வெங்காய போண்டா செய்வது எப்படி?

வெங்காய போண்டா மாலை நேரத்தில் டீ, காப்பியுடன் இணைத்து உண்ணக் கூடிய அருமையான சிற்றுண்டி ஆகும். இதனை அனைவரும் விரும்பி உண்பர்.

இதனை எளிதாகவும், சுவையாகவும் வீட்டில் செய்யலாம். திடீர் விருந்தினர்கள் வருகையின் போதும், இதனை வேகமாக சமைத்து உண்ணக் கொடுக்கலாம்.

இனி சுவையான வெங்காய போண்டா செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

போண்டா செய்ய தேவையான பொருட்கள்

 

பெரிய வெங்காயம் – 1/2 கிலோ கிராம்

கடலை மாவு – 8 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2 எண்ணம் (நடுத்தர அளவு)

மிளகு – 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் பொடி – 1/2 ஸ்பூன்

மிளகாய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – 4 கீற்று

பெருஞ்சீரகம் – 3 ஸ்பூன்

இஞ்சி – பெருவிரல் அளவு

கடலை எண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு

வெங்காய போண்டா செய்முறை

முதலில் பெரிய வெங்காயத்தை சுத்தம் செய்து, நீளவாக்கில் மெல்லிதாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை அலசி காம்பு நீக்கி, சிறுதுண்டுகளாக வெட்டவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி நசுக்கிக் கொள்ளவும்.

மிளகினை பொடியாக்கிக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை, தனித்தனியே வருமாறு உதிர்த்து போடவும்.

அதனுடன் நசுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கறிவேப்பிலை, மிளகு பொடி, தேவையான உப்பு, பெருஞ்சீரகம் சேர்த்து பிசைந்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

 

வெங்காயத்துடன் தேவையானவற்றைச் சேர்த்ததும்
வெங்காயத்துடன் தேவையானவற்றைச் சேர்த்ததும்

 

கடலை மாவு, அரிசி மாவு, தேவையான உப்பு சேர்த்து ஒருசேரக் கலந்து கொள்ளவும்.

 

கடலை மாவு, அரிசி மாவு கலவை
கடலை மாவு, அரிசி மாவு கலவை

 

பின்னர் கடலை மாவு கலவையை வெங்காயக் கலவையுடன் சேர்த்து ஒருசேரக் கலந்து, தேவையான தண்ணீர் விட்டு உருட்டும் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

 

வெங்காயக் கலவையுடன் கடலை மாவு கலவையைச் சேர்த்ததும்
வெங்காயக் கலவையுடன் கடலை மாவு கலவையைச் சேர்த்ததும்

 

உருண்டை உருட்டும் பதத்தில் கலவை
உருண்டை உருட்டும் பதத்தில் கலவை

 

வாணலியில் தேவையான அளவு கடலை எண்ணெய் ஊற்றி காய விடவும்.

எண்ணெய் காய்ந்ததும், வெங்காய மாவு கலவையில் சிறிதளவினை எடுத்து உருட்டி, எண்ணெயில் போடவும்.

 

உருண்டையாக உருட்டிய போது
உருண்டையாக உருட்டிய போது

 

உருண்டைகளை எண்ணெயில் போட்டதும்
உருண்டைகளை எண்ணெயில் போட்டதும்

 

உருண்டையின் மேல் தோல் வெந்ததும், கூரிய கம்பியினைக் கொண்டு, உருண்டையை அவ்வப்போது குத்தி பிரட்டி வேக விடவும்.

இவ்வாறு செய்வதால் உருண்டையின் உள்ளே எண்ணெய் சென்று நன்கு வேகும்.

 

கம்பியால் குத்தும் பருவத்தில் உருண்டை
கம்பியால் குத்தும் பருவத்தில் உருண்டை

 

உருண்டையானது நன்கு சிவந்து எண்ணெய் குமிழி அடங்கியதும், உருண்டையை வெளியே எடுக்கவும்.

சுவையான வெங்காய போண்டா தயார்.

 

வெங்காய போண்டா
வெங்காய போண்டா

 

இதனுடன் தேங்காய் சட்னி சேர்த்து உண்ண சுவை மிகும்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மல்லி இலையை சிறிதளவு பொடியாக நறுக்கி, மாவு கலவையில் சேர்த்து போண்டா தயார் செய்யலாம்.

கலவையில் தண்ணீர் சேர்த்து பிசையும் போது, சிறிது சிறிதாக தெளித்து பிசையவும்.

தண்ணீரை குறைவாகச் சேர்த்து கலவையை மிகவும் கெட்டியாகவோ, அதிகளவு தண்ணீரைச் சேர்த்து மிகவும் நெகிழ்த்தியாகவோ இருக்குமாறு பிசையக் கூடாது.

கலவையை உருண்டையாக‌ உருட்டும் அளவிற்கு தண்ணீரைக் கவனமாக சேர்த்து பிசைய வேண்டும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.