இன்று திங்கள் கிழமை.
எனக்கு சென்னை வரை செல்ல வேண்டியிருந்தது. எங்கள் ஊரிலிருந்து காலையில் ஒரு ரயில் 10 மணிக்கு கிளம்பும். ஒருவழியா ரயில்வே ஸ்டேஷன் வந்துவிட்டேன்.
டிக்கெட் கவுண்டர் முன்னாடி ஒருபெரிய வரிசை நின்று கொண்டிருந்தது. கியூவுக்கு பக்கத்திலே பயணிகள் அமர நாற்காலிகள் போடப்பட்டிருந்தன
அதில் பாதி நாற்காலியில் பயணிகளுக்கு பதிலாக அவர்களுடைய பைகளும், தண்ணீர் பாட்டில்களும், பழைய துண்டும் அமர்ந்திருந்தன.
இவை கியூவில் நிற்பவர்களின் பொருள்கள்தான். அலைபாயும் மனதில், இதெல்லாம் அடக்க முடியாத ஆசைகளில் ஓன்று.
டிக்கெட் எடுக்கும் வரிசையையும் விடக்கூடாது. அதே நேரத்தில் டிக்கெட் எடுத்தவுடன் அமர ஒரு நாற்காலியும் தேவை அதையும் விடக்கூடாது.
நாம் வாழும் நேரங்களில், எதையும் இழக்க கூடாது என்பது பல பேருக்குள்ள அடக்க முடியாத பேராசைகளில் ஒன்று.
வரிசையில் நின்று கொண்டு நாற்காலியை, திரும்பி திரும்பி பார்த்து கொண்டே, வரிசையில் நகர்ந்து சென்று, டிக்கெட் கவுண்டரை பார்த்தபடியே, முணுமுணுத்தபடியே பெரும்பாலானோர் செல்கின்றனர்.
இருக்க இடமில்லாததால் நின்று கொண்டே இருந்தேன். நான் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்திருந்ததால் எனக்கு வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லாமல் போனது.
எனக்கு கொஞ்சம் கால் வலிப்பது போல உணர்ந்தேன். ‘சரி! உக்கரலாமெ’ன்று, ஒருநாற்காலியிலிருந்து பையை எடுத்து, கீழே வைக்க முற்பட்டேன்.
வரிசையில் நிற்பவர் ஒருவர், அவர் முன்னாடி நிற்பவரிடம் ஏதோ சொன்னார். அங்குள்ள சத்தத்தில், எனக்கு சரியாக ஏதும் காதில் விழவில்லை.
முன்னாடி நின்றவர் சட்டென்று என்னை பார்க்கிறார்; ஏதோ சொல்கிறார். அப்போதும் எனக்கு காதில் விழவில்லை.
அவர் பின்னாடி நிற்பவரிடம் ஏதோ சொல்லிவிட்டு, என்னை நோக்கி வந்து “அது, நான் சீட் போட்டு வச்சிருக்கேன், அதை எதுக்கு எடுக்கறீங்க?” என்று கேட்டார்.
“கால் வலிக்குது, கொஞ்சநேரம் உக்காரனும்!”
“அதோ பின்னாடி காலியா இருக்கு பாருங்க, அங்க போய் உக்காருங்க!”
எனக்கு ஏதோ நல்லது செய்வது போல, சொல்லிவிட்டு, மீண்டும் வரிசைக்கு சென்றார். ‘சரி’யென்று கடைசியில் இருந்த நாற்காலியை நோக்கி உக்கார சென்றேன்.
நின்றபடியே போன் பேசிக்கொண்டிருந்த ஒருவர் ஓடி வந்தார்.
“சார், நான் உக்காந்திருந்தேன், கீழே பாருங்க, என்னோட செருப்பு கூட கெடக்கு”
அவரோ ஆதாரத்துடன் நாற்காலிக்கான உரிமையை எடுத்துக் கூறினார். ‘சரி’யென்று மெல்ல நகர்ந்தேன்.
அப்போது, அவர் நாற்காலியை விட்டு நான் நகர்ந்த நிம்மதியில், பழையபடியே நின்று கொண்டு போன் பேசத் தொடங்கினார்.
இப்படி நடந்து கொண்டிருக்கும்போதே, ஒருவர் நாற்காலியிலிருந்து எழுந்து சென்றார்; எங்கு செல்கிறார் என்று தெரியவில்லை.
‘ஒருவழியாக எனக்கென்று ஒருநாற்காலி கிடைத்தாகி விட்டது!’ என்று ஒரு அல்ப சந்தோஷம் கிடைத்தது. உட்க்கார்ந்தேன்.
கையில் வைத்திருந்த பையை மடிமேல் வைத்துக் கொண்டு தண்ணீர் பாட்டிலை எடுத்து மூடியை திறந்தேன். யாரோ என்னை கூப்பிடுவதை போல உணர்ந்தேன்.
திரும்பி பார்த்தால், சற்று நேரத்திற்கு முன்னாடி எழுந்து போனவர்தான்.
“சார்!” என்று சொல்லிவிட்டு, இரண்டு கைகளையும், வெவ்வேறு திசைகளை காட்டி பேசுவதற்குள், நான் அவருடைய விளக்கங்களை கேட்க வேண்டாமென்று நினைத்து எழுந்து கொண்டேன்.
“நன்றி” என்று சொல்லிவிட்டு அமர்ந்தார். மிகவும் பண்பானவர் போலிருக்கிறது.
ஒலிபெருக்கியில் வண்டி இன்னும் சற்று நேரத்தில் முதலாவது நடைமேடைக்கு வந்து சேரும் என்ற செய்தியை, மும்மொழி கொள்கையை, மத்திய அரசு அமல்படுத்துவதற்கு உறுதுணையாக இருப்பது போல, மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்தனர்.
இப்போது எல்லோரிடமும், ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. முதலாவது நடைமேடையை நோக்கி புறப்பட்டு சென்றனர்.
எல்லா நாற்காலிகளையும் ஒருமுறை பார்த்தேன். யாருமே இல்லாமல், தனித்திருந்தன.
நான் நின்று கொண்டிருந்தவரை, யாருமே அந்த நாற்காலியை பயன்படுத்தவே இல்லை.
இப்போது வைத்திருந்த பொருள்களைத் தூக்கிக் கொண்டு முதலாவது நடைமேடை நோக்கி ஓட தொடங்கினர்.
பாதி பேர் என்ஜின் நிற்கும் திசையை நோக்கியும், சில பேர் வண்டியின் கடைசி பெட்டி இருக்கும் திசையை நோக்கியும் கலைந்து சென்றனர்.
எந்தவித கவலையும் எனக்கில்லை. நான் ஏற்கனவே முன் பதிவு செய்த பெட்டி கூட, நடந்து உள்ளே செல்லும் வழிக்கு முன்னாடிதான் வரும்.
அது, நான் இப்போது, இருக்கும் இடத்திலிருந்து மிக அருகில் இருப்பதால் வண்டி வந்து நின்றதும், போகலாமென்று நாற்காலியில் அமர்தேன்.
எல்லா நாற்காலிகளும் தனியாக விடப்பட்டிருந்தன. நாற்காலிகளை உற்று நோக்கினேன்.
நாற்காலிகள் என்னிடம் பேசுவதுபோல இருந்தது எனக்கு. இந்த நாற்காலிகள் எதையோ உணர்த்துவது போல இருந்தது.
இந்த பூமியை போல, இந்த நாற்காலிகளும் இங்கேயே தான் நிரந்தரமாக இருக்கின்றன. ஆனால், மனிதர்கள் தான் மாறி, மாறி, வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மனிதர்களை இந்த நாற்காலிகளும் தாங்கி இருக்கின்றன பூமியை போல. வருவோர், போவோர், மட்டுமே மாறி இருக்கின்றனர்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் தான், இவர்கள் செய்யும் காரியங்கள், மனநிலைகளும் தான், எவ்வளவு கீழ் நோக்கி செல்கிறது.
கிடைக்கும் சிறிது நேரத்துக்குள்ளே, இடத்தைப் பிடித்து, தானும் அமராமல், யாரையும் அமரவிடாமல், அந்த இடத்தை விட்டு செல்கின்றனர்.
நாற்காலிகளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்களிலும் இவர்களது வாழ்க்கையும் இப்படித்தான் நகர்கின்றது.
பெருமூச்சு விட்டபடியே, முதலாவது நடைமேடையில் புகைவண்டி வந்து கொண்டிருந்தது.
வண்டி நிற்பதற்குள், இடத்தை பிடித்துவிட, தவித்து கொண்டிருந்தனர் பெருசுகள் முதல் சிறுசுகள் வரை.
முன்பதிவில்லா பயணிகள் முண்டியடித்தாலும் பரவாயில்லை, அவர்களாவது, இடம் பிடிக்க போராடுவார்கள்.
ஆனால், பதிவு செய்தவர்களுக்கு அந்த கவலையும் இல்லை; இருந்தாலும், கட்டிப் போட்டாலும் தாயை பார்த்த கன்றுக்குட்டி துள்ளுவது போல, இவர்களும் தவித்துக் கொண்டிருக்க, ஒருவழியாக வண்டி நின்றது.
இரண்டு கைகளிலும் பைகளுடன், ஒருவர் மட்டுமே உள்ளே நுழையும் வழியில் ஒரு குடும்பமே இடித்துக் கொண்டு உள்ளே நுழைய பார்த்தனர்.
ஒருவர் கையில் உள்ள பையின் காதறுந்து, பொருள்கள் கிழே விழுந்து சிதறி ஓடின. இன்னொருவர் விழுந்த பொருளை மிதிக்காமல் தாண்டி உள்ளே நுழைந்தார்.
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக ரெகார்டை முறியடித்தது போல உள்ளே சென்றதும் கீழே பொருள்களை பொறுக்கிக் கொண்டிருத்தவரை பார்த்துவிட்டு சென்றார்.
ஒருவழியாக எல்லோரையும் ஏற்றிக் கொண்டு, புகைவண்டி புறப்பட போகும் சந்தோஷத்தில் கூச்சலிட்டது.
முண்டியடித்து ஏறியவர்களை பார்த்தேன். இப்போது பொருள்களை சீட்டுக்கு அடியில் பத்திரப்படுத்துவதில் கவனமாக இருந்தனர்.
6 மணி நேர பயணம். அறிமுகமில்லாவிட்டாலும் எதாவது பேசிக்கொண்டே போனால்தான் பயணத்தில் ஒரு சுவாரசியம் இருக்கும் என்று சில பேர்.
பேசினால் வாய் வலிக்கும் என்று சில பேர், யாரை பற்றி எனக்கென்ன கவலை என்று காதில் ஒயரை மாட்டிக்கொண்டு எதையாவது கேட்டுக்கொண்டே சிலபேர்.
சம்பந்தமே இல்லாமல் நம்ம வீட்டுக்கதையை அருகில் இருப்பவரிடம் சொல்லி குறைபட்டுக்கொண்டு என எல்லோரையும் சுமந்தபடியே வண்டி ஓடிக்கொண்டிருந்தது.
எனக்கோ மூன்று பேர் படுக்க கூடிய பக்கத்தில் கீழ் உள்ள படுக்கை. கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் ஓடிவிட்டன.
இதில் சில பேர், கிடைத்த இடத்தில் கூட இருக்க மனமில்லாமல், அதைவிட வேற இடத்தில் அமரலான்னு தேடி தெரிந்தே நேரம் போய்க் கொண்டிருந்தது
“ஸார், அந்த சைடு சீட் என்னோடையது, உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா, அத நீங்க எடுத்திட்டு எனக்கு உங்க சீட்டை தரமுடியுமா?”
நான் கேட்டவரை (கெட்டவரை) பார்த்தேன்; அவர் வேறு யாருமில்லை ரயில்வே ஸ்டேஷனில் நின்றபடியே போன் பேசிக்கொண்டடே, இருக்க நாற்காலி தராதவர் தான்.
அவர், அதை மறந்தவர் போல நடிக்கிறார். நானும் அவரையே தெரியாது போல விட்டு கொடுக்கிறேன்.
சீட் கிடைத்த சந்தோஷத்தில் நன்றி சொல்வது போல, இரண்டு கைகளையும் நெஞ்சின் அருகே கொண்டு செல்கிறார், லேசான புன்முறுவலுடன்.
சீட் வேண்டுமென கேக்க தெரிந்தவருக்கு, கிடைத்த பின்னர் நன்றி சொல்ல வாய் திறக்க மறுக்கிறது.
தேவை முடிந்த பின், தேவையில்லாமல் வாய் திறக்க கூடாதென்று இருப்பவர்.
இவர்களெல்லாம், ஒரு கொள்கையோடு வாழ்பவர்கள். இவர்களுக்கென்று ஒரு சட்டத் திட்டம், வரைமுறையை இவர்களே வகுத்து வாழ்பவர்கள்.
சைடு சீட்டில் அமர்ந்தேன். எனக்கும் இயற்கையை ரசித்தபடியே செல்ல தான் ஆசை. ஆனால் வெயில் கொஞ்சம் கடுமையாக இருந்ததால் அவ்வளவாக விருப்பமில்லை.
சற்று படுக்கலாமென்று இருந்தேன். கைப்பையை தலைக்கு வைத்துக்கொண்டு சற்று சாய நினைத்தேன்.
எதிர் சீட்டில் உள்ளவர் “சார், சிதம்பரம் வரப்போகுது, கொஞ்சம் பைய பார்த்துக்கோங்க, சாப்பாடு குடுப்பாங்க வாங்கிட்டு வாரேன்!”
என்னோடைய சீட்டை வாங்கியவர் படுக்கையை விரிக்கும் முன்னே, நடு சீட்டை தூக்கி கொக்கியில் மாட்டிவிட்டு, படுக்க அமர்ந்தவருக்கு போன் சிணுங்கியது.
எழுந்து போனை எடுத்தார். ஆனால், சரிவர பேச்சி கேக்காததால், படி பக்கம் சென்றுவிட்டார்.
நடு சீட்டில் உள்ளவருக்கு சற்று உக்கார்ந்து செல்ல ஆசை, ஆனால் அவரால் உட்கார முடியாது.
சிதம்பரத்தில் சாப்பாடு வாங்கியவர் சாப்பாட்டை வைத்துவிட்டு ரெஸ்ட் ரூம் சென்று விட்டார்.
போன் பேச சென்றவர் வரவே இல்லை. இன்னமும் பேசிக்கொண்டே தான் இருக்கிறார்.
இப்படியாக, முன் பதிவு செய்தவர்கள், இங்கும் அங்குமாக திரிந்தார்களே தவிர, இருக்கை என்னமோ, காலியாக தான் செல்கிறது. இப்போது ஒருவழியாக, விழுப்புரம் வந்துவிட்டது. யாருமே இன்னும் இருக்கையில் இருந்தபாடில்லை.
வண்டி கொஞ்சநேரம் கழித்து தான் எடுப்பார்கள். இப்போது எல்லோரும் சாப்பாடு மூட்டையை பிரித்தனர்.
இதிலும் ஏற்ற தாழ்வுகளுடன் பார்வை. சிலர் மற்றவர்களின் பார்வை படும்படி திறந்திருந்தார்கள். காரணம் அதுவெல்லாம் பிரியாணி.
சிலர் மூடி, மூடி, தின்றுகொண்டிருந்தனர். இவர்களெல்லாம், இருந்ததை எடுத்து வந்தவர்கள். சிலரோ கூவி விற்கும் பொட்டலங்களை தாவி பிடித்து வாங்கியவர்கள்.
இப்படியாக மதிய உணவும் முடிய, வண்டியும், தான் தயார் என்பதை போல, சத்தம் போட்டபடியே கிளம்ப தயாரானது.
இன்னும் 3 மணி நேரத்தில் சென்னை வரப்போகுது. இந்த 6 மணி நேர பயணத்தில், ஒரு மணி நேரம் கூட சற்று ஓய்வெடுத்து, செல்லும் மனநிலையில் யாருமே இல்லை.
வண்டி, இப்போது கொஞ்சம் வேகமாக செல்லத் தொடங்கியது. சாப்பிட்ட பிறகு சற்று ஓய்வெடுக்கலாம் என்று தோன்றிய சிலபேர் மட்டும் படுக்கையில் சாய்ந்தனர்.
சிலர் சாப்பிட்டவுடன் படுக்க கூடாதுன்னு யூடூப்பில பார்த்த அனுபவம் போல, இங்கும், அங்கும், நடந்து கொண்டிருந்தனர்.
இன்னும் சிலரோ, என்ன செய்வதென்றே தெரியாமல் பக்கத்திலிருப்பவர்களிடம் பேச ஆரம்பித்தனர்.
“நான், எப்போ சென்னை வந்தாலும் ரிசெர்வ் பண்ணாம வந்ததே இல்ல!”
அவர் பங்குக்கு சும்மா இருப்பாரா,
“என் பையன், தட்காலிலாவது போட்டுடுவான், ரிசெர்வ் இல்லாம, அனுப்ப மாட்டான்!”
ஆளுக்கொரு பெருமை, சுய தம்பட்டம், அடிக்க, அடிக்க, வண்டி இன்னும் வேகமாக சென்றது போல இருந்தது.
இப்போது, வண்டியின் வேகம் லேசாக குறைய தொடங்கியதும் ‘ஏதோ ஸ்டேஷன் வரப்போகுது!’ என்று உணர்ந்தவர்கள்
“என்ன ஸ்டேஷன் வரபோகுது?” என்றனர் கோரஸாக.
எட்டிப் பார்த்தேன், இன்னும் ஸ்டேஷன் உள்ளே நுழையவில்லை. மேல்மருவத்தூர் போல இருந்தது.
நானும் “மேல்மருவத்தூர் வரப்போகுது!” என்றேன்.
படுத்திருத்தவர்கள், ஒவ்வொருவராக, எழ தொடங்கினர். மீண்டும் நடமாட்டம் தொடங்கியது.
ஒருவர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துவிட்டு, கன்னத்தின் இருபுறமும் விரல்களால் தொட்டுக் கொண்டார்.
அது வேறு ஒன்றுமில்லை, மேல்மருவத்தூர் அம்மனுக்கு, பக்தியோடு செலுத்தும் வணக்கம்.
இன்னும் சிலரோ, ஒருவிரலை உதட்டின் மேல், வைத்து வைத்து எடுத்து, அம்மனுக்கு நன்றி செலுத்தினர். இன்னும் சிலரோ, போன வாரம்தான் கோயிலுக்கு போயிட்டு வந்தோம்னு சொல்லிக் கொண்டனர்.
யாரும் இவர்களிடம் கேட்டதாக தெரியவில்லை. இருந்தாலும் இவர்களே சொல்லிக் கொண்டனர்.
எல்லோரும் ஏதாவது ஒன்றை செய்யும் போது நாம் மட்டும் ஒன்றும் செய்யாமலிருந்தால் தெய்வ குத்தமாகிடும் என்ற நினைப்பாக இருக்கலாம்.
வண்டியின் வேகம் மீண்டும் மாறியது. இன்னும் வரவேண்டிய ஸ்டேஷன்கள் செங்கல்பட்டு, தாம்பரம் அடுத்து சென்னை எழும்பூர்.
இப்போதே, பெட்டி படுக்கைகளை எடுத்து வைக்க தொடங்கினர். இன்னும் சில பேரால் வண்டியின் உள்ளே இருக்க முடியவில்லை. அடிக்கடி எட்டிப் பார்பதும், இங்கும் அங்குமாக திரிவதுமாக இருந்தனர்.
வண்டியின் வேகத்தைவிட இவர்களின் எண்ண ஓட்டடங்கள் சென்னையில் இறங்கி அடுத்து செல்லுமிடங்களுக்கு அச்சாரமிட தொடங்கியது போல இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் சென்னையை நெருங்க போகிறது.
இந்த வண்டியின் பயண நோக்கம் எழும்பூர் வரை மட்டும் தான். அது தெளிவாகத்தான் செல்கிறது.
நிற்க வேண்டிய இடத்தில் நின்று, மெதுவாக செல்ல வேண்டிய இடத்தில் மெதுவாக, வேகமாக செல்ல வேண்டிய இடத்தில் வேகமாக. பயணத்தை, தெளிவாக நடத்தும் இந்த ரயில் வண்டி, இந்த மனிதர்களுக்கு ஏதாவது ஒன்றை சொல்லிக் கொண்டுதானிருக்கிறது.
வாழ வேண்டிய நேரத்தில், வாழவேண்டிய வகையில், வாழத் தெரியாமல் வாழும், பல்வேறுபட்ட மனிதர்கள்; எல்லாவற்றிலும் அவசரம்.
நிகழ்கால சுகங்களை மறந்து, அடுத்து என்ன நடக்குமென்றே தெரியாத நிலையில் அதன் மீது நம்பிக்கை வைத்து, மாறி, மாறி பயணிக்கும் இந்த மானிடர்களைத்தான் இந்த இரும்பு வாகனம் இவ்வளவு நாளும் சுமந்தபடியே செல்கிறது.
ஒவ்வொரு நாளும், யாரோ ஒருவர், ஏதோ ஒன்று, எதையாவது கற்று கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் (அ) கொடுத்துக் கொண்டு தானிருக்கிறது.
புரிந்தவவர்களுக்கு பாடமாகவும், புரியாதவர்களுக்கு பயணமாகவும் இருக்கிறது.
விட்டுக்கொடுக்க மனமில்லாதவர்களின் வாழ்வில், விதி அவர்கள் விலகிய இடத்திலிருந்து தொடங்க வைக்கிறது.
சில சமயங்களில் மன்னித்தவர்கள்தான், காலத்தால் மறக்கப்படுகிறார்கள்.
பயணம் தொடரும்…..
பொய்கை கோவி அன்பழகன்
மயிலாடுதுறை
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!