விவசாய பழமொழிகள் விளக்கத்துடன்

விவசாய பழமொழிகள் நம் நாட்டில் பல உள்ளன.  அவை விளக்கத்துடன் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. 

குறைந்த சொற்களில் நிறைந்த பொருள் தரும் அத்தகைய விவசாய பழமொழிகள் சிலவற்றைப் பார்ப்போம்.

 

தவளை கத்தினால் தானே மழை

மழைக்கான அறிகுறிகள் உண்டாகும் போதுதான் தவளைகள் பொதுவாகக் கத்தும். இதனைத் தான் தவளை கத்தினால், தானே மழை என்றனர்.

 

அந்தியில் ஈசல் பூத்தால் அடைமழைக்கு அச்சாரம்

மாலை வேளையில் ஈசல்கள் நிறைய பறந்தால் தொடர்ச்சியாக நீண்ட நேரம் மழை பெய்யும்.

 

தும்பி எட்ட பறந்தால் தூரத்தில் மழை.

தும்பி கிட்டப் பறந்தால் பக்கத்தில் மழை.

தட்டான் உயரமாகப் பறந்தால் தூரமாக மழை பெய்யும்.

தட்டான் தாழ்வான உயரத்தில் பறந்தால் அருகில் மழை பெய்யும்.

 

எறும்பு திட்டை ஏறில் பெரும் புயல்.

எறும்பு உயரமான இடத்திற்கு வாயில் முட்டையை கவ்விக் கொண்டு கூட்டமாகச் சென்றால் கட்டாயம் பெரும் புயல் வரும்.

 

மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.

மார்கழி மாதத்தில் பயிர்கள் அறுவடைக்கு தயாராயிருக்கும். அப்போது தண்ணீர் தேவை இருக்காது. அப்போது மழை பெய்வது பயிர் விளைச்சலை பாதிக்கும். எனவே மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.

 

தை மழை நெய் மழை

நெய்யானது சிறிதளவு ஊற்றினால் உணவு ருசிக்கும். அதே போல் தை மாதத்தில் பெய்யும் சிறிதளவு மழையானது வேளாண்மையை மணக்கவே செய்யும்.

 

தைப் பனி தரையை துளைக்கும். மாசிப்பனி மச்சை பிளக்கும்.

தை மாதப்பனியானது தரையை துளைக்கும் அளவுக்கு இருக்கும். மாசி மாதப்பனி உள்வீட்டிற்குள்ளும் குளிரும் அளவு இருக்கும். மச்சி வீடு என்பது பழங்காலத்தில் நீளமான நெட்டு வீடுகளில் கடைசியில் இருக்கும் அறையைக் குறிக்கும்.

 

தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு

தை மற்றும் மாசி மாதங்களில் குளிர் அதிகமாக இருக்கும். ஆதலால் கூரை உள்ள வீடுகளில் உறங்க வேண்டும். திறந்த வெளியில் உறங்கக் கூடாது.

 

புத்து கண்டு கிணறு வெட்டு

கரையான் புற்றானது நிலத்தடி நீர் இருக்கும் இடங்களில்தான் பொதுவாக அமைந்திருக்கும். எனவேதான் புற்று இருக்கும் இடங்களில் கிணறு வெட்டினால் தண்ணீர் கிடைக்கும்.

 

வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய்

பள்ளத்திலேயே தண்ணீர் தங்கும். வெள்ளம் சூழும் என்றாலும் பள்ளமான இடத்தில் பயிர் செய்தால் பயிருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்.

 

காணி தேடினும் கரிசல்மண் தேடு.

சிறிய அளவு நிலம் வாங்கும்போது நீரினைத் தேக்கும் தன்மை உடைய வேளாண்மைக்கு ஏற்ற, கரிசல் மண் உள்ள நிலமாக வாங்குவது சிறந்தது.

 

களர் கெட பிரண்டையைப் புதை

களர் நிலத்தினை சீராக்க பிரண்டையை அந்நிலத்தில் புதைத்து வைக்க வேண்டும்.

 

கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி.

கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு.

வளமில்லாத நிலத்துக்கு வன்னி மரங்களை நட்டால் நிலம் வளமாகும். அதே போல் வறுமை மிக்க குடும்பத்திற்கு வெள்ளாடுகளை வளர்த்தால் வறுமை நீங்கும்.

 

நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை, கடைநிலம் எருக்கு.

நல்ல நிலத்தில் கொழுஞ்சி விளையும். நடுத்தர வளமான நிலத்தில் கரந்தை விளையும். தரமற்ற நிலத்தில் எருக்கச் செடி விளையும். எனவே ஒரு நிலத்தின் வளமையை அந்நிலத்தில் இருக்கும் தாவரங்களை வைத்து அடையாளம் கண்டு கொள்ளலாம்.

 

நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய்.

ஓரிடத்தில் வேளாண்மைக்கு தேவையான நீரும், வளமையான நிலம் இருந்தாலும், காலநிலையை கணக்கில் கொண்டே வேளாண்மை செய்ய வேண்டும்.

 

ஆடிப்பட்டம் பயிர் செய்.

ஆடி மாதத்தில் செய்யும் பயிரானது நல்ல விளைச்சலைத் தரும். இதனையே ஆடிப்பட்டம் பயிர் செய் என்றனர்.

 

விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.

பருவ மழை பெய்யாவிட்டால் பயிர் விளைச்சல் இருக்காது.

 

மழையடி நஞ்சை, மதகடி புஞ்சை.

மழை நீரை மட்டும் நம்பி இருக்கும் இடங்களில் நஞ்சை பயிர்களை பயிர் செய்யவும். மழை நீரை சேமித்து வைத்திருக்கும் கண்மாய், ஏரிகள் ஆகியவற்றின் மடைக்கு அருகில் இருக்கும் நிலங்களில் புஞ்சைப் பயிர்களை பயிர் செய்யலாம்.

 

களரை நம்பிக் கெட்டவனும் இல்லை. மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை.

களர் நிலமானது தண்ணீரை தேக்கி வைக்கும் தன்மை கொண்டது. மணலானது தண்ணீரை வடித்து விடும் தன்மை உடையது. அதனால் களர் நிலத்திற்கு ஏற்ற பயிரை பயிர் செய்தவன் ஏமாற மாட்டான். மணலில் பயிர் செய்தால் விளைச்சல் நன்றாக இருக்காது.

 

உழவில்லாத நிலமும் மிளகில்லாத கறியும் வழவழ.

மிளகு சேர்க்காத குழம்பு எப்படி பலன் இல்லாது போகுமோ அது போல உழவில்லாத நிலம் பலன் தராது.

 

அகல உழுவதைவிட ஆழ உழுவது மேல்.

வேளாண்மைக்கு நிலத்தை தயார் செய்யும்போது அகலமாக உழுவதைத் தவிர்த்து ஆழமாக உழ வேண்டும்.

 

புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு.

புஞ்சை நிலத்தைவிட நஞ்சைக்கு உழவு செய்யும்போது மண்ணானது நன்றாக சந்தனம் போல் மையாக இருக்குமாறு உழவ வேண்டும்.

 

குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை.

எரு இடப்படாத வேளாண்மை பயன் தராது.

 

ஆடு பயிர் காட்டும். ஆவாரை கதிர் காட்டும்.

ஆட்டுச் சாணம் பயிரை வளரச் செய்யும். ஆவாரை உரம் பயிரில் தானிய முதிர்ச்சியை உண்டாக்கும்.

 

கூளம் பரப்பி கோமியம் சேர்.

கூளம் எனப்படும் சிதைந்த வைக்கோல் கழிவுகளை பரப்பி வைத்து அதன்மீது கோமியத்தை தெளித்தால் உரம் விரைவில் சத்தானதாக மாறும்.

 

ஆற்று வண்டல் தேற்றும் பயிரை.

ஆற்று வண்டலானது வளமானதாக உள்ளதால் அது பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

 

நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.

பசுந்தாள் உரப்பயிர்களை வளர்த்து பின் அதனை மடக்கி உழுது நிலத்தின் வளத்தை அதிகரிக்கும்.

 

காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்.

பயிருக்கு தினமும் தண்ணீர் விடக்கூடாது. தண்ணீர் பாய்ச்சி நிலம் காய்ந்தபின் மீண்டும் தண்ணீர் விடவேண்டும்.

 

தேங்கிக் கெட்டது நிலம்; தேங்காமல் கெட்டது குளம்.

நிலத்தில் நீர் தேங்கினால் பயிர் செழித்து வளராது. குளத்தில் தண்ணீர் தேங்காவிடில் பயிர்கள் வாடும்.

 

கோரையைக் கொல்ல கொள்ளுப்பயிர் விதை.

களைப்பயிரான கோரையின் வளர்ச்சியை தடை செய்ய கொள்ளுப்பயிரினை பயிர் செய்யவும்.

 

சொத்தைப் போல் விதையைப் பேண வேண்டும்.

வேளாண்மை செய்பவர் தன்னுடைய சொத்துகளைப் பாதுகாப்பது போல் விதைகளைப் பாதுகாக்க வேண்டும்.

 

பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு.

சரியன பருவத்தில் பயிரினை பயிர் செய்ய வேண்டும்.

 

ஆடி ஐந்தில் விதைத்த விதையும், புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர் வைத்த தனம்.

ஆடி ஐந்தாம் தேதி விதைக்க வேண்டும். புரட்டாசி பதினைந்தாம் தேதி நடவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நம் முன்னோர்களின் சொத்து போன்று அது பலன் தரும்.

 

கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும். அடர விதைத்தால் போர் உயரும்.

விதைகளை இடைவெளி விட்டு விதைத்தால் விளைச்சல் பெருகும்.  அதனால் தானியங்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் களஞ்சியம் நிறையும். நெருக்கி விதைத்தால் விளைச்சல் பயன் தராது. அதனால் வெறும் வைக்கோல் மட்டும் கிடைக்கும். இதனால் வைக்கோல் போர் உயரும்.

 

விவசாய பழமொழிகள் படிப்போம். அவை தரும் பாரம்பரிய அறிவைப் பாதுகாப்போம்.

 

One Reply to “விவசாய பழமொழிகள் விளக்கத்துடன்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.