500 / 1000 ரூபாய் தடை – விளைவுகள்

எந்த ஒரு திட்டத்தையும் அதன் நோக்கத்தை வைத்து தீர்மானிப்பதை விட அதன் விளைவுகளை வைத்துத் தீர்மானிப்பது தான் நல்லது.

அந்த அடிப்படையில் பார்த்தால் நமது இந்திய அரசின் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களைச் செல்லாது என்று சொல்லித் திரும்பப் பெறும் திட்டம் ஒரு நல்ல திட்டமா என்ற கேள்வி எழுகிறது.

இந்தியாவில் இன்னும் பெரும்பான்மையான மக்கள் முறைசாரா தொழிலில் ஈடுபடுபவர்களாகவும் தங்கள் சம்பளத்தை ரொக்கமாகக் கையில் வாங்குபவர்களாகவும்தான் இருக்கின்றார்கள்.

மேலும் பெரும்பாலான கடைகள், உணவகங்கள், பெட்ரோல் நிலையங்கள் பணத்தை ரொக்கமாகவே மக்களிடமிருந்து எதிர்பார்க்கின்றன.

எல்லோருக்கும் வங்கிக் கணக்கு இருக்கின்றது என்றாலும் தங்கள் சேமிப்பைப் பாதுகாப்பாக வைத்திருக்க மட்டுமே வங்கியைப் பயன்படுத்துவதுதான் நம்முடைய‌ வழக்கமாக இருக்கின்றது.

நிறையப் பேருக்கு டெபிட் கார்டு இருந்தாலும் ஏடிஎம்மில் பணம் எடுக்க மட்டுமே அதைப் பயன்படுத்துபவர்களாக‌ நாம் இருக்கின்றாம்.
மொத்தத்தில் இந்தியாவில் காகிதப் பணமே ராஜாவாக உள்ளது. அதிலும் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் 86 சதவீதப் பணமதிப்பைக் கொண்டு புழக்கத்தில் உள்ளன.

திடீரென ஒரு இரவில் தற்போது பழக்கத்தில் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அரசு அறிவித்தது.

அரசு ஒரு நல்ல நோக்கத்துடனேதான் 500 / 1000 ரூபாய் தடை என்று அறிவித்திருக்கின்றது எனக் கருதலாம். அரசின் நோக்கம் நல்லதுதான்; ஆனால் இந்த திட்டத்தின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதுதான் விவாதம்.

1.கறுப்புப் பணத்தை ரொக்கமாக வைத்திருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மை. ஆனால் எத்தனை பேர் பணமாக வைத்திருப்பார்கள்? தங்கமாக அல்லது நிலமாக வைத்திருப்பதை நாம் என்ன செய்யப் போகிறோம்?

கறுப்புப் பணத்தை ரொக்கமாக வைத்திருப்பவர்கள் ஓரளவுக்கு உண்டு. அவர்களில் சிலர் இந்த சூழ்நிலையிலும் ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடித்து தப்பிக்கலாம். பலர் அரசிடம் மாட்ட வேண்டும் அல்லது கறுப்புப் பணத்தை அழிக்க வேண்டும். எது நடந்தாலும் நல்லதுதான்.

 

2.500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் பணப் பதுக்கலுக்கு உதவின என்றுதான் அவற்றை நீக்குகின்றோம். பிறகு ஏன் மீண்டும் 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் விட வேண்டும்?

இந்த கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை என்பதே உண்மை. கறுப்புப் பணத்தின் கிளைகள் வெட்டப்பட்டு விட்டன; ஆனால் வேர்கள் இன்னும் உயிரோடு உள்ளன என்பதுதான் உண்மை.

 

3. நாட்டின் பணமதிப்பில் 86% இருக்கும் ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று சொன்னால் என்ன பாதிப்புகள் நிகழும் என்று அரசு திட்டமிட்டதா? மேலும் பாதிப்புகளைக் குறைக்க அரசு முன்னேற்பாடுகள் செய்ததா?

இரகசியம் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னேற்பாடுகள் செய்யாமலேயே அரசு நடவடிக்கை எடுத்து விட்டது என்றே தோன்றுகின்றது.

மக்கள் அனைவரும் வங்கிகளை நோக்கிப் படையெடுத்து விட்டனர்.ஏடிஎம் மையங்கள் சரிவர இயங்கவில்லை. எனவே பணம் எடுக்க, பணம் போட எனக் கூட்டம் எல்லா வங்கிகளிலும் அலைமோதுகிறது.

புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதிலும் அவற்றை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்வதிலும் ஏற்படும் தாமதம் மக்கள் எல்லோரையும் பாதிக்கின்றது.

நிலைமை முற்றிலும் சீராக 50 நாட்கள் ஆகும் என்று சொல்கிறார் பிரதமர்; 5 மாதங்கள் ஆகும் என்று சொல்கின்றன எதிர் கட்சிகள்.

ரொக்கப் பணமாகவே சம்பளம் வாங்கி, அப்படியே கையில் வைத்திருந்து செலவழிக்கும் மக்கள் வாழ்க்கை சிறிது காலத்திற்குக் கஷ்டம் தான்.

தற்போது திருமணம் போன்ற குடும்ப விழாக்கள் நடத்துபவர்கள் நிலையும் கஷ்டம்தான்.

ஆனால் இவர்கள் கஷ்டம் தற்காலிகமானது. பிரதமர் அவர்கள் சொன்னது போல ஒரு நீண்ட காலப் பலனுக்கான குறுகிய கால சிரமம் என்று எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்து வருபவர்கள் நிலை என்ன ஆகப் போகின்றது என்பதுதான் மிகப்பெரிய‌ கேள்வி?

விவசாயிகள், வேளாண்துறையைச் சேர்ந்தவர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் சிறுதொழில் புரிவோர் பெரும்பாலும் ரொக்கப் பணமாகவே கையாள்பவர்கள். இவர்கள்தான் நீண்ட காலத்தில் அதிகம் பாதிக்கப்படப் போகின்றவர்கள்.

இவர்கள்தான் இந்தியாவின் படிக்காத அல்லது குறைவாகப் படித்த அடித்தட்டு மக்களுக்கு வேலை கொடுக்கின்றவர்கள்.

இவர்களில் பெரும்பாலோருக்கு முறையான கணக்குப் பராமரிக்கும் அறிவோ சட்ட அறிவோ இருக்காது.

பணத்தைப் பற்றிய பயம் அவர்களுக்கு இப்போது வந்திருக்கும். அதைத் தாண்டி அவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். வங்கிகளை அவர்கள் எவ்விதம் பயன்படுத்த வேண்டும் என்று உணர்த்த வேண்டும்.

விவசாயிகள், சிறு வியாபாரிகள் மற்றும் சிறுதொழில் புரிவோர் இந்தப் பிரச்சினையில் இருந்து பாதிக்கப் படாமல் இருக்குமாறு அரசு செயல்படுமானால் அரசின் செயல்களின் நோக்கமும் விளைவும் நல்லவை என்று சொல்லலாம்.

அப்படியில்லாவிட்டால் 500 / 1000 ரூபாய் தடையின் நோக்கம் நல்லது என்று சொல்லலாம்; ஆனால் விளைவு?

– வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.