உருளைக் கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி?

Potato Chips

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு : 250 கிராம்
மிளகாய் தூள் : தேவையான அளவு
எண்ணெய் : தேவையான அளவு
உப்பு : தேவையான அளவு

 

செய்முறை

உருளைக்கிழங்கை நன்றாக கழுவ வேண்டும். வட்ட வடிவமாக செதிக்கிக் கொள்ளவும். பின் சுத்தமான தண்ணீரில் நன்றாக கழுவி வெள்ளைத் துணி மீது ஒவ்வொன்றாக பரப்ப வேண்டும். அப்போழுது உருளைக் கிழங்கில் உள்ள ஈரப்பசையை துணி உறிந்து விடும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடேறிய பின் எண்ணெயை ஊற்றி வட்ட வடிவமாக உள்ள உருளைக்கிழங்கை போட்டு பொன் நிறம் சிவந்தவுடன் அரிகரண்டியால் அரித்து எடுக்கவும். சுவையான உருளைக் கிழங்கு சிப்ஸ் தயார்.

ஒரு தட்டில் வைத்து மிளகாய்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து உருளைக்கிழங்கின் மீது தூவி பின்னர் காற்று புகாத ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.

 

திறந்த வைத்தால் மொரு மொருப்பு இராது. மாலைப் பொழுதில் தீனியாகவோ அல்லது சாப்பாட்டுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.

 

பட்டாணி சுண்டல் செய்வது எப்படி?

Pattani Sundal

தேவையான பொருட்கள்

காய்ந்த பட்டாணி : 3 கப்
கடுகு : 2 டீஸ்பூன்
பெருங்காயம் : 2 சிட்டிகை
கறிவேப்பிலை : சிறிதளவு
மிளகாய் வற்றல் : 6
தேங்காய்பூ : ¼ மூடி
உப்பு : தேவையானது
எண்ணெய் : 2 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை

பட்டாணியை முதல்நாள் இரவே ஊறப் போடவும். மறுநாள் சுத்தமாக கழுவி, அதிகம் தண்ணீர் சேர்க்காமல் குக்கரில் 5 விசில் வரும் வரை வேக விடவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும். அதில் வெந்த பட்டாணியை கொட்டி தேவையான உப்பு போட்டுக் கிளறவும். பெருங்காயம் தூவவும். கறிவேப்பிலையை கிள்ளிப்போட்டு, தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சுவையான பட்டாணி சுண்டல் தயார்.

 

பக்கடா செய்வது எப்படி?

Pakoda

தேவையான பொருட்கள்

கடலைமாவு : 400 கிராம்
அரிசிமாவு : 100 கிராம்
நெய் : 1 கரண்டி
எண்ணெய் : 1 கரண்டி
முந்திரிப்பருப்பு : 25 கிராம்
பூண்டு : 4 பல்
வெங்காயம் : 100 கிராம்
பச்சைமிளகாய் : 8
இஞ்சி : சிறுதுண்டு
சோடா உப்பு : தேவையான உளவு
கருவேப்பிலை : சிறிதளவு
சுடுவதற்கு எண்ணெய்

 

செய்முறை

ஒரு தாம்பாளத்தில் வெட்டிய வெங்காயம், மிளகாய், பூண்டு, இஞ்சி, நெய், எண்ணெய், உப்பு, சோடா உப்பு, போட்டு நுரைக்கத் தேய்த்து பின் இரண்டு மாவு, முந்திரிப்பருப்பு போட்டு சிறு தண்ணீர் சேர்த்துத் தேய்த்து கெட்டியாகப் பிசைந்து, எண்ணெயில் உதிர்த்து விட்டு சிவக்க வெந்ததும் எடுக்கவும். சுவையான பக்கடா ரெடி!