வேலனும் பாட்டியும் – சிறுகதை

அன்று மாலை முத்தம்மாள் பாட்டியின், வீட்டுத் திண்ணையில் சிறுவர்கள், சிறுமிகள் கூட்டமாக அமர்ந்து பாட்டி சொல்லும் கதையை ஆர்வமாக, மகிழ்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த தெருவில் உள்ள பிள்ளைகளுக்கு தினமும் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், வீட்டுப்பாடத்தை முடித்துவிட்டு, முத்தம்மாள் வீட்டு திண்ணையை நோக்கி மகிழ்ச்சியாக ஓடுவதே வாடிக்கை.

எத்தனையோ பாட்டிகள் ஒவ்வொரு வீட்டிலும் கதை சொல்ல இருந்தாலும், முத்தம்மாள் சொல்லும் கதைகளுக்கு தனி மவுசு.

ராஜாக்கள் கதை, திகில் கதை, நகைச்சுவை கதை, இராமர் கதை, கிருஷ்ணன் கதை, பிள்ளையார் கதை, முருகன் கதை என விதவிதமான கதைகள் சொல்லி பிள்ளைகளை மகிழ்ச்சியில் தள்ளுவார்.

தனியாக தன் கூரை வீட்டில் வசிக்கும் முத்தம்மாள் பாட்டிக்கு சொந்தம் என்று யாரும் ஆதரவு கிடையாது.

அரசு வேலையில் பணியாற்றும்போதே இறந்துபோன தன் கணவரின் பென்சன் பணத்தை வைத்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு பிள்ளை கிடையாது.

அந்த தெருவில் வசிக்கும் மக்கள், கடைவீதி செல்லும்போது பணம் பெற்றுக்கொண்டு பாட்டிக்கு தேவையான பொருள்களை வாங்கி வந்து கொடுப்பார்கள்.

போஸ்ட்மாஸ்டராக வேலை பார்க்கும் சாமிநாதன் அந்த தெருவிற்கு அப்போதுதான் குடிவந்தார். நான்காயிரம் வாடகை வீடு.

ஒவ்வொரு ஊருக்கும் டிரான்ஸ்ஃபர் ஆகும் போது ஒவ்வொரு வாடகை. தற்காலத்தில் சொந்தமாக வீடு கட்டுபவர்கள் வீடு கட்டிய கடனை அடைப்பதற்கு, தான் கட்டிய வீடுகளை வாடகைக்கு விடுகின்றனர்.

மனைவி, ஒரு மகன் வேலன் இவர்களோடு சாமிநாதன் வந்து சேர்ந்தார். உள்ளூர் அரசுப் பள்ளிக்கூடத்திலேயே வேலனை சேர்த்தார்.

புது இடம்,புது சூழல் என்பதால் வேலன் சற்று சோர்வான,குழப்பமான மனநிலையிலேயே இருந்தான்.

ஆறாம் வகுப்பில் மொத்தம் இருபது மாணவர்கள் படித்தனர்.

அவன் குடிவந்திருக்கும் தெருவில் உள்ள பிள்ளைகளும் அந்த வகுப்பில் படித்தனர்.

பள்ளி விட்டதும் தனியாக நடந்து வந்த வேலனைப் பார்த்த, குமாரும், கார்த்தியும், “வேலா ஏன் தனியா போற, எங்ககூட சேர்ந்து வா நாங்க ரெண்டு பேரும் நம்ம தெருவுலதான் இருக்கோம்” என்றதும், வேலனுக்கு வந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

தாகத்தில் தவித்த வறண்ட வாய்க்கும், தொண்டைக்கும் மண்பானை தண்ணீர் கிடைத்தது போல் அவனின் மனம் ஜில்லென்று குளிர்ந்தது. அவனுடைய சோர்வு நீங்கியது; உற்சாகம் பெருகியது.

குமார், கார்த்தி ஆகிய புது நண்பர்களுடன் சந்தோஷமாக வீட்டிற்கு சென்றான் வேலன்.

தினமும் வேலன், குமார், கார்த்தி மூவரும் சேர்ந்தே மகிழ்ச்சியாக பள்ளிக்கு சென்று வந்தனர்.

அன்று மாலை குமாரும், கார்த்தியும் வேலன் வீட்டு வாசலில் நின்று, “வேலா, வேலா” என்று கூவினர்.

சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தான் வேலன்.

குமார் பேசினான், “டேய் வேலா வீட்டுப்பாடம் எல்லாம் முடிச்சிட்டியா?”

“முடிச்சிட்டேன் குமார், ஏன் எதுக்கு கேக்குற?”

“இல்லடா நானும் கார்த்தியும் பாட்டி வீட்டுக்கு போறோம், நீயும் வரீயா?” என்றான் குமார்.

“எந்த பாட்டி?”

“நம்ம தெரு கடைசியில இருக்குற முத்தம்மா பாட்டிதான், சூப்பரா கதை சொல்லுவாங்க, தெரு பசங்க எல்லாரும் அங்கதான் இருப்பாங்க, வா போகலாம்” என்றான் கார்த்தி.

“கதையா! இதோ உடனே வரேன்” என கூறி வேலன் தன் அம்மாவிடம் சொல்லி விட்டு பாட்டியின் வீட்டிற்கு நண்பர்களோடு புறப்பட்டான்.

ஏனென்றால், வேலன் வீட்டில் பாட்டி கிடையாது. அப்பா, அம்மா, வேலன் மூவர் மட்டுமே.

திண்ணையில் முன்பே நிறைய பிள்ளைகள் இருந்தனர். அவர்களோடு இவர்களும் அமர்ந்தனர்.

வெற்றிலையைப் போட்டு சிவந்த வாயோடு “ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம், அந்த ராஜாவுக்கு…” என தொடர்ந்து கதையைக் கூறினார் பாட்டி.

வேலனுக்கு இது புதிய அனுபவமாக இருந்தது. கதை மிகவும் அற்புதமாகவும், அருமையாகவும் இருந்தது. மகிழ்ச்சியாக வீட்டிற்கு சென்றான் வேலன்.

தினந்தோறும் நண்பர்களுடன் மாலையில் பாட்டி வீட்டிற்கு சென்று கதை கேட்பதை வழக்கமாக்கி கொண்டான். வேலன் தன் அப்பா, அம்மாவிடம் முத்தம்மாள் பாட்டியைப் பற்றியும், அவர் சொல்லும் கதைகள் பற்றியும் சொல்லி மகிழ்வான்.

ஒரு நாள் பள்ளி வகுப்பில் தமிழாசிரியர் “நமக்கு ஒருவர் எந்த ஒரு உதவி செய்தாலும் அதனை மறக்கக்கூடாது. நமக்கு உதவியவருக்கு நாமும் உதவ வேண்டும். நமக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒருவருக்கு, நாமும் கைமாறாக மகிழ்ச்சியைத் தர வேண்டும்” என கூறினார்.

இதனை வகுப்பில் இருந்த வேலன் கேட்டான்.

அவன் மனதில் ஒரு யோசனை வந்தது. ‘தினமும் கதை சொல்லி மகிழவைக்கும் முத்தம்மாள் பாட்டிக்கும் நாம் ஏதாவது கைமாறு செய்யவேண்டுமே’ என சிந்தித்தான்.

அன்று மாலை பாட்டி கதை சொல்லி முடித்ததும், எல்லோரும் சென்ற பிறகு, வேலன் கேட்டான் பாட்டியிடம் “பாட்டி உங்களுக்கு ஏதாவது வேணும்னா சொல்லுங்க; நான் வாங்கி தரேன்.”

பாட்டி ஒடுக்கு விழுந்த பள்ளமான கன்னத்தில் புன்னகையோடு வேலனைப் பார்த்து, “ஏன்ப்பா பேராண்டி உனக்கு ஏன் சிரமம், எனக்கு எதுவும் வேண்டாம்பா” என்றார், நடுங்கிய குரலில்.

“இல்ல பாட்டி உங்களுக்கு ஏதாவது செய்யனும் போல இருக்கு, சொல்லுங்க என்ன வேணும்?”

வேலனின் பிடிவாத கேள்விக்கு, பாட்டி வேறுவழியின்றி, “வெற்றிலையும், பாக்கும் வாங்கி கொடுப்பா. அது போதும்” என்றார்.

வேலன் மகிழ்ச்சியோடு வீடு சென்றான். அடுத்த நாள் காலை, உண்டியலில் சேர்த்து வைத்திருந்த ஒரு ரூபாய் சில்லரை பத்து எடுத்து, புத்தகப் பையில் வைத்தான்.

‘மாலை பள்ளிவிட்டு வரும்போதே பாட்டிக்கு வெற்றிலையும், பாக்கும் வாங்கி கொடுக்க வேண்டும்’ என முடிவெடுத்தான்.

பள்ளி விட்டதும் ஆசை ஆசையாக எதிரே உள்ள பெட்டிக் கடையில் ஐந்து ரூபாய்க்கு வெற்றிலையும், ஐந்து ரூபாய்க்கு பாக்கும் வாங்கினான் வேலன்.

கடைக்காரர் வெற்றிலையும், அதன்மேல் சுண்ணாம்பும் வைத்து, பாக்குடன் ஒரு பேப்பரில் பொட்டலமாக கட்டி கொடுத்தார்.

அதனை வாங்கிய வேலன் இளங்கன்றைப் போல் துள்ளித்துள்ளி பாட்டி வீட்டை நோக்கி மகிழ்ச்சியாக ஓடினான். முத்தம்மாள் பாட்டியிடம் பொட்டலத்தைக் கொடுத்தான்.

இதை எதிர்பார்க்காத பாட்டி, வேலனைக் அணைத்து கண்களில் நீர் பெருக “நன்றி” கூறினார்.

காசு கிடைக்கும் போதெல்லாம் வேலன் பாட்டிக்கு வெற்றிலைப் பாக்கு பொட்டலம் வாங்கி தருவதை வழக்கமாக்கி கொண்டான்.

முத்தம்மாள் பாட்டி ‘வேண்டாம்’ என எவ்வளவு சொல்லியும் வேலன் கேட்கவில்லை.

ஒருநாள் வழக்கம்போல் பொட்டலத்தோடு பாட்டி வீட்டை நெருங்கியதும், வீட்டின்முன் கூட்டம், என்னவென்று கூட்டத்தை விலக்கி உள்ளே சென்ற வேலனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

இத்தனை நாள் பிள்ளைகளுக்கு மகிழ்வான கதைகளை சொன்ன முத்தம்மாள் பாட்டி, வானவர்களுக்கு கதைகள் சொல்ல சென்றுவிட்டார்.

ஒரு உயரமான பலகையில் பாட்டியை படுக்க வைத்திருந்தனர். கழுத்தில் மாலை அணிவித்திருந்தனர். கூடியிருந்த பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

வேலனின் மனம் என்னவோ செய்தது. அவனை அறியாமல் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது; உடைந்துபோனான்.

வாங்கி வந்த வெற்றிலைப்பாக்கு பொட்டலத்தை, பாட்டியின் பாதத்தின் பக்கத்தில் வைத்தான்.

தினந்தினம் கதைகள் சொல்லும் பாட்டியின் மறைவு, அந்த தெரு பிள்ளைகளுக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வருத்தத்தையும் தந்தது.

“அரிது அரிது பாட்டி கிடைப்பது அரிது; அதனினும் அரிது கதைகள் சொல்லும் பாட்டி கிடைப்பது”

இந்த காலத்தில் யார் வீட்டிலும் பாட்டி இருப்பதில்லை.

பாதி பாட்டிகள் முதியோர் இல்லத்தில்; சில பாட்டிகள் தன் வீட்டிலேயே வேலைக்காரிகளாய்; சில பாட்டிகள் மாதர் சங்கத்தில்.

கதைகள் சொல்ல பாட்டிக்கும் நேரம் இல்லை; கேட்பதற்கு பிள்ளைகளுக்கும் விருப்பம் இல்லை. அனைவரும் அலைபேசியின் வ‌லையில் சிக்கி வெளிவர முடியாமல் தவிக்கின்றனர்.

வேலன் வீட்டிலும் பாட்டி இல்லை. முத்தம்மாள் பாட்டியை தன் பாட்டியாகவே நினைத்தான். அவர் இழப்பை வேலனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அன்று இரவு அவனுக்கு தூக்கமும் வரவில்லை. வேலனின் அம்மா,அவனுக்கு ஆறுதல் கூறி தூங்க வைத்தார்.ஈரக் கண்களுடன் உறங்கினான்.

அடுத்த நாள் பாட்டி வீட்டுத் திண்ணை வெறிச்சோடி கிடந்தது. இதுநாள்வரை மாலை வேளையில், பிள்ளைகளின் கூட்டமும், கலகலவென்ற சத்தமுமாக இருந்த திண்ணை, இன்று அமைதியின் சூழலில்.

ஒருநாள் வேலன் பள்ளிக்கு சென்று திரும்புகையில், முத்தம்மாள் பாட்டி வீட்டின் வாசலில் நின்றான். கையில் பொட்டலத்தோடும், கண்களில் குளமோடும்.

பாட்டி மறைந்ததை மறந்து வழக்கம்போல் வெற்றிலைப் பாக்கு பொட்டலத்தோடு வந்துவிட்டான். வீட்டை நெருங்கிய பிறகுதான், நினைவிற்கு வந்தது.

முத்தம்மாள் பாட்டி மறைந்ததை ஏற்றுக் கொள்ளாத வேலனின் மனம் அவரை தேடி சென்றது. அந்த பொட்டலத்தை, பாட்டியின் வீட்டு திண்ணையிலேயே வைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றான் முத்தம்மாள் பாட்டியின் கதைகளை மனதிற்குள் அசை போட்டுக்கொண்டே.

“ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம், அந்த ராஜாவுக்கு…”

கி.அன்புமொழி

கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.