வெங்காயச் சட்னி செய்வது எப்படி?

வெங்காயச் சட்னி உடனடியாகச் செய்யக் கூடிய சட்னி ஆகும். இதனை தயார் செய்ய சிறிது நேரமே ஆகும்.

மிகக்குறைவான நேரத்தில் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதனை திடீர் விருந்தினர் வருகையின் போதும் செய்து அசத்தலாம்.

இது இட்லி, தோசை, ரவா தோசை, சப்பாத்தி, தயிர் சாதம் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

இனி அசத்தலான சுவையில் இருக்கும் வெங்காயச் சட்னி செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – 2 எண்ணம் (நடுத்தரமானது)

கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 6 எண்ணம்

வெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (பெரியது)

புளி – 1 & 1/2 இன்ச் அளவு

கறிவேப்பிலை – 2 கீற்று

நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க

நல்ல எண்ணெய் – 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கீற்று

கடுகு – 1/2 டீஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

பெருங்காயம் – 1/8 டீஸ்பூன்

செய்முறை

பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

மிளகாய் வற்றலை காம்பு நீக்கிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசிக் கொள்ளவும்.

வெள்ளைப் பூண்டினை தோலுரித்துக் கொள்ளவும்

வாணலியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் நல்ல எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் கடலைப் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்ததும்
கடலைப் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்ததும்
வறுக்கும்போது
வறுக்கும் போது

பின்னர் அதே வாணலியில் மிளகாய் வற்றலைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

மிளகாய் வற்றலை வதக்கும் போது
மிளகாய் வற்றலை வதக்கும் போது

மீண்டும் வாணலியில் ஒரு ஸ்பூன் நல்ல எண்ணெய் சேர்த்து 2 கீற்று கருவேப்பிலை சேர்த்து 10 நொடிகளில் நறுக்கிய வெங்காயம் மற்றும் வெள்ளைப் பூண்டு சேர்த்து வெங்காயம் கண்ணாடிப் பதத்திற்கு சற்று முன்பு வரை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

கறிவேப்பிலையைச் சேர்த்ததும்
கறிவேப்பிலையைச் சேர்த்ததும்
வெங்காயம், பூண்டு சேர்த்ததும்
வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்ததும்

வெங்காயத்தை அடுப்பிலிருந்து இறக்கும் முன்பு அதனுடன் புளி சேர்த்து 20 நொடிகள் வதக்கிக் இறக்கிக் கொள்ளவும்.

புளி சேர்த்ததும்
புளி சேர்த்ததும்

வதக்கிய பொருட்களை ஆற விடவும்.

பின்னர் வதக்கிய பருப்பு மற்றும் மிளகாய் வற்றலை மிக்ஸியில் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.

அதனுடன் வதக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றுடன் தேவையான தண்ணீர் சேர்த்து விழுதாக்கி எடுத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதனுடன் கடுகு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து விழுதில் சேர்க்கவும்.

சுவையான வெங்காயச் சட்னி தயார்.

வெங்காயச் சட்னி
வெங்காயச் சட்னி

குறிப்பு

வெங்காயச் சட்னி செய்ய ரோஸ், வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம் கொண்ட பெரிய வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

விருப்பமுள்ளவர்கள் மிளகாய் வற்றலுக்குப் பதிலாக பச்சை மிளகாய் சேர்த்து சட்னி தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.