8 குறும்படம், ஆழமான நட்பு ஏமாற்றப்படும் பொழுது, கொல்லவும் செய்யும் விரக்தியை உடையது என்பதை விளக்குகிறது.
கொடூரமாகக் கொலை செய்யத் துடிப்பவளுக்கு ஆதரவாகப் பேசினால், உங்களுக்குப் பிடிக்குமா?.
குழந்தை சிலநேரம் பொம்மை கேட்டு அடம்பிடிக்கும். அதன்மேல் அலாதியான பிரியம் கொண்டு, ஆசை கொண்டு, எப்படியேனும் பொம்மையை வாங்கிவிட, மண்ணில் புரண்டு கூட அழும்.
ஆனால், கிடைக்காது எனத் தெரிந்ததும் விட்டு விடும். பாவம், குழந்தையென கொஞ்சநேரம் கழித்து அந்தப் பொம்மையை வாங்கிக் கொடுத்தால், வேண்டா மெனத் தூரத் தூக்கி எறியும்.
இதுதான் உளவியல். குழந்தைக்கு மட்டுமல்ல; முதியவர் வரை மனம் சில நேரங்களில் இப்படித்தானிருக்கும்.
தனக்குக் கிடைக்காத காதலி, யாருக்கும் கிடைக்கக் கூடாதெனக் கொல்லும் கதைகளைத் திரைப்படங்களில் நிறையக் காண்கிறோம்.
தன்மேல் ஆசையோடு இருக்க வேண்டிய மனைவி, பிறரோடு தொடர்பில் இருக்கையில் கணவன் கொலை முயற்சி செய்கிறான். இது உலக நடப்பாகிறது.
இக்குறும்படத்திற்கு விமர்சனம் எழுதியவர்களில் பலர், படம் புரியவில்லை; இப்படியெல்லாம் எங்காவது நடக்குமா? என்றெல்லாம் கேட்டுள்ளனர்.
புராண காலத்திலிருந்து இன்றுவரை ஆயிரம் உதாரணங்கள் இதற்குண்டு.
‘தனக்கு வேண்டியவர் தன்னைத் தவிர வேறு யாரையும் பற்றிவிடக் கூடாது’ என்பது மானிட சமூகத்தின் உளவியல் சார் எண்ணமாகும். அதுவே இப்படத்தில் விளக்கப்பட்டுள்ளது.
படத்தில் வசனங்களே கூறப்படாத கதையைக் கூறுகிறது. பூடகத் தன்மையோடு உன்னிப்பாகக் கவனிக்கும் போதே, கதை வெளியே வருகிறது. இப்படித்தான் பார்வையாளனை ஒரு கதை யோசிக்க வைக்க வேண்டும்.
நட்பு, உணர்வலைகளைத் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கும் பெரும் தடாகம். அதன் தேவைகள் மிக நீண்டது. சிலநேரம் அடிக்கவும்; சிலநேரம் அழவும் வைக்கும்.
எதிர்பார்ப்புகளின் மொத்த வடிவமும் கிடைக்க வேண்டுமென சிலாசித்து நிற்பதும், அமைய வேண்டியவொன்றைத் தனக்கானதாக உரிமை கொண்டாடுவதும் நட்பில் விவரிக்க முடியாத பேரின்பம் தரும் நிலையாகும்.
வெவ்வேறு ரூபங்கள் இணைந்து, நீண்ட காலம் பயணிக்கும் போது, பல நேர்கோடுகள் ஒரு தளத்தில் நடைபோடுகின்றன. இதற்கான மனப்போராட்டங்கள் மற்றும் சந்தோசங்கள் சொல்ல முடியாத அளவு விஸ்ரூப தரிசனங்களையுடையது. இதன் ஆழம், வேறெல்லாவற்றையும் விடவும் ஆழமானதாக அமைகிறது.
இந்த இடத்தில், பிரிவு, ஏமாற்றுதல், வெறுத்தல், துண்டித்தல் என்பவை, ஒன்றை இன்னொன்று மிகவும் ஆழமாகப் பாதிக்கும். அதன் வலி கொடூரத்தனமானதுமாக, இரண வேதனையானதுமாக அமையும் என்பதை விளக்கி இருக்கிறது இக்குறும்படம்.
நண்பர்களாக இருக்கும் போது, வசதியும் வாய்ப்பும் ஒன்றாக இருக்கும். காலத்தால் இது மாறும். அப்போதும் நண்பர்களுக்கிடையில் நட்பு மாறக்கூடாது தானே?
வசதியும் வாய்ப்பும் ஒருவருக்குக் கூடும் போது, நட்பை விட்டு விலகும்போது, இன்னொருவருக்கு ஏற்படும் விரக்தியும் கோபமும் கொல்லும் அளவிற்குக் கூடச் செல்லும் என ஆழமான உணர்வை விளக்குகிறது இக்குறும்படம்.
ஏமாற்றுதல் என்பதில் எதிர்பார்ப்பதைக் கொடுக்காததும் ஒன்றாகும்.
உணர்வுகள் பணத்தை விட அதிக மதிப்புக் கொண்டவை எனப் புரட்டிப் போட்டிருக்கிறது நட்பை.
நட்பைப் பாதியிலேயே விட்டு விட்டு, தொடர்பில்லாமல் போவது ஏற்றுக் கொள்ள முடியாத பாவச்செயலாகும். அதற்குப் ப்ராயசித்தம், நட்புக் கொண்டவரைக் கொலை செய்து விடுவது என்ற புதிய கதைத்தளத்தைக் கொண்டு வந்திருப்பது இயக்குனரின் முடிவைக் காட்டுகிறது.
குறும்படத்தில் சொல்லப்பட்ட கதை
ஒரேயொரு போன் உரையாடல் அவ்வளவு தான். அதுதான் கதை அதற்குள் இவ்வளவு பெரும் கதை.
மேகலா அப்பார்மெண்டில் தனியாக இருக்கிறாள். போன் வருகிறது.
அதில் சாரா “என் போனுக்குப் போன் போடு. என் போன் ரிங்காகும் போது, ஒரு கனைக்சன் மூலம் ஸ்பார்க் ஆகும். என் வீட்டில் சமையல் கேஸ் சிலிண்டரைக் கசிய விட்டிருக்கின்றேன். எனவே வெடித்துச் சிதறி நான் செத்துப் போவேன்” என்கிறாள்.
“நீ என்னைக் கொன்று விடவில்லை என்றால், உன்னை இன்னும் சிறிது நேரத்தில் நான் கொன்று விடுவேன்” என்றும் பயமுயறுத்துகிறார்.
இதை நம்பவில்லை மேகலா. “பாத்ரூமில் காணாமல் போன உன் செல்லமான நாய் கொலை செய்யப்பட்டு அதன் குடல் பார்சலில் கிடக்கிறது போய் பார்” என்கிறாள்.
“போன் நம்பரைக் கண்டுபிடித்து நீ என்னைக் கொலை செய்ய ஒரு விளையாட்டு விளையாடுவோம் எனப் புதிர்களைக் கூறுகிறாள் சாரா. விளையாட்டின் முடிவில் இரத்தம் கக்கிச் சாகப் போகிறாள் மேகலா. சாராவின் போனுக்கும் கால் செய்யப்படுகிறது. படம் முடிகிறது.
சொல்லப்படாத (உரையாடல் மூலம் சொன்ன) கதை
மேகலாவும், சாராவும் 9-ஆம் வகுப்பில் நண்பர்கள் ஆகிறார்கள். கல்லூரியிலும் விடுதியில் தங்கி ஒன்றாகப் படிக்கிறார்கள். நெருங்கிய நட்பு. இருவருக்குள்ளும் காதலாகிப் பெருக்கெடுக்கிறது. பிரிய முடியாதவர்களாக ஆகின்றனர்.
உலகத்திற்குப் பயந்து, மேகலா இதிலிருந்து விலகித் திருமணமும் செய்து கொண்டு, சாராவிடம் தொடர்பைத் துண்டிக்கிறாள். இது வஞ்சகம் ஆகிறது. வஞ்சகம் தீர்க்க வாட்டர் கேன்காரார் மூலம் குடிநீரில் விசம் கலந்து மேகலாவைக் கொல்ல முயற்சிக்கிறாள் சாரா.
ஓராண்டு காலம் நட்பால் பிரிந்து ஏங்கித் தவித்து விரக்தியாகி பைத்திய நிலைக்கு வருகிறாள்.
மேகலாவை அடைய முடியாத ஆசை அவளை வேறுயாருக்கும் அடையவிடாமல் கொலை செய்ய முயன்றது.
கடைசியில், இருவரும் இறந்தார்களா? பிழைத்தார்களா? என்று கூறாமலே படம் முடிகின்றது.
கதாபாத்திரப் படைப்பு
மேகலா: உலகத்திற்குப் பயந்து, இயல்பான வாழ்வைத் தேடி பெண் நட்பைத் தவிர்த்து, தன் மேல் மிகுதியான அன்பு கொண்டவரைத் திருமணம் செய்து வாழ்கிறார்.
இவர் அளவில் நட்பானவளின் மனதைச் சிதைத்தவள். தொடர்ந்து பேசி அவளை நல்வழிப்படுத்த முயற்சித்து இருக்கலாம். ஆனால், போன் நம்பரை மறக்குமளவுத் தொடர்பைத் துண்டித்து இருக்கிறாள். இது இவளின் பெரும் தவறு ஆகும்.
வேண்டுமென்றால் நட்பாவதும், தன்வாழ்விற்காக நட்பை உதறித் தள்ளுவதும் இவளின் குணமாக இருந்தமையால். இவளின் மேல் சாராவிற்கு அதிக கோபம் வந்தது.
சாரா: நட்பின் ஆழத்தை உணர்ந்தவள். பிரிக்க முடியாத அளவிற்கு அன்பையும், பாசத்தையும் பரிமாறிக் கொண்டவர்கள் சுயநலத்தால், நட்பைப் பிரிந்து திருமணம் செய்து கொண்டு போனவளை எண்ணி எண்ணி ஏங்குபவள். ஓராண்டு காலம், தோழி பேசுவாள் பேசுவாள் என எதிர் பார்த்து இருந்தவள்.
தன்னை முழுமையாக நினைவிலிருந்து அழித்து விட்டாள் என்பதை ஏற்க முடியாது, தன்னையும் தோழியையும் அழித்து விட முயன்றவள்.
பேசிக் கொண்டாவது இருந்திருக்கலாம்; தன்னை நினைத்துக் கொண்டாவது இருந்திருக்கலாம் எனப் பைத்தியமாகி விட்டவள். தன்னை உதாசீனப்படுத்திய தோழியைத் தண்டிக்க நினைத்தாள் சாரா. உளவியல் பொது விதிப்படி மனநோய்க்கு ஆட்பட்டவள்.
குறும்படத்தின் சிறப்புக்கள்
போன் நம்பரைக் கண்டுபிடிக்க விளையாடும் புதிர்கணக்கு – கதைத் தளமானது புதிய கோணமாகும்.
அறிவியல் பூர்வமான கொலை முயற்சி.
நெருடலற்ற, நேர்த்தியான, சுருக்கமான காட்சிகள் – கதையை வெளிப்படுத்தும் நளினம்.
கதைக்கு வலிமை சேர்க்கும் வசனங்கள்.
குறும்படத்தின் குறை
முகம் காட்டாத கதாபாத்திரமான சாராவின் வலியை இன்னும் விரிவாக வெளிப்படுத்தி இருக்கலாம்.
போன் நம்பரைக் கண்டுபிடிக்கச் செலவளித்த நேரத்தைக் குறைத்திருக்கலாம்.
பின்னணி இசை, காட்சியின் மகத்துவத்தைப் பார்ப்பவர் உள்ளத்தில் ஊடுருவ வைக்கவில்லை. சிறப்பான இசை இருந்திருந்தால் இன்னும் சிறப்பு
படக்குழு
தயாரிப்பு: மாத்தி மோகன்தாஸ்
எழுத்தாளர்-இயக்குனர்: ஜே ஜீவா பிரவீன்
ஒளிப்பதிவாளர்: அனுராக் ராஜன்
ஆசிரியர்: ராம்
இசை இயக்குனர்: தர்ஷன் ரவிக்குமார்
நடிப்பு: பாவப்பிரியா ரவிச்சந்திரன், சக்தி வேலவன்
8 குறும்படம் பாருங்கள்
குறும்படத்தைக் காண கீழே உள்ள காணொளியை சொடுக்கவும்.
(குறும்படம் விரியும்)
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@admin
இதுவரை சந்திரன் அய்யா விமர்சித்த, பரிந்துரைத்த குறும்படம் எல்லாம் ஒரு மென் சோகத்தை, கவிதை போன்ற மென்மையான செய்தியை அல்லது ஒரு சமூக முரண்பாட்டை அடிப்படையாக கொண்டதாய் இருந்தது.
இந்த எட்டு குறும்படம் கொஞ்சம் மாறுபட்டு ஒரு திரில்லர் கதையை சொல்கிறது. அய்யா சொன்னது போல் பின்னணி இசை, காட்சியின் மகத்துவத்தைப் பார்ப்பவர் உள்ளத்தில் ஊடுருவ வைக்கவில்லைதான். இருப்பினும் படம் தொய்வில்லாமல்தான் போகிறது.
மேகலா, சாரா பாத்திர படைப்புகள் கச்சிதம்.
பொசெசிவ்னெஸ் மற்றும் அதனால் ஏற்படும் ஏமாற்றம் எல்லாம் மனித வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கம். பலர் அதை உள்வாங்கி ஜீரணிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அல்லது கொலைக்கு துணிகிறார்கள் என்பதை படமும் அதன் விமர்சனமும் எனக்கு செய்தியாக வழங்கிச் செல்கிறது…
நல்ல குறும்படங்களை தேர்வு செய்து மிக சிரத்தையாக அதை ஆராய்ந்து எழுதும் சந்திரன் அய்யாவுக்கும், இனிது இதழுக்கும் வாழ்த்தும் நன்றியும்!
படம் குறித்த விமர்சனம் சிறப்பாக இருக்கிறது.
விமர்சனம் சிறப்பு ஐயா வாழ்த்துகள்