ஹோமி ஜஹாங்கிர் பாபா

ஹோமி ஜஹாங்கிர் பாபா 1909 ஆம் ஆண்டு அக்டோபர் 30இல் பிறந்தார். தமது தொடக்கக் கல்வியை மும்பையில் பயின்றார். 1927இல் இங்கிலாந்து கேம்பிட்ஜ் ‘கைன்ஸ்’ கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். இவருக்குக் கணிதத்திலும் ஆர்வம் இருந்தது.

ஹோமி ஜஹாங்கிர் பாபா 1931இல் கேவெண்டிஷ் ஆய்வுக்கூடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார். இவரின் முக்கிய ஆய்வு, ‘காமா கதிரியக்க உட்கவரலில் எலக்ட்ரான் பொழிவு’ என்பதாகும்.

22 ஆண்டுகளில் (1932-54) ஐம்பது ஆய்வுக் கட்டுரைகளை ஹோமி ஜஹாங்கிர் பாபா வெளியிட்டார். எலக்ட்ரான் – பாசிட்ரான் சிதறல் குறித்த இவரின் ஆய்வு ‘ஹோமி பாபா சிதறல்’ என அழைக்கப்படுகிறது.

1940இல் இந்தியா திரும்பிய ஹோமி ஜஹாங்கிர் பாபா, இந்திய அறிவியல் கழகத்தில், இயற்பியல் துறையில் பேராசிரியராகப் பணி மேற்கொண்டார். இவரின் இடையறாத முயற்சியால் 1945ஆம் ஆண்டு ‘டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம்’ உருவாக்கப்பட்டது. இவர் இதன் இயக்குநராகத் தமது இறுதி நாள்வரை இருந்தார்.

ஹோமி ஜஹாங்கிர் பாபா 1948இல் ‘இந்திய அணுமின் கழகத்தின்’ இயக்குநர் பொறுப்பையும் ஏற்றார். தற்போது இந்நிறுவனம் ‘பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம்’ என அழைக்கப்படுகிறது.

1966இல் உலக அளவில் நடைபெற்ற அணுசக்தி மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றபோது, விமான விபத்தின் மூலம் 24.01.1966இல் உயிரிழந்தார். ஹோமி ஜஹாங்கிர் பாபா இந்திய அணு ஆராய்சித்துறையின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் வித்திட்டவராவார்.