5+5 குறும்படம் சமகாலச் சமூகத்தின் அவல நிலையை எடுத்துக்காட்டும் அற்புதமான படம்.
புலனத்திலும் (வாட்சப்பிலும்) முகநூலிலும் எல்லோராலும் அதிகமாகப் பகிரப்பட்ட, பார்க்கப்பட்ட படம் இக்குறும்படம்.
ஆசிரியருக்கும் மாணவனுக்குமான இடைவெளி. ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் ஆன இடைவெளி. பெற்றோருக்கும் பள்ளிக்கும் ஆன இடைவெளி. பள்ளிக்கும் ஆசிரியருமான இடைவெளி. இத்தகைய மிகப்பெரும் வெளியை, 3.45 நிமிடத்திற்குள் விளக்கி விட எத்தனிக்கிறது 5+5 குறும்படம்.
ஏதோ ஒரு விதத்தில், இந்தப் படத்தைப் பார்க்கிற அனைவரும் இதில் ஏதாவது ஒன்றில் அடிபட்டுச் சிதைந்து இருக்கலாம். அதன் வடுக்கள் ஆறாமல் நமக்குள் வலித்துக் கொண்டே இருக்கலாம். அதன் சாயல் தான் இப்படம்.
சமூகக்கட்டமைப்பு காலம்தோறும் வெவ்வேறு வடிவங்களில் தன்னை மாற்றி அமைப்பதில் பிரியம் கொள்கின்றது.
மதிப்பீடுகளும் முறைகளும் சிதைந்து போய், வேறு வடிவம் தாங்கி நிற்கின்றன என்பதற்கு இதுபோன்ற குறும்படங்கள் சாட்சியாக நிற்கின்றன.
ஆதிநூல்களும், முதுபெரும் சிந்தனைவாதிகளும் வகுத்தளித்த சட்டங்கள், நியதிகள், நவீன வாழ்வியல் கூறுகளில் நசுங்கிப் போய் வேறு வடிவங்களில் நிலையைக் காட்டிக் கொண்டு நிற்பதை மிகத்தெளிவாக இக்கதை நமக்கு விளக்குகிறது.
மாணவன்
பாடம் சொல்லித்தரும் ஆசிரியருக்கு, மாணவர்கள் மனதால் மரியாதை தர வேண்டும் என்ற பண்பாட்டுக்கூறு இன்று மறைந்திருக்கிறது.
ஆசிரியர், வற்புறுத்தியும் தண்டித்தும் ஒன்றைச் சொல்லித் தர முயன்றால், ஆசிரியரைக் கேலியும் கிண்டலும் செய்து அவமதித்துத் தண்டிக்க முயல்வதும் இக்காலகட்டச் சூழலில் இயல்பாகி விட்டது.
ஏதோ ஒரு விதத்தில், தானே பயிலும் அளவு அறிவியல் சாதனங்கள் வளர்ந்து விட்டபடியினால், ‘ஆசிரியர் நமக்குத் தேவையில்லை’ என்ற எண்ணம் முழுமையாக மாணவர்கள் மத்தியில் காணப்படுகிறது.
பெற்றோர்
பணமும் பதவியும் சமூகஅந்தஸ்தும் உடைய பெற்றோர், தம் பிள்ளைகளை மிகக் கவனமாக வளர்க்கிறோம் என நினைத்து அதளபாதாளத்தில் தள்ளுகின்றனர்.
ஆசிரியர் தேவையானபொழுது, அடித்துச் சொல்லிக் கொடுப்பதைக் கூட அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
ஆசிரியர் தான், தன் பிள்ளைகளின் அறிவு சார்ந்த வாழ்வைத் தருகிறவர் என்பதை யாரும் நினைப்பதில்லை.
தன் அடிமையாக ஆசிரியர்களை நினைக்கும் போக்கு, இன்று சமூகத்தில் அதிகமாகிக் கொண்டே போகிறது.
பள்ளிக்கு அன்பளிப்பு என்ற பெயரில் பெரும் பணம் கொடுப்பதும், ஏதாவது என்றால் உடனே பள்ளியை விட்டு வேறு பள்ளிக்குச் சென்று விடுவேன் என மிரட்டுவதும், அதற்குப் பள்ளிகள் தாழ்ந்து பணிந்து போவதும் இதற்குக் காரணமாகி விடுகிறது.
மொத்தத்தில், அறிவுப் புலத்தில் தன் பிள்ளைகள் வளராமல் போவதற்கு பெற்றோரும் ஒரு முக்கியக் காரணமாகின்றனர்.
இதனை இப்படம் மிகச்சரியாக உணர்த்துகின்றது.
பள்ளிகள்
அறிவைப் பெருக்குவதை விட்டுவிட்டுப் பணத்தைப் பெருக்குவதை மட்டும் கருத்தாய் கொண்டு பள்ளிகள் பெரும்பாலும் இயங்குகின்றன.
பெற்றோர்களின் பணத்தில் மட்டுமே கண்ணாய் இருக்கும் பள்ளிகள், எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டி விடுகின்றன.
எனவே, பெற்றோர்கள் அவர்களின் எஜமானர்கள் ஆகிவிடுகின்றனர். மரியாதையும், மதிப்பும் அதிகமாகிக் காலடியில் விழவும் தயாராக இருக்கின்றனர்.
பள்ளி நமக்கு அடிமையானது என்பதாகப் பெற்றோர்கள் மனதில் பதிந்து போய் இருக்கிறது.
பெற்றோர் சங்கங்களின் தலையீடு பல பள்ளிகளில் அதிகமாக இருப்பதை அறிய முடிகிறது.
குறும்படத்தில் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசிரியையின் தன்மானம் கூடப் பெரிது இல்லை எனப் பெற்றோரின் பேச்சை அப்படியே கேட்கும் பள்ளி முதல்வர், பள்ளிகளின் நிலையை மிகச் சரியாகக் காட்டுகிறார்.
பள்ளிகளின் குணநலன்களை இதைவிட அருமையாகப் படத்தில் காட்ட இயலாது. நறுக்கென்று தைக்கும் இடம் இது.
எத்தனைப் பள்ளிக்கு இந்தப் படம் உரைக்கப் போகிறது?
ஆசிரியர்
பிறதொழில்களை விட மாறுபட்ட தொழிலாகப், பாவப்பட்டத் தொழிலாக மாறிவரும் தொழில் ஆசிரியர் தொழில்.
பணம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்ட பள்ளியில், வேலை பார்க்கும் ஒரு ஆசிரியர் தன்னிடமுள்ள மிகப்பெரும் அறிவுத்திறனைக் கடத்தி விட முயன்றால், அங்கு சாத்தியம் ஆகாது.
வளைந்து, நெளிந்து, நிர்வாகத்திற்கும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் பணிந்து அறிவைத் தர வேண்டிய நிலையில் ஆசிரியர்கள் இருக்கின்றனர்.
தான் கற்ற கல்வியைப் பிறருக்குச் சொல்லித் தர, எவ்வளவு கேவலமான, தரக்குறைவான நிலைகளிலெல்லாம், தனது வாழ்க்கைச்சூழலை எண்ணிக் கல்விப் பணியை அவர்கள் ஆற்ற வேண்டி இருக்கிறது.
எங்கும் எதிர்த்துப் பேச முடியாத அவலநிலை. மாணவர்களைச் சரியான பாதைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் அவர்கள் போக்கிலேயே போக வேண்டிய துர்பாக்கிய நிலை. என்ன செய்துவிட முடியும் ஆசிரியர்களால்?
மிகக் குறுகிய நேரத்தில், மிக விரிவான தளத்தின் கதையைச் சுருக்கமாகத் தெளிவாகக் கூறிய குறும்படமாக இப்படம் உள்ளது.
ஒரே ஒரு காட்சியை மட்டும் வைத்து, இன்னொரு காட்சியில் வெறும் வசனங்களால் நிறைத்து, ஒரு புதுமையைப் படைத்திருக்கிறது. ஒரே கட்சியில் எல்லாவிதமான வாழ்வியல் சூழல்களும் இக்கதையில் பேசப்படுகின்றன.
ஒவ்வொரு வசனங்களுக்கும் பின்னணியிலும் ஓராயிரம் அர்த்தங்கள் காணப்படுகின்றன. சமூகத்தைத் தோலுரித்துக் காட்டிய கதையாக இக்கதை அமைந்துள்ளது.
நடிகர்கள் ஹரிப்ரியா, கார்த்தி, ரோபார்ட், மாஸ்டர் ஜெய்குமார் ஆகியோரின் நடிப்பு அருமை. கார்த்தி கதாபாத்திரமாகவே மாறி நடித்துள்ளார். அவருக்குப் பாராட்டுகள்.
நக்கலான சிரிப்பு சிரிக்கும் மாஸ்டர் ஜெயக்குமார் இன்றைய மாணவர்களின் ஜெராக்ஸ்.
இசை மனதில் படவில்லை. வசனங்கள் நறுக்கென்று தைப்பவை.
ஆசிரியர், கடைசியாக 5+5= 55 என்று பெற்றோர் கூறிய அதே வசனத்தால், தனக்கான சம்பளத்தையும் கேட்பது, ஆசிரியர்களைப் புரட்சியாளராக மாறுங்கள் என்று இயக்குநர் கூறுவதைப் போல் உள்ளது.
ஆசிரியர்கள், மனதால் கசந்து, தனியார் கல்வி நிலையங்களில் கல்வி கற்பிக்கும் நிலை மேன்மேலும் தொடருமானால், இக்கதையைப் போல் புரட்சியாளர்களாக மாறத்தான் செய்வார்கள். அப்போது பாதிக்கப்படுவது எதிர்காலச் சமூகமாகத் தான் இருக்கும் என்பதை இப்படம் சொல்கிறது.
படக்குழு
கதை: தமிழ் மதுர
படத்தொகுப்பு: ஜெரோம்
இசை: கோகுல்
திரைக்கதை & இயக்கம்: ஜெய்.க.ர.
5+5 குறும்படம் பாருங்கள்
குறும்படத்தைக் காண கீழே உள்ள காணொளியை சொடுக்கவும்.
(குறும்படம் விரியும்)
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com
ஆசிரியர்களின் யதார்த்த நிலையை யதார்த்தமாக விளக்குகிறது விமர்சனம்
சமகாலப் பள்ளிகள் தன்னிலை மறந்து பணம் சம்பாதிப்பதையே கருத்தாய் வைத்திருக்கின்றன. மாணவர்கள் தான் நாளைய சமூகம். அவர்கள் பாழடைந்தால் சமூகம் சுடுகாடாகும். பெற்றோர்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். பள்ளிகளும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முயல வேண்டும். கொஞ்சமாவது கல்வீப்பணி ஆற்ற முயல வேண்டும். இதனை இப்படம் உணர்த்துகிறது . இயக்குனருக்குப் பாராட்டுகள்
இந்த குறும் படம் ஐயா சொன்னது போல் ஏற்கனவே வாட்ஸ்அப் மூலம் பலரால் பகிரப்பட்டு பெரும் விவாதப்பொருள் ஆகியது..
இந்த விமர்சனம் படித்த பின்பு எனக்கு வேறு பல தகவல்களை அந்த குறும்படம் புதிதாய் தருகிறது …
இந்த விமர்சகர் எப்போதும் இப்படித்தான் மூன்றாவது கண்ணை திறந்து வேறு ஒரு தளத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்..
துரதிஷ்டவசமாக நானும் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியராக பணிபுரிய வேண்டிய கட்டாயம்…
ஏராளமான மன வேதனைகளும் சொல்ல முடியாத பொறுத்துக்கொள்ள முடியாத துயரங்களும் தினந்தினம் என்னை வந்தடைகின்றன..
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா இந்த ஆசிரியர் சமூகத்திற்கு தான் சொன்னாரோ..
அவ்வளவு துயரங்களை இந்த ஆசிரிய சமூகம் அனுபவித்து வருகிறது அதுவும் இந்த கொரோனா
காலம் ஆசிரியப் பெருமக்களை கிட்டத்தட்ட அழித்தொழித்து விட்டது..
மாணவர்கள் வேண்டுமெனில் வயது முதிர்வின் மை மற்றும் அவர்களது ஹார்மோனல் செயல்பாடுகளால் தவறு செய்யலாம்…
இந்தக்கதையில் பெற்றோர்களும் கல்வி தந்தை தாய்களும் காலத்தின் பிழைகள்..
இந்த காலமே இவர்களுக்கு எதிராய் திரும்பும் காலம் வரும் ..கட்டாயம்
அப்படிதான் வரலாறு..
பாரதி சந்திரன் அய்யாவின் விமர்சனம் அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கம் எல்லாம் என் மீது நெருப்பை கொட்டி எழுப்புகிறது…
இந்த தீயில் இருந்து நான் வெளியே வந்து மறுபடியும் ஒரு தீப்பிழம்பாக உருவெடுக்க உந்துகிறது…
காத்திருப்போம்…
பாரதி சந்திரன் ஐயாவுக்கும் இனிது பதிப்பகத்தாருக்கும் நன்றி வாழ்த்துக்கள்