House Wife குறும்படம், நமது நாட்டில் பெண் பெறவேண்டிய சுதந்திரம் குறித்து நெற்றியில் அடித்தாற் போல் கூறுகிறது.
பழமைவாதம், கௌரவம், பெண் அடிமை, உரிமைக்கான போராட்டம் எனக் கதை பெரும் வளையத்திற்குள் நீண்ட அம்சங்களை அலசி ஆராய்கிறது.
காலத்தின் இடைவெளி, இரு முனைகளான மாமியார் மருமகளை வேறு வேறாக உருவாக்குவதைக் கதை அழுத்தம் திருத்தமாக கூறுகிறது.
ஒரு எதார்த்தமான வாழ்க்கை முறை அப்படியே பிசகாமல் இக்குறும்படத்தில் விளக்கப்பட்டுள்ளது.
யாவரும் எப்படி உருவாக்கப் பெறுகிறோம் என்பதை வைத்து, அவரவர் நீதியும் செயல்பாடுகளும் இன்னும் மாறுகின்றன.
எல்லோரும் எல்லாமுமான அவற்றை ஒரே நேர்கோட்டில் பார்ப்பதில்லை; பின்பற்றுவதும் இல்லை.
பெண்ணின் போராட்டம்
பெண் ஒருவள் தன் தாயிடம் குறிப்பிட்ட வயது வரையிலும் வாழ்வியல் நடத்தைகளை இனம் அறிகிறாள்.
அடுத்த நிலையில், அதே போன்ற நடத்தைகள்தான் இருக்கும் என்று நம்பிப் புகுந்த வீடு செல்கிறாள்.
ஆனால் அங்கு இருக்கும் தலைமைப் பெண் மாமியார், வேறு குறிப்பிட்ட வாழ்வியல் நடத்தைகளுக்குப் பழக்கப்பட்டவளாக அமைந்து விடும் பொழுது, உடலாலும், மனதாலும் பல்வகையில் மருமகள் சிக்கி சிதிலம் அடைகிறாள்.
இதுதான் பெரும்பாலும் பெண் இனத்தின் கதையாக இருக்கிறது. இதை அழகாக விளக்குகிறது இக்குறும்படம்.
தனக்கான ஆசை, எண்ணம், நடப்புகள் இவைகளை உதறித் தள்ளி மாமியாரின் எண்ணப் போக்குகளுக்குத் தக்கவாறு வாழச் சமூகக் கட்டமைப்பு அவளைத் தள்ளுகிறது.
ஆடவனைப் போன்ற சுதந்திரத் தன்மை பெண்ணுக்கு எக்காலத்திலும் கிடையாது. மேல்படிப்பு படித்து வேலைக்குச் சென்று சாதிக்க ஆசை.
ஆனால், அதற்கான சாவிகள் எல்லாம் அந்த வீட்டின் மாமியார் கையில் தான் இருக்கும். மாமியார்கள் நினைப்பதெல்லாம் பழமைவாதம், வறட்டுக் கௌரவமான குடும்பம். அங்கு இவை மட்டும்தான். இதற்குள் கிடந்து உழலவே பெண்ணை இந்தச் சமூகம் படுத்துகிறது.
கட்டுப்பாடுகள் காலந்தோறும் மாறும். பழங்காலத்தில் வீட்டுக்கு வரும் ஆடவரிடம் எந்தப் பெண்ணும் நேருக்கு நேர் நின்று அல்லது அமர்ந்து பேசுவது இல்லை. ஆனால் இக்காலத்தில் அவ்வாறு இருக்கச் சாத்தியமே இல்லை.
காலம் முன்னேறியிருக்கிறது. வேலை பார்க்கும் இடங்களும், வாழ்க்கை முறையும் சில விஷயங்களில் விட்டுக் கொடுக்கின்றன.
ஆனால், இன்னும் பெண்ணிடம் பழைய நடத்தைகளை போல் எதிர்பார்த்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? எவ்வளவு கொடுமையான செயலாக இது அமையும்.
தாய் கூறுவதை அப்படியே கேட்டு வளரும் பையன். மனைவியின் பழக்கவழக்கங்களைப் பின்பற்ற விரும்புவதில்லை; மதிப்பதும் இல்லை.
கூடுமானவரை பெண் மட்டுமே எல்லாவகையிலும் தன் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொண்டு, கணவரை, மாமியாரைப் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும் என்பது அழிக்க முடியாத விதியாக இன்றும் இருக்கிறது. இது மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது இக்குறும்படம்.
கதைச் சுருக்கம்
கதாநாயகன், கதாநாயகி இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கின்றனர்.
மாமியார் பழமைவாதமும் பிற்போக்கு எண்ணமும் கொண்டவர். தான் நினைப்பது போல் வீடு இருக்க வேண்டும் அதுவே ‘சிறப்பான வாழ்க்கை’ என நினைக்கிறார்.
திருமணத்திற்குப் பின் கதாநாயகி படிக்க நினைக்கிறாள். தன் பழைய நண்பர்களுடன் போனில் பேச நினைக்கிறாள். தன் தாயிடம் மனம் விட்டு பேச நினைக்கிறாள்.
கணவன் நல்லதான பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறாள். ஆனால், எதுவும் நிறைவேறவில்லை. அந்த வீட்டிற்காகத் தன்னைக் குறுக்கிக் கொள்ளுகிறாள்.
கணவனின் தங்கை மேல்படிப்புப் படிக்க அனுமதி கேட்கிறாள். அவளின் தாய் திருமணத்திற்குப்பின் படித்துக் கொள் என்கிறாள்.
இந்தச் சூழ்நிலையில், மாமியாரை மறுத்து தன் நாத்தனாருக்கு ஆதரவாகப் பேசுகிறாள், அப்பொழுது தன் இயலாமையையும் குத்திக் காட்டுகிறாள். வளர்ப்பு சரியில்லை என்று குதர்க்கமாகத் தன் கணவனை ஏசுகிறாள்.
அனைவருக்கும் மனம் சார்ந்த கோணல் வருகிறது. அப்பொழுது சாப்பிட்டுக்கொண்டிருந்த கதாநாயகியின் பையன் சாப்பிட்ட தட்டை அவனே எடுத்து கொண்டு போய் கழுவுகிறான். இச்செயலால் மாமியாரும் கணவனும் வெட்கித் தலைகுனிகின்றனர்.
ஏனென்றால், இது போல் யாரும் அவரவர் தட்டைக் கழுவுவது இல்லை. எல்லா தட்டுக்களையும் பெண்களே கழுவ வேண்டும் என்பது அவர்களின் பழமைவாதம்.
கதாநாயகி, தன் பையனிடம் நல்ல பழக்க வழக்கங்களை இக்கால கட்டத்திற்குத் தகுந்தவாறு சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கிறார். அதை மாமியாரின் முன் செய்து காண்பிக்கும் பொழுது, அவள் பெருமிதம் கொள்கிறாள்.
மாமியாரோ அப்படித் தன் கணவனை (அவர் மகனை) வளர்க்கவில்லை எனச் சொல்லாமல் சொல்லிக் காட்டியுள்ளமை கதையின் முக்கியமான இடமாகும்.
குறும்படத்திற்கு அடங்காத பெரும் கதை என்றாலும், அழகுறச் சொல்ல வேண்டிய செய்தியை நறுக்கென்று சொல்லி இருக்கிறார்கள்.
வசனம் மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. பல இடங்களில் வசனமே கதையை நடத்திச் செல்கிறது; உணர்வுகளையும் தூண்டிவிடுகிறது. படைப்பாற்றல் மிக்க வசனமாகும்.
பெண்ணுக்கு நாம் சுதந்திரத்தை வழங்க வேண்டும்; அவர்கள் உணர்வை எண்ணி மதிப்பளிக்க வேண்டும் என்கிற உணர்வு குறும்படம் பார்த்து முடிக்கிற பொழுது எல்லோருக்கும் ஏற்படுவது இயல்பாகும்.
படக் கோர்வை சரியாகக் கதையை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துச் சொல்கிறது. இசையும் அருமை.
ஒரு குடும்பப்பாங்கான கதையை கதைக்கு ஏற்றார்போல் இசைக்கப்பட்டு உள்ளது சிறப்பாகும். இன்னும் சில காட்சிகள் வெட்டப்பட்டு நேரம் குறைவாக இருந்திருந்தால் இன்னும் இக்குறும்படம் சிறப்பாக இருந்திருக்கும்.
நடிகர்களில் கதாநாயகியின் பங்கு அதிகமாக உள்ளது. அதை அவர் மிகச்சரியாகச் செய்திருக்கிறார்.
கோபம், தாகம், எதிர்பார்ப்பு, பெருமிதம், வரவர இவை இல்லை என எல்லா உணர்வுகளும் கதாநாயகியாக நடித்த நந்தினி அழகாகச் செய்துள்ளார்.
இயக்குனர் பின்புல காட்சிகளைத் திறமையுடன் வடிவமைத்துள்ளார்.
படக் குழு
எழுத்து இயக்கம் : மிதுன் RG
திரைக்கதை :அஸ்வின் சந்திரசேகர்
எடிட்டர் :கௌதம்
நடிகர்கள் :அயாஸ், நந்தினி, அனிதா, மோனிஷா, மாஸ்டர் சஞ்சித்
வாசகர் ஒருவரின் கருத்து:
சில பெற்றோர்கள் தங்களுடைய ஆண் பிள்ளைகளை ஒரு வேலைகூட சொல்லாமல் வளர்ப்பதால் அந்த ஆணுக்கு, வருகின்ற மனைவியின் கஷ்டம் தெரிவதில்லை. அந்த பெண்ணும் அவளுடைய வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்டவள் தானே.
பொறுப்பற்ற ஆண்களுக்கு பெண்கள் ஒன்றும் அடிமை அல்ல. Super concept. I like it very much.
House Wife குறும்படம் பாருங்கள்
குறும்படத்தைக் காண கீழே உள்ள காணொளியை சொடுக்கவும்.
(குறும்படம் விரியும்)

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@admin
இந்த குறும்படத்தின் விமர்சனத்தை தாமதமாகத்தான் படிக்க முடிந்தது. படித்தவுடனேயே அந்த 18 நிமிட படத்தையும் பார்க்க தூண்டியது.
இந்த விமர்சகர் எங்கிருந்துதான் இது மாதிரி படங்களை தேடி தருகிறார் என்று தெரியவில்லை.
படமும் அது பற்றிய விமர்சனமும் நம்மை அந்தக் கோணத்தில் மேலும் சிந்திக்க வைத்து விட்டு சென்று விடுகிறது.
இங்கும் பெண்ணுக்கு யார் எதிரி? யார் உரிமை கொடுக்க வேண்டும்?
ஏன் கொடுக்க வேண்டும் அவர்களே எடுத்துக் கொள்ளக் கூடாதா?
என்றெல்லாம் சிந்தனைகள் வந்து கொண்டே இருக்கின்றன.
போன வருடம் வெளிவந்த தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற மலையாள படத்தில் பெண்கள் கிச்சனிலேயே சாக வேண்டும் என்பதை தோலுரித்து காட்டி இருந்தது.
ஆண்கள் பெண்களின் வேலையை பகிர்ந்து கொள்ள முன்வருவதில்லை. அவர்களுக்கு யாரும் கற்றுத் தருவதில்லை. ஒரு டம்ளர் தண்ணீர் கூட எடுத்து தானாக குடிக்க தெரியாத எத்தனையோ ஆண்களை நான் பார்த்திருக்கிறேன். இதையெல்லாம் யார் சொல்லித் தருவது? எப்படி மாற்றுவது இந்த சமூகத்தை? என்ற கேள்விகளுக்கு இதுபோன்ற குறும்படங்கள் மண்டையில் குட்டி பதிலை தருகிறது.
இந்த குறும்பட விமர்சனம் எழுதியவரும் இந்த சமூகத்திற்கு இந்த செய்தியை சப்தம் எழுப்பி சொல்கிறார்.
கொஞ்சம் கொஞ்சமாகவாவது மக்கள் மாறட்டும்…