100 ரூபாய்

100 ரூபாய் – சிறுகதை

“யம்மா, ஒரு 100 ரூபாய் கொடேன். மதுரயில இன்டர்வியூக்கு போய்யிட்டு வந்துரேன்” கெஞ்சலாகக் கேட்டான் குமார்.

“போடா, உனக்கு வேலயில்ல. எப்பப் பாத்தாலும் இன்டர்வியூக்குப் போறேன், அங்க போறேன், இங்க போறேன்னு சொல்லிக்கிட்டு.” என்றபடி அரிசியைக் களைந்து உலையில் போட்டாள் செல்லத்தாய்.

“யம்மா, இந்த ஒரு தடவம்மா, இனிமே இன்டர்வியூக்குப் போறேன்னு உங்கிட்ட ரூவா கேட்க மாட்டேன்.” என்றபடி அம்மாவைப் பரிதாபமாகப் பார்த்தான்.

 

“என்ன விசயம்? துர ரொம்ப பவ்யமா பேசுறாரு” என்றபடி அப்பா உள்ளே நுழைந்தார்.

“இல்ல மதுரயில இன்டர்வியூவாம்… அங்க போறதுக்கு 100 ரூபாய் கேக்குறான்.” என்று இழுத்தாள் செல்லத்தாய்.

“எத்தன இன்டர்வியூதான் அட்டென் பண்ணுவான்? ஒன்னும் முடியலனா நம்ம கடைக்கு வான்னு சொல்லியாச்சு.” என்று அலுத்துக் கொண்டார் அப்பா.

குமார் ஏதும் பேசாமல் அப்பாவையே பார்த்தான். அப்பாவோ குமாரை ஏறெடுத்தும் பார்க்காமல் நகர்ந்து சென்றார்.

“ஏன்டா, அப்பா சொல்றதும் சரி தானே. எத்தன இன்டர்வியூதான் அட்டென் பண்ணுவ? ஒழுங்கா இன்டர்வியூ அட்டன் பண்ணி வேலைக்கு போகனும். இல்லையா நம்ம கடைக்கு போயி வியாபாரத்த பார்க்கனும். இரண்டுல எதையாவது உருப்படியாச் செய்யனும். எதையும் நீ செய்ற‌தில்ல. போடா உனக்கு காசு கொடுத்திட்டு உங்கப்பாகிட்ட திட்டு வாங்குறதே எனக்கு வேலையாப் போச்சு.” என்று எரிச்சல் பட்டாள் அம்மா.

அங்கிருந்து மௌனமாக வெளியேறி பின்புறமிருந்த தோட்டத்திற்குள் நுழைந்தான் குமார்.

 

நடந்தவைகளை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த குமாரின் அக்கா மல்லிகா வெளியே வந்து, ஏதும் கூறாமல் மெதுவாக குமாரின் கையில் 100 ரூபாயைத் திணித்தாள்.

“என்ன?” என்றபடி முறைத்தான் குமார்.

“நல்லபடியா இன்டர்வியூ அட்டென் பண்ணு” என்றபடி அங்கிருந்து நகர்ந்தாள் மல்லிகா. குமாருக்கு மல்லிகா கொடுத்த 100 ரூபாய் கனமாகத் தோன்றியது.

 

குமார் வேலை தேடிக் கொண்டிருக்கும் பி.பி.ஏ பட்டதாரி. குமாரின் அப்பா கிராமத்தில் சிறிய மளிகைக் கடை நடத்திக் கொண்டிருந்தார்.

பட்டம் முடித்ததும் மகனை கடையில் சேர்த்து கடையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

அதனால்தான் வியாபார நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வதற்காக சிறுவயதிலிருந்தே பள்ளி விடுமுறை நாட்களில் குமாரை கடைக்கு அழைத்து செல்வார்.

குமாருக்கோ நகரத்தில் ஏதேனும் ஒரு கம்பெனியில் சேர்ந்து வேலைக்கு செல்லவே விருப்பம். கடந்த இரண்டு மாதங்களாக வேலைக்காக தீவிரமாக அலைந்தான். ஒவ்வொரு கம்பெனியாக விண்ணப்பத்திருந்தான்.

நாளை மதுரையில் சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசர் பதவிக்கு இன்டர்வியூ. அதற்காகவே அம்மாவிடம் 100 ரூபாய் கேட்டான். அதற்குத்தான் இத்தனை பஞ்சாயத்துகள்.

“என்னடா இது, மூணாவது இன்டர்வியூ தானே? அதுகுள்ள அலுத்துக்கிறாங்க. நாம எப்படியாவது வேலைக்கு போயி இவங்க முன்னால ஜெயிச்சுக் காட்டணும்.” என்றெண்ணியபடி இன்டர்வியூக்கு சென்றான் குமார்.

 

இன்டர்வியூவில் கடை முதலாளி அவனுடைய குடும்பப் பின்னணி பற்றிக் கேட்டார்.

குமாரும் தன்னுடைய அப்பா மளிகைக் கடை நடத்தி வரும் விவரத்தினையும், தன்னுடைய மளிகைக் கடை பரீட்சயம் பற்றியும் கூறினான்.

“ஏந்தம்பி, வெண்ணைய கையில வைச்சிட்டு யாராவது நெய்க்கு அலைவாங்களா?

உங்கப்பா மளிகைக்கடை வைச்சிருக்காரு.

நீ ஏன் அத விட்டுட்டு சூப்பர் மார்க்கெட் சூப்பர்வைசர் வேலைக்கு இன்டர்வியூக்கு வந்திருக்க?” என்றார் முதலாளி.

“இல்லய்யா, டவுன்ல ஏதாவது ஒரு கம்பெனியில சேர்ந்து வேல பார்க்கணும்தான் ஆச. அதான்” என்றான் குமார்.

“எங்கப்பாவும் கிராமத்துல சின்ன மளிகைக் கடைதான் நடத்தினாரு. சின்ன வயசுல லீவு நாட்கள்ல மளிகைக் கடையில்தான் இருப்பேன். நான் பட்டப் படிப்ப முடிச்ச பிறகு அப்பாகூடச் சேர்ந்து அந்த கடைய கவனிச்சிக்கிட்டேன்.

வியாபார நுணுக்கங்கள‌ கத்துக்கிட்டதால இன்னைக்கு சூப்பர் மார்க்கெட் வைக்கிற அளவுக்கு வளர்ந்திட்டேன். அதுமட்டுமில்ல எனக்கு மதுரயில மட்டும் மூணு சூப்பர் மார்க்கெட் இருக்கு.

நீ வேணும்னா ஒரு வருசம் இங்க சூப்பர்வைசரா வேல பார்த்திட்டு அனுபவங்கள கத்துக்கோ. பிறகு அப்பாவோட சேர்ந்து மளிகைக் கடையை கவனிச்சு பெரிசா மாத்து. நிறைய பேருக்கு நீ வேலையக் கொடு” என்றார் முதலாளி.

தலையில் யாரோ தட்டி எழுப்பியது போல இருந்தது குமாருக்கு. முதலாளி சொல்லுவதில் இருந்த உண்மைகளைப் புரிந்து கொண்டான்.

அப்பாவிடம் பேசி அவரின் அனுபவங்களைப் பெற்று முன்னேறத் தயாரானான் குமார்.

வ.முனீஸ்வரன்

 


Comments

“100 ரூபாய் – சிறுகதை” அதற்கு 2 மறுமொழிகள்

  1. பாரதிசந்திரன்

    தன்னம்பிக்கை ஊட்டும் கதை. அருமை. அக்கரையே எல்லோருக்கும் பச்சையாக இருக்கிறது எனும் கருத்து வெளிப்பட்டிருக்கிறது.
    ஆசிரியரின் கதை கூறும் முறை சிறப்பு

  2. Good story

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.