மன்மோகன் சிங் பேச்சு – 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்ட விவாகாரத்தில் தனது கருத்தை முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் மன்மோகன் சிங் 24-11-2016அன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதுவரை இந்த விவகாரத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இதைக் கருதலாம்.
மன்மோகன் சிங் இந்தியாவின் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தவர்; இந்தியாவின் நிதியமைச்சராக இருந்தவர் மற்றும் இந்தியாவின் பிரதமராக இருந்தவர்.
அவருக்குப் பொருளாதாரம் பற்றியும் இந்தியாவைப் பற்றியும் கொஞ்சம் தெரியும் என்று நாம் நம்பலாம்.
மன்மோகன் சிங் பேச்சு – உரையின் தமிழ் வடிவம்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற முடிவுக்குப் பின்னால் ஏற்பட்ட சில பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த நான் எழுகிறேன்.
கருப்பு பணத்தை ஒழிக்க, கள்ள நோட்டுக்களைத் தடுக்க, தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த இதுதான் வழி என்று பிரதமர் வாதிடுகிறார். அவருடைய நோக்கங்களில் நான் முரண்படவில்லை.
ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறுவதில் மிகப்பெரிய நிர்வாகத் தவறு நடந்திருக்கின்றது என்பதில் நாடு முழுவதும் இருவேறு கருத்துக்கள் இல்லை என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
இந்த செயல் குறுகிய காலத்திற்கு கஷ்டமும் நீண்ட காலத்தில் நன்மையும் கொண்டு வரும் என்று சொல்பவர்கள் ஜான் கெய்ன்ஸ் அவர்களின் “நீண்ட காலத்தில் நாம் அனைவரும் இறந்திருப்போம்” என்ற வரியை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
எனவே, ஒரே இரவில் பிரதமரால் திணிக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் கஷ்டப்படும் சாதாரண மக்களின் பிரச்சினைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமானதாகும்.
ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறும் இந்த செயலின் இறுதி விளைவு எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது என்றே நான் சொல்கிறேன்.
நாம் 50 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று பிரதமர் சொல்கிறார். 50 நாட்கள் என்பது குறுகிய காலம்தான். ஆனால் ஏழைகளுக்கும் பின்தங்கிய மக்களுக்கும் 50 நாள் சித்திரவதை என்பது பேரழிவைக் கொண்டு வரலாம். அதனால்தான் 65க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாழ்வை இழந்திருக்கின்றனர்.
நமது இந்த செயல் பணம் மற்றும் வங்கிகளின் மீதான மக்களின் மதிப்பை சிதைக்கக் கூடும்.
உலகின் எந்த நாட்டிலாவது வங்கிகளில் போட்டு வைத்திருக்கும் தமது பணத்தை மக்கள் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றதா?
என்பதைப் பிரதமரிடமிருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
மக்களுக்கு நன்மை தரும் என்று சொல்லிக் கொண்டு செய்யப்படும் செயலைக் கண்டிப்பதற்கு இதுவே போதுமானது என நினைக்கின்றேன்.
மேலும் இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்திய விதம் என்பது நாட்டின் விவசாயிகள், சிறு தொழில் புரிவோர் மற்றும் முறைசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாதிக்கும் என்று நான் கருதுகிறேன்.
தேசத்தின் வருமானம் மற்றும் மொத்த உற்பத்தி விகிதம் 2 சதவிகிதம் குறையவும் வாய்ப்பு உள்ளது என்று எண்ணுகிறேன்.இது குறைந்தபட்ச மதிப்பீடுதான்; அதிகபட்ச மதிப்பீடு அல்ல.
எனவே இந்தத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும், அதே நேரத்தில் பொதுமக்களின் கஷ்டங்களையும் தவிர்க்க வேண்டும் என்ற வகையில் ஒரு ஆக்கபூர்வமான திட்டத்தை பிரதமர் கொண்டு வர வேண்டும் என்று எண்ணுகிறேன்.
பொதுமக்கள் வங்கிகளில் பணம் எடுக்கும் விதிகளை தினம் தினம் மாற்றிக் கொண்டிருப்பது நல்லதல்ல. அது பிரதம மந்திரியின் அலுவலகம், நிதி அமைச்சரின் அலுவலகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை மிக மோசமாகப் பிரதிபலிக்கின்றது.
இத்தகைய ஒரு நியாயமான ஆனால் எதிர்மறை விமர்சனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி உட்படுத்தப்படுவதை எண்ணி நான் மிகவும் வருந்துகிறேன்.
எனவே இதைவிட அதிகமாய் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களின் துயரங்களை நீக்க நடைமுறைக்கேற்ற திட்டங்களைக் கண்டறியுமாறு பிரதமரைக் கேட்டுக் கொள்கிறேன்.
முறைசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள நமது 90 சதவீத மக்கள் மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள 55 சதவீத மக்கள் மிகுந்த துயரத்தில் உள்ளனர்.
கிராமப்புறத்தில் உள்ள மக்களுக்கு சேவையளிக்கும் கூட்டுறவு வங்கிகள் செயல்படாமல் உள்ளன. அவை பணப்பரிவர்த்தனை செய்யத் தடை செய்யப்பட்டுள்ளன.
எனவே இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்திய விதம் ஒரு மிகப்பெரிய நிர்வாகத் தோல்வி. மேலும் இது ஒரு முறைப்படுத்தப்பட்ட கொள்ளை எனவும் சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்ட சூறையாடல் என்றும் என்னை நினைக்க வைக்கின்றன.
இந்த வார்த்தைகளோடு நான் முடிக்கின்றேன். அரசுத் தரப்பும் எதிர்தரப்பும் செய்வதில் உள்ள குறைகளைக் கண்டுபிடிப்பது என் நோக்கமல்ல.
இந்த நாட்டு மக்களின் கஷ்டங்களை நீக்க நடைமுறைக்கேற்ற வழிகளை பிரதமர் கண்டறிவார் என்று நம்புகிறேன். நன்றி.