சுனிதி சாலமன்

2017ல் தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுகள் பெற்றவர்கள்

2017-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் 2017 ஜனவரி 25 அன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. பல்வேறு துறைகளில் தங்களது சிறப்பான பங்களிப்பினை அளித்தவர்களுக்கு அதனை அங்கீகரிக்கும் பொருட்டு இவ்விருதுகள் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் 19 பெண்கள், 5 வெளிநாட்டவர்கள், 6 அமரர்கள் உட்பட மொத்தம் 89 நபர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவர்களில் 7 நபர்களுக்கு பத்ம விபூசணும், 7 நபர்களுக்கு பத்ம பூசணும், 75 நபர்களுக்கு பத்ம ஸ்ரீயும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவ்விருதுகள் பொதுவாக ஆண்டுதோறும் குடியரசு தினவிழாவினை ஒட்டி அறிவிக்கப்பட்டு அதே ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படுகின்றன.

2017-ம் ஆண்டு தமிழ்நாட்டின் சார்பில் மொத்தம் ஏழு பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சத்குரு ஜக்கி வாசுதேவ்-க்கு பத்ம விபூசணும், சோ.இராமசாமி-க்கு பத்ம பூசணும், டி.கே.மூர்த்தி, மைக்கேல் டேனினோ, நிவேதிதா ரகுநாத் பிதே, மாரியப்பன் தங்கவேலு, சுனிதி சாலமன் ஆகியோர்களுக்கு பத்ம ஸ்ரீயும் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

சத்குரு ஜக்கி வாசுதேவ்

சத்குரு ஜக்கி வாசுதேவ்
சத்குரு ஜக்கி வாசுதேவ்

இவர் ஆன்மீகத்திற்காக இந்தாண்டின் பத்ம விபூசணுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஈஷா என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் யோகா, சுற்றுசூழல் போன்றவற்றிற்காக சமூகப் பணியாற்றி வருகிறார்.

 

சோ.இராமசாமி

சோ.இராமசாமி
சோ.இராமசாமி

இவர் இலக்கியம், கல்வி மற்றும் இதழியலுக்காக பத்ம பூசணுக்காக இந்தாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் புகழ் பெற்ற நடிகர், பத்திரிக்கையாளர், வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.

துக்ளக் என்ற அரசியல் பத்திரிக்கையின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் அரசியல் நையாண்டி எழுத்துக்கள் இவருக்கு பத்திரிக்கை உலகில் தனி இடம் பெற்று தந்தன.

இவர் 22 நாடகங்களையும், 8 புதினங்களையும், அரசியல், கலை எனப் பல்வேறு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் 1999 முதல் 2005 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

 

டி.கே.மூர்த்தி

டி.கே.மூர்த்தி
டி.கே.மூர்த்தி

இவர் இந்த ஆண்டில் கலை (இசை) பிரிவில் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாட்டைச் சார்ந்த மிருதங்கக் கலைஞர் ஆவார். இவர் ஏழு வயதில் மிருதங்கம் வாசிக்கத் தொடங்கினார்.

கர்நாடக இசைப்பாடகர் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் இசை கச்சேரிக்கு 40 வருடங்களாக மிருதங்கம் வாசித்த பெருமை இவரைச் சேரும். எம்.எஸ் அவர்களின் ஐக்கிய நாடுகள் சபை, எடின் பெர்க் இசைவிழா ஆகிய நிகழ்ச்சிகளின் போதும் மிருதங்கம் வாசித்துள்ளார்.

பிரபல வித்துவான்களான எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.பாலமுரளிகிருஷ்ணா, செம்மங்குடி சீனிவாச ஐயர், குன்னக்குடி வைத்தியநாதன், லால்குடி ஜெயராமன் ஆகியோர்களுடன் இணைந்து இசைசேவை ஆற்றியுள்ளார். இவர் மிருதங்கம் மட்டுமின்றி கடம், கஞ்சிரா போன்ற இசைக்கருவிகளையும் திறம்பட வாசிப்பார்.

 

மைக்கேல் டேனினோ

மைக்கேல் டேனினோ
மைக்கேல் டேனினோ

இவர் இலக்கியம் மற்றும் கல்விக்காக இந்த ஆண்டில் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர் இந்திய குடியுரிமை பெற்று தமிழ்நாட்டில் தங்கியுள்ளார்.

இவர் எழுத்தாளர், ஆராய்ச்சியாளர், வரலாற்றாசிரியர் என பன்முகம் கொண்டவர். அன்னை மற்றும் அரவிந்தர் ஆகியோர்களை குருவாக ஏற்று கொண்ட இவர் அன்னை மற்றும் அரவிந்தர் ஆகியோரின் பணிகள் பற்றிய புத்தகத்தை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

தற்போது காந்திநகரில் உள்ள ஐஐடி-யில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நீலகிரியில் உள்ள காடுகளைப் பாதுகாப்பதில் ஈடுபடாடு மிக்கவராவார்.

 

நிவேதிதா ரகுநாத் பிதே

நிவேதிதா ரகுநாத் பிதே
நிவேதிதா ரகுநாத் பிதே

இவர் சமூகப் பணிகளுக்காக இந்த ஆண்டில் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவிலுள்ள வர்தாவைச் சேர்ந்த இவர் கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தர் கேந்திரத்தின் அனைத்திந்திய துணைத்தலைவராக உள்ளார்.

நிவேதிதா சிறுவயதில் பிறருக்கு உதவும் தனது பெற்றோர்களின் பண்பினால் ஈர்க்கப்பட்டு ஒன்பதாவது வகுப்பு பயிலும் போது சமூகப் பணிகளுக்காக பணியாற்ற தீர்மானித்தார்.

முதலில் கிராமப்புற பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி கற்பித்தார். பின் பழங்குடியின இளம் பெண்களிடம் நம்பிக்கை மற்றும் விழிப்புணர்வுகளுக்காக பாடுபட்டார். 1977 முதல் விவேகானந்தா கேந்திரத்தில் சேர்ந்து வாழ்நாள் சேவை செய்து வருகிறார்.

 

மாரியப்பன் தங்கவேலு

இவர் விளையாட்டுப் பிரிவில் இந்த ஆண்டில் பத்ம ஸ்ரீ விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்.

2016-ல் ரியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்று உள்ளார். வறுமையான சூழலிலும் கடுமையாகப் போராடி பல சர்வதேசப் போட்டிகளில் பிரிவில் சாதனை செய்துள்ளார்.

 

சுனிதி சாலமன்

சுனிதி சாலமன்
சுனிதி சாலமன்

இவர் மருத்துவ துறையில் இந்தாண்டின் பத்ம ஸ்ரீ விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு மருத்துவர் ஆவார். இவர் இந்தியாவின் சென்னையில் எயிட்ஸ் நோயாளிகள் இருப்பதை முதன் முதலில் 1986-ல் கண்டறிந்தார்.

இவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் நுண்ணியல் துறை பேராசிரியராக பணியாற்றியவர். 1993-ல் எயிட்ஸ் ஆராய்ச்சி மற்றும் கல்வி அளிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார்.

எயிட்ஸ் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த காலகட்டத்தில் இவர் எயிட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினார். இவர் 2015-ல் புற்றுநோய் காரணமாக இறந்தார்.

பத்ம விருதுகள் 2017 – விருது பெற்ற அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்.

– வ.முனீஸ்வரன்


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.