எங்கள் வீடு – சிறுகதை

எங்கள் வீடு, எங்கள் குடும்பத்தின் முக்கிய அடையாளம். ‘காரை வீட்டுக்காரங்க’ என்றே எங்களை ஊரில் அழைப்பர்.

இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே, எங்கள் முன்னோர்கள் வீட்டின் கூரையை காரை மற்றும் தேக்கங்கட்டையால் கட்டியுள்ளனர்.

பூவானி கிராமத்தில் எங்கள் குடும்பம் ஓரளவு வசதி படைத்தது. அப்பா பக்கத்து டவுனில் ஷாப் கடை வைத்திருந்தார். சோப், பேஸ்ட், ஹார்லிக்ஸ், பூஸ்ட் என பல்வேறு பொருட்களுக்கான மாவட்ட ஏஜென்ஸி அப்பாவின் வசம் இருந்தது.

வடக்குப் பக்கம் தலைவாசலைக் கொண்டுள்ள எங்கள் வீட்டில் தாழ்வாரம், நடுஅறை, சமையல் அறை மற்றும் மச்சி அறை என நான்கு அறைகள் நீளவாக்கில் அமைந்திருந்தன.

நான் ஆறாம் வகுப்பு செல்லும் போது படிப்பதற்காக வீட்டின் வலதுபுறத்தில் இருந்த மல்லிகைச் செடிகளை அகற்றிவிட்டு எட்டுக்கு பத்து அடி அகலத்தில் படிப்பறை ஒன்றை அப்பா கட்டினார். அதற்கு வீட்டின் வராந்தாவில் இருந்து உள்ளே செல்லும்படி வாயிலையும் அமைத்திருந்தார்.

அப்போதிருந்து நான், தம்பி, தங்கை மூவரும் அந்த அறையில் இருந்து படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டோம்.

முன்பிருந்தே எங்கள் வீட்டுச் சமையலறையில் மேஜை விறகு அடுப்பு இருந்தது என்பதைப் பெருமையாக என்னுடைய பாட்டி அடிக்கடி கூறுவார்.

“மேஜை விறகு அடுப்புன்னா என்ன? அதுல என்ன பெருமை இருக்கு?” என்று நாங்களும் ஓயாது பாட்டியிடம் கேட்போம்.

“அதுவாடா, முந்தி காலத்து வீடுகள்ல தரையில உக்காந்துதான் சமைப்பாங்க. அதனால அடுப்ப தரையில பதிச்சுருப்பாங்க. ஆனா நம்ம வீட்ல புதுமையா நின்னுக்கிட்டே சமைக்கிற மாதிரி, திண்ட உயர்த்தி அதில அடுப்ப பதிச்சுருந்தாங்க.” என்று சிரிப்பார். அந்தச் சிரிப்பிலும் பெருமிதம் வழியும்.

கேஸ் அடுப்பு பிரபலமாக பயன்படுத்த ஆரம்பித்த சமயத்தில், மேஜை விறகு அடுப்பில் அடுப்பிற்கு வெளியே நீண்டிக் கொண்டிருந்த சமதளப்பரப்பில் கேஸ் அடுப்பை வைத்து பயன்படுத்த ஆரம்பித்தார் என்னுடைய அம்மா.

“நம்ம மூத்தவங்க வழிவழியாக சமைச்ச இடத்தை இடிக்க விருப்பமில்லை” என்று காரணம் சொல்லுவார்.

தண்ணீர் பானை, குடம் வைக்க அடுப்பிற்கு அடுத்தாற்போல் திண்டினையும், சமையல் பாத்திரங்களை அடுக்க அலமாரியையும் அக்காலத்திலேயே அமைந்திருந்தனர்.

விசாலமான காற்றோட்டமான சமையலறையிலேயே நாங்கள் அமர்ந்து உண்பது வழக்கம்.

மச்சி அறைக்குள்ளேதான் பழங்காலத்து இரும்புப் பெட்டி இருக்கும். அப்பெட்டியை அசையாதவாறு தரையில் பதித்திருப்பர். தாத்தா காலத்திலிருந்தே அப்பெட்டியினுள்தான் பணம் புழக்கம் இருந்து வந்தது.

மச்சி அறை குளிர் காலத்தில் கதகதப்பாகவும், வெயில் காலத்தில் குளுமையாகவும் இருப்பது ஆச்சர்யம்தான். நாங்கள் சிறுவயதில் மச்சியறையில்தான் தூங்குவோம்.

வளர்ந்து பெரியவர்களானதும் நான், தம்பி, அப்பா நடுஅறையிலும், அம்மா, தங்கை மச்சியறையிலும் தூங்குவதை வழக்கமாக்கினோம்.

இவ்வாறு வீடும், வீட்டின் ஒவ்வொரு அறைகளும் எங்களின் நினைவுகளில் நீங்காது இருக்கும் பெருமைகளைப் பெற்றிருந்தன.

நானும் தம்பியும் படித்து கணினித்துறையில் மென்பொறியாளர்களாக சென்னையில் பணியாற்றி வருகையில், அப்பா முதல் மாடியில் இரண்டு அறைகளை அமைத்தார்.

“வருங்காலத்துல குடும்பத்தோடு மூன்று பிள்ளைகளும் வருகையில் தங்குவதற்கு வசதியாக இருக்கும்.” என்று சொன்னார் அப்பா.

வருடந்தோறும் திருவிழா சமயங்களில் குடும்பத்தோடு பூவானி வருவதற்கு நான், தம்பி, தங்கை மூவரும் தவறுவதில்லை. அச்சமயங்களில் அப்பாவும், அம்மாவும் பேரப்பிள்ளைகளிடம் வீட்டின் பெருமைகளைக் கதைகதையாகக் கூறிச் சிலாகிப்பர்.

ஒருநாள் திடீரென அம்மா போன் செய்தார். போனில் அம்மாவின் அழுகுரல் என்னை திடுக்கிடச் செய்தது. என்னவென்று விசாரித்தபோது, நான்கு வழிச் சாலை பணிக்கு எங்கள் வீடிருக்கும் நிலம் தேவைப்படுவதால், வீட்டினை இடிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளதாக அழுதபடி கூறினார்.

எனக்கு திக் என்றிருந்தது. தலை சுற்றியது. சமாளித்துக் கொண்டு ஊரில் உள்ள நண்பர்களிடம் கேட்டதில், பூவானி ஊரின் முக்கால் பாகம் நான்கு வழிச் சாலை பணிக்கு கையகப்படுத்தப்பட்டு, இழப்பீட்டு தொகையை அரசாங்கம் வழங்கப் போவதாகத் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரியும் கல்லூரி நண்பர் ஒருவரிடம் விசாரித்ததில், இன்னும் இரண்டு வாரங்களில் பூவானியில் பணி தொடங்க இருப்பதால் களத்தினை சுத்தப்படுத்தும் பணி அடுத்த வாரம் தொடங்க இருப்பதாகக் கூறினார்.

இரவோடு இரவாக பூவானிக்கு கிளம்பி அதிகாலையில் வீட்டின் முன்பு காரை நிறுத்தினேன். வீடு ரம்மியமாக நின்றிருந்தது.

நான் இவ்வீட்டில் ஓடியாடி விளையாடி வளர்ந்தது நினைவிற்கு வந்தது. அதனை இடிப்பதை என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. என்னையும் அறியாமல் கண்களில் நீர் அரும்பியது.

வீட்டிற்குள் சென்று அம்மா அப்பாவிடம் விசாரித்த விவரங்களைக் கூறினேன். “அடுத்த வாரம் இந்நேரம் நம் வீடு இருக்காது. அப்படித்தானே?” என்றார் அப்பா.

“உங்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்னை செல்லவே வந்தேன். முக்கியமான பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். இன்னும் இரண்டு நாட்களில் புறப்படுவோம்” என்று பேச்சை மாற்றினேன்.

அப்பாவும், அம்மாவும் சென்னை வர சம்மதிக்கவில்லை. எப்படியோ கெஞ்சி கூத்தாடி அவர்களை சம்மதிக்கச் செய்தேன். வீட்டுப் பொருட்களை எல்லாம் கட்டி எடுத்து தோட்டத்து வீட்டில் போட்டுவிட்டு, இரண்டு நாட்கள் கழித்து சென்னைக்கு புறப்பட்டோம்.

இரண்டு வாரங்கள் கழித்து கடையைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று கூறி சென்னையிலிருந்து அப்பா புறப்பட்டுச் சென்றார்.

மறுநாள் மதிய வேளையில் ஊர் நண்பன் ஒருவனிடமிருந்து போன் வந்தது. அப்பா வீடு இருந்த இடத்தில் கையில் போட்டா ஒன்றுடன் விழுந்து கிடப்பதாகக் கூறினான். உடனே அப்பாவை பக்கத்து டவுனில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லச் சொன்னேன்.

மனைவிக்கு தகவல் தெரிவித்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு பூவானிக்குப் புறப்பட்டேன். போகும் வழியில் நண்பனைத் தொடர்பு கொண்டேன். டாக்டர் வந்து பரிசோதித்துவிட்டு ஊசி போட்டதால் அப்பா தூங்கிக் கொண்டிருப்பதாக நண்பன் சொன்னான்.

அவ்வப்போது அப்பாவின் உடல்நிலை பற்றி நண்பனிடம் விசாரித்தபடியே என்னுடைய பயணத்தைத் தொடர்ந்தேன்.

அப்பா இருந்த மருத்துவமனைக்கு சென்று அப்பாவைப் பார்த்த போது கையில் போட்டாவுடன் கட்டிலில் உட்கார்ந்து தனக்குள் பேசிக் கொண்டிருந்தார்.

“அப்பா, அப்பா’ என நான் அழைத்ததும் நிமிர்ந்து என்னைப் பார்த்துவிட்டு ஏதும் பேசாமல் மீண்டும் போட்டாவைப் பார்க்கத் தொடங்கினார்.

அப்போது அங்கு வந்த என் நண்பன் “இடித்து தரைமட்டமாக்கிய உங்க வீட்டைப் பார்த்ததும் அதிர்ச்சியில் அப்பா மயங்கி விட்டார். இங்கு வந்து சேர்த்து சிகிக்சைக்குப் பின் கண்விழித்தபோதுதான் அவர் ஞாபகத்திறனை இழந்து விட்டதை டாக்டர் கண்டுபிடித்தார். தற்போது நடக்கும் ஏதும் உங்கப்பாவிற்கு நினைவில் இல்லை.” என்றான் வருத்தமாக.

அதிர்ச்சியில் உறைந்த நான் சிறிது நேரம் கழித்து உணர்வு வந்ததும் அப்பாவைப் பார்த்தேன். இன்னும் அவர் போட்டோவையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்படி என்னதான் அந்த போட்டாவில் இருக்கிறது என்ற எண்ணத்தில் அப்பாவின் பின்னால் சென்று பார்த்தேன்.

மாடியில் இரண்டு அறைகளையும் கட்டிய பின்பு, ஒருநாள் இரவு எங்கள் வீட்டை நான் எடுத்த போட்டோ. அதில் எங்கள் வீடு கம்பீரமாக சிரித்தபடி இருந்தது.

பாராம்பரியமான வீட்டை போட்டோவில் மட்டும் பார்க்கும்படி ஆகிவிட்டதே என்று மனதினுள் மருகினேன்.

வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.