற ஆசை உண்டானது.

நன்கு கனிந்த கனிகளைப் பறித்து தோலுரித்து வெள்ளை நிற கனியினுள் இருந்து விதைகளை நீக்கிவிட்டு தன் சிறகு நிறைய அடைத்துக் கொண்டு பறக்கலானது.

இதனிடையே வழக்கம் போல் எந்த உழைப்பும் இல்லாத பருந்து கருங்காலனுக்கு நண்பர்களான கிளி பாப்பம்மா, ஜெகதா குரங்கு, அணில் வனிதா ஆகியோர் உணவு தர மறுத்துவிட்டன. அதனால் கோபம் கொண்ட கருங்காலன் பருந்து அவர்கள் மூவரிடமும் சண்டை போட்டு கோபத்துடன் அந்த வழியே பறந்து வந்து கொண்டிருந்தது.

சிறகு நிறைய கொடிக்காய் கனிகளுடன் சிட்டுக்குருவி சிங்காரியும் வெறுப்புடன் விரைந்து வந்த கருங்காலன் பருந்தும் நடுவழியே சந்தித்துக் கொண்டன.

ஒன்றும் அறியாத அப்பாவியான சிட்டுக் குருவி தான் தேடித்திரிந்து கொடிக்காய் மரத்தை அடைந்து அதன் கனிகளை கொண்டு வந்ததை பருந்திடம் கூறியது.

ஏற்கனவே நண்பர்கள் மீது கோபத்துடன் இருந்த பருந்து தன் இயல்பான குண இயல்பின்படி சிங்காரியிடம் இருந்த கொடிக்காய்களைப் பறித்துக் கொண்டு வானத்தை நோக்கி விரைந்து பறந்தது.

திடீரென நடந்து விட்ட இந்தச் செயலால் சிறிது நேரம் திகைத்து நின்ற சிட்டுக் குருவி தன் நண்பர்களான அணில், குரங்கு, கிளி ஆகியோரை உதவிக்கு அழைத்தது.
கிளி பாப்பம்மா, சிங்காரி சிட்டுக்குருவியை அழைத்துக் கொண்டு வானம் நோக்கி பறந்து சென்ற பருந்து கருங்காலனைத் துரத்திச் சென்றது.

இதற்குள்ளாக சூரியன் மறைந்து வானம் இருட்டத் தொடங்கியது. இருட்டில் கண் தெரியாததாலும் வேகமாக பறந்து கொண்டு வந்ததாலும் தனக்கெதிராக இருந்த பெரிய மேகக் கூட்டத்தை பருந்து கருங்காலன் கவனிக்கவில்லை.

வந்த வேகத்தில் மேகத்தின் மீது கருங்காலன் மோத அதன் கையிலிருந்த கொடிக்காய்கள் விண்ணில் சிதறி ஓடின.

பாவம் அவற்றை ஒவ்வொன்றாக எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது பருந்து கருங்காலன். தரையில் பருந்து கருங்காலனை எங்கு கண்டாலும் நண்பர்கள் துரத்த ஆரம்பித்தனர்.
பருந்து கருங்காலனின் கையிலிருந்து சிதறிய கொடிக்காய்களோ நாளடைவில் நட்சத்திரங்களாக மாறி இருளில் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)