வெண்டைக்காய்க்கு எந்த ஊரு? – சிறுவர் கதை

திட்டச்சேரி ஓர் அழகிய கிராமம்.

அந்த கிராமத்தை சுற்றிலும் பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள். ஊரின் இருபுறங்களிலும் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்.

அந்த இயற்கைச் சூழலின் நடுவே காத்தமுத்து தாத்தாவின் வீடு அமைந்திருந்தது.

காத்தமுத்து தாத்தாவுக்கு வயதாகிவிட்டாலும் அவர் ஒரு சிறந்த இயற்கை விவசாயியாக இருந்தார் .

தாத்தாவுக்கு சொந்தமாக ஒரு சிறிய வயல் இருந்தது.

அதில் பாதி நிலத்தில் வீட்டிற்கு தேவையான தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய் என்று பயிர் இட்டு இருந்தார்.

மீதமுள்ள நிலத்தில் தன் வீட்டிற்கு சாப்பாட்டிற்கு தேவையான நெல் நாற்று நடவு செய்திருந்தார்.

தினந்தோறும் காலை நேரங்களில் காத்தமுத்து தாத்தா ஊன்று கோலை எடுத்துக்கொண்டு தன் பேத்தியை ஒரு கையில் பிடித்தபடி நடந்து வயலுக்கு செல்வது வழக்கம்.

அன்றும் அப்படித்தான் பேத்தியை அழைத்துக் கொண்டு சென்றார்.

தன் தோட்டத்தில் பயிரிட்டு இருந்த காய்கறி செடிகளை பார்வையிட்டார்.

இரவு முழுதும் பெய்த மழையினால் தக்காளி செடிகள் பாரம் தாங்காமல் சாய்ந்திருக்க, குச்சிகளை தேர்வு செய்து செடியின் அருகே ஊன்றி சணலால் கட்டினார்.

அப்போது பேத்தி மதிவதனி ஓடிவந்து, “தாத்தா இந்த தக்காளி செடிகள் எல்லாம் அழகா இருக்குது. தக்காளிகளும் காய்ச்சி குலுங்குது. அதனால்தான் கனம் தாங்காமல் சரிஞ்சுரிச்சா தாத்தா”

“ஆமாம்டா கண்ணு” என்று சொல்லிவிட்டு ஒரு பழுத்த தக்காளியை மதிவதனி கையில் பறித்து கொடுத்தார்.

மதிவதனி, “ஐ! தாத்தா இந்த தக்காளி ரொம்ப அழகா இருக்கு. இதோட பிறப்பிடம் எது? என்று தெரியுமா தாத்தா”

தாத்தா ‘தெரியாதென்று’ தலையை அசைக்க,

“சரி சரி நானே சொல்லுகிறேன். இந்த தக்காளி அயர்லாந்தை பிறப்பிடமாகக் கொண்டது.

இந்த கத்தரிக்காய் தென் கிழக்கு ஆசியா பகுதிகளில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பயிரிடப்பட்டதாக சொல்றாங்க.

இந்த வெண்டைக்காய் நம்ம இந்தியாவை சேர்ந்தது. வெண்டைக்காயில் சத்துக்கள் அதிகமாக நெறஞ்சி இருக்குதாம்.

எல்லாருக்கும் பிடிச்ச உருளைக்கிழங்கு தென் அமெரிக்காவின் பெரு நாட்டைச் சார்ந்தது.

வெங்காயம் தென்மேற்கு ஆசியாவையும், சின்ன வெங்காயம் இஸ்ரேலையும் பிறப்பிடமாகக் கொண்டவை.”

தாத்தா மதிவதனியைப் பார்த்து “இதெல்லாம் உனக்கு யாருமா சொல்லி குடுத்தாங்க?”

“எங்க ஸ்கூல் டீச்சர் தான் தாத்தா.”

“பெயருக்கு ஏற்றார் போல் நிறைய நல்ல விஷயங்களை தெரிந்து வைத்திருக்க” என்று சொல்லிவிட்டு காய்கறிகளை பறித்து தட்டில் எடுத்துக் கொண்டார்.

இருவரும் நடந்தார்கள் வீட்டை நோக்கி.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.