ஸ்வீட் கார்ன் சூப் செய்வது எப்படி?

ஸ்வீட் கார்ன் சூப் மிகவும் சுவையான சூப் ஆகும். இதனை எளிதாகவும் ருசியாகவும் வீட்டிலேயே செய்யலாம். குளிருக்கு ஏற்ற அருமையான சூப் இது. நார்ச்சத்து மிகுந்த இது ஆரோக்கியமானதும் கூட.

இனி சுவையான ஸ்வீட் கார்ன் சூப் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

 தேவையான பொருட்கள்

ஸ்வீட் கார்ன் கருது (மக்காச்சோளம்) – 1 எண்ணம்

முருங்கை பீன்ஸ் – 100 கிராம்

கேரட் – 100 கிராம்

சின்ன வெங்காயம் – 10 எண்ணம் (பெரியது)

நாட்டு தக்காளி – 2 எண்ணம்

வெள்ளைப் பூண்டு – 5 பற்கள் (பெரியது)

இஞ்சி – ஆட்காட்டி விரல் அளவு

கொத்தமல்லி இலை – ஒரு கொத்து

நல்ல எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

மிளகுப் பொடி – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஸ்வீட் கார்னை அவித்து உதிர்த்துக் கொள்ளவும்.

பீன்ஸ், கேரட்டை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நேராக வெட்டிக் கொள்ளவும்.

நாட்டு தக்காளியை அலசி சதுரங்களாக்கிக் கொள்ளவும்.

வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி சிறுவட்டத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி நசுக்கிக் கொள்ளவும்.

கொத்த மல்லி இலையை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

உதிர்த்த ஸ்வீட் கார்னில் 3 டேபிள் ஸ்பூன் அளவுக்கு சோளத்தை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மீதமுள்ள சோளத்தை தேவையான தண்ணீர் சேர்த்து விழுதாக்கிக் கொள்ளவும்.

குக்கரில் நல்ல எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் அதில் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயத்தை வதக்கும் போது

ஓரளவு வதங்கியதும் அதனுடன் நறுக்கிய முருங்கை பீன்ஸ் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

பீன்ஸ் சேர்த்து வதக்கும் போது

பின்னர் அதனுடன் நறுக்கிய கேரட் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

கேரட் சேர்த்ததும்

ஓரளவு காய்கறிகள் வதங்கியதும் அதனுடன் உதிர்த்த ஸ்வீட் கார்னை சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.

ஸ்வீட் கார்ன் சேர்த்ததும்

பின்னர் நாட்டு தக்காளி சேர்த்து வதக்கவும். (போண்டா தக்காளியை சேர்த்தால் ஸ்வீட் கார்ன் சேர்ப்பதற்கு முன்னரே தக்காளியைச் சேர்த்து வதக்கவும்)

தக்காளி சேர்த்ததும்

தக்காளி வதங்கியதும் நசுக்கிய இஞ்சி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

நசுக்கிய இஞ்சி சேர்த்ததும்

அதனுடன் நறுக்கிய வெள்ளைப் பூண்டினைச் சேர்த்து வதக்கவும்.

வெள்ளைப் பூண்டினைச் சேர்த்ததும்

வெள்ளைப் பூண்டின் பச்சை வாசனை போனதும் அரைத்து வைத்துள்ள ஸ்வீட் கார்ன் விழுதினை சேர்த்து கிளறி தேவையான தண்ணீர், உப்பு சேர்க்கவும்.

அரைத்த விழுதினைச் சேர்த்ததும்

தேவையான தண்ணீர் சேர்த்ததும்

நறுக்கிய கொத்தமல்லி இலை, 2 ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கிளறி குக்கரை மூடி விடவும்.

கொத்தமல்லி இலை, உப்பு சேர்த்ததும்

10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து இறக்கி குக்கரின் ஆவி அடங்கியதும் திறந்து சின்ன கிண்ணத்தில் ஊற்றி பரிமாறவும்.

சுவையான ஸ்வீட் கார்ன் சூப் தயார்.

ஸ்வீட் கார்ன் சூப்

குறிப்பு

சூப்பினை மீண்டும் சூடுபடுத்த விரும்பினால், சூப்பினை கொதிக்க விடாமல் கரண்டியை வைத்துக் கிளறி தேவையான சூடு வந்ததும் பரிமாறவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.