வாழ்க்கை குறித்த புரிதலை விளங்கிக் கொள்ளாதவர்களுக்கு அதை விளங்க வைக்கும் குறும்படம் Life – A Silent, Smart & Simple.
வாழ்க்கை என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்புகளில் இல்லை. சிறு சிறு சந்தோஷங்களில் தான் உள்ளது என்பர்.
இக்குறும்படம் ஜென் கதைகளைப் போல் மிகச் சுருக்கமாக உள்ளது. குறும்படத்தில் எந்த வசனமும் இல்லை.
இவ்வளவு பெரிய விடயத்தை வசனமே இல்லாமல் விளக்கியிருப்பது ஒரு மாபெரும் அசாத்தியம்தான்.
வாழ்க்கையை யோசித்து யோசித்து குழப்பத்துடன், புலம்பிக்கொண்டு தானும் வாழாது, பிறரையும் வாழ விடாது துரத்தி வரும் துன்பத்தோடு வாழ்வர் பலர்.
எது வாழ்க்கை என்று தெரியாமலேயே, அதன் எதிராகச் சென்று, பாதை தெரியாமல் விழி பிதுங்கி அலைவதையே, வாழ்க்கை என நினைத்து வாழ்ந்து காணாமல் போனவர் பலர்.
இதைத் தத்துவார்த்த நிலையில் விளக்கலாம். நீதி போதனையாக விளக்கலாம். உதாரணங்களுடன் விளக்கலாம்.
ஆனால், வாழ்க்கையை வாழ்ந்து காட்டி விளக்குவது எப்படி இருக்கும். அப்படி வாழ்ந்து காட்டி விளக்குகிறது இக்குறும்படம்.
வாழ்க்கை எளிதானது. வாழ்ந்து கடந்து விட வேண்டியதுதானே என்பதை ஒரே ஒரு நிகழ்வால் புரியவைக்க முயற்சி செய்கிறது இப்படம்.
சமூகம், தனி மனிதனுக்கு நிறைய இன்னல்களை வைத்திருக்கிறது. தனி ஒருவனுக்கு ஒன்றல்ல இவ்வுலக நிகழ்வுகள். அதில் பல்லாயிரம் பேரின் நிகழ்வு சம்பந்தப்பட்டிருக்கிறது.
ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியாக நிகழ்வுகளை அனுபவிப்பது பிடிக்கும். சிலருக்கு அது வேறொன்றாக பிடிக்கும்.
இவ்விடத்தில் ஓர் ஒழுங்கு தடைபடுகிறது. தடைகளை எப்படிக் கடக்கிறோம் என்பதிலேயே ஒவ்வொருவரும் சாதிக்கின்றோம். அவை ஒன்றும் பெரிய சாதனை அல்ல. அனுபவங்களின் சிறுகூறு அவ்வளவுதான்.
இந்தக் கருதுகோளை விளக்கவே பக்கம் பக்கமாய் புராணங்களும், இதிகாசங்களும், இன்ன பிற நூல்களும் நம் முன்னோரால் நமக்குப் படைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை ஒரு சிறு குறும்படம் எப்படி விளக்கிவிட முடியும்? முடியுமா?
முடியும் என முத்திரை பதித்து இருக்கிறது இப்படம்.
ஒரு காட்சி ஒரு படம்
தெருவில் சாக்கடை நீர் வழியை மறித்து நிறைந்து கிடக்கிறது. இப்பாதையை கடந்தே ஆக வேண்டும்.
ஒருவர் வருகிறார்; தன் பேண்டை மேலே தூக்கி விடுகிறார்; சாக்கடை நீரில் இறங்கி எப்பொழுதும்போல் அனுபவித்து நடந்து செல்கிறார்.
இன்னொருவர் வருகிறார்; சாக்கடை நீரில் கால் படாமல், தெருவின் ஓரம் போய் கால்நுனிகளால் தாண்டித் தாண்டிச் செல்கிறார்.
மூன்றாவதாக பள்ளிக்குச் செல்லும் ஒரு பையன் வருகிறான்; நிற்கிறான்; யோசிக்கின்றான்.
அவன் பெரிய பெரிய கற்களைச் செங்கற்களைப் பக்கத்திலிருந்து எடுக்கிறான். சரியாக நீரின் மேல் நடப்பதற்கு தகுந்தாற்போல் போடுகிறான். பிறகு அதில் கால் பதித்துச் சாக்கடையில் கால் படாமல் நடந்து செல்கிறான். அவ்வளவு தான் காட்சி.
மூன்று பேரின் இந்த நிகழ்வுகள், நமக்குப் பாடத்தைக் கற்பிக்கின்றன.
இவற்றில் எது வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன என்பதைச் சொல்லாமல் சொல்லுகின்றன. லட்சம் வார்த்தைகள் கூற வேண்டிய பொருளை வார்த்தைகளற்ற நடத்தை விளக்குகிறது.
ஒவ்வொரு நாளும் நம்மோடு கூடிய வரலாறுகளை மீட்டெடுத்து யோசித்துப் பாருங்கள். சிறிய ஒரு விஷயத்தைப் பெரியதாக்கி அது தரும் வலியைத் தாங்க முடியாமல், அழுது, புலம்பி எத்தனை வேதனை படுகிறோம்.
ஆனால், மாறி இருக்கின்றோமா? ஒவ்வொரு நிகழ்வையும் எந்தக் கோணத்தில் அணுக வேண்டும் என்று தெரிந்தும் பொல்லாத மானம், மரியாதை என்ற பொய் முனைப்பால், ”தான்” என்ற ஆணவத்தால், அகங்காரத்தால் எப்படி எல்லாம் சிதைத்து சிதைந்து விடுகின்றோம்.
”நல்லா வாழ வேண்டிய குடும்பம் சார் அது. குடியால் கெட்டுச் சீரழிந்து போச்சு”
”பையன் அப்பிராணி சார். பொண்டாட்டி நடத்தை சரியில்லை கொலைகாரனா மாறிவிட்டான்”
”15 வருஷமா இந்தக் கல்யாண மண்டபம் மூடிக் கிடக்கு சார். அண்ணன் தம்பிக்கு உள்ள சொத்துப் பிரச்சனை”
என்று காட்சிகளுக்கான வசனங்களைக் கேட்டிருப்போம். எல்லாம் புரிதலில் வந்த தவறு.
வாழ்வது ஒருமுறைதான். அதை, மகிழ்வாகவும் பிறருக்குப் பயன்படும் வகையிலும் வாழ்ந்து விட்டால் உலகம் எப்படி இருக்கும்.?
இதனை ஒவ்வொருவரும் வாழ்ந்து காட்டும்பொழுது சொர்க்கமாக இப்பூமி மாறும் என்ற கருத்தை இக்குறும்படம் விளக்குவது சிறப்பாகும்.
குறும்பட நுணுக்கம்
பள்ளிக்குச் செல்லும் பையனாக வரும் சிறுவன் அருமையாக முகபாவங்களைக் காட்டி நடித்திருக்கிறார்.
காட்சிகள் மேலிருந்து எடுக்கப்பட்ட விதம் சிறப்பு. டாப் வியூ மூலம் வைக்கப்பட்ட பிரேம் ஒவ்வொன்றும் உணர்வைச் சரியாக வெளிப்படுத்தி இருக்கின்றன.
இரு நிமிட காட்சி என்பதுதான் பெரும் சாதனை.
மூளையைக் கசக்கிப் பிழிந்து ஏதேதோ கூற விளையாமல், ‘நச்’சென்று ஒரே காட்சியில் விளக்கியிருப்பது மிக மிகச் சிறப்பாகும்.
சாக்கடைத் தண்ணீருக்குள் தெரியும் முதலாமவர் பேண்டைத் தூக்கிவிடும் காட்சியைப் பதிவு செய்திருப்பது அழகாக வந்திருக்கிறது. கேமராவின் கண்களில் கோணங்கள் மாறுபட்டிருக்கின்றன.
சிறந்த ஒளிப்பதிவு. பறவைகளின் இசை காட்சியோடு ஒன்றவில்லை. வேறு முயற்சி செய்திருக்கலாம். தண்ணீரின் ஓசையில் மூன்று பேருக்கும் வேறுபாடு காட்டி இருப்பது கதையின் அர்த்தத்தை காட்டும் நளினம்.
ஏற்றுக் கொள்வது, தள்ளிச் செல்வது, மாற்ற முயற்சி செய்வது இதில் நீங்கள் எந்த ரகம் என்ற கேள்வியைக் கேட்டு, வாழ்க்கை எளிதானது அதை வாழ்ந்து விடுங்கள் எனும் தத்துவத்தை இக்குறும்படம் மானிட சமூகத்திற்கு தருகிறது.
இந்த மூவரில் நீங்கள் யார் என்பதை உங்கள் மனம் இந்நேரம் கூறியிருக்கும். போனது போகட்டும். இன்னும் தான் வாழ்க்கை உள்ளதே? வாழ்ந்து பாருங்களேன்.
படக்குழு
கருத்து மற்றும் இயக்கம் – விக்னேஷ் வேணுகோபால்
ஒளிப்பதிவு – கலைசெல்வன்
எடிட்டிங் – சந்துரு
ஒலி – ஸ்டான்லி
பார்வையாளரின் ( Prinju. P) கருத்து
”குறுகிய வீடியோ, ஆனால் வெவ்வேறு மக்கள் எப்படி ஒரே மாதிரியான வாழ்க்கையின் சூழ்நிலையை வெவ்வேறு வழிகளில் கையாளுகிறார்கள் என்பதை நன்றாக விளக்கியுள்ளார்.
வாழ்க்கை நியாயமற்றது என்று எதுவும் இல்லை, இது வாழ்க்கையைப் பற்றிய உங்கள் பார்வையைப் பற்றியது. இங்கே ஒரு சொற்றொடர் சூட்டின் ‘விருப்பம் இருக்கும் இடத்தில் ஒரு வழி இருக்கிறது‘.
சில உரையாடல்கள் மற்றும் இன்னும் சில ஒத்த சூழ்நிலைகள் காட்டப்பட்டிருந்தால் இந்த வீடியோ இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்”.
பார்வையாளரின் (Just Breathe) கூர்மையான கேள்வி
I wonder how did he place the last rock… clearly he has not thrown them in those places… if he walked on the other stones to place the last one then why did he come back to first one..and cross again🤔… he could have just walked away.🤔🤔 Life is not that simple I guess.
Life – A Silent, Smart & Simple குறும்படம் பாருங்கள்
குறும்படத்தைக் காண கீழே உள்ள காணொளியை சொடுக்கவும்.
(குறும்படம் விரியும்)
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@admin
எங்கிருந்து பிடிக்கிறீர்கள் இதுபோன்ற குறும்படத்தை..
ஒரு இரண்டு வரி திருக்குறள் போல் இது நச்சென்று வாழ்வியலை கற்றுத் தருகிறது.
300 400 பக்கங்களுக்கு நீட்டி மழித்து,உதாரணம் சொல்லி, ஏராளமாக வார்த்தைகளை பிரயோகம் செய்து எழுதிய புத்தகங்களை வாங்கி படித்து தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தியை ரெண்டே நிமிடத்தில் பொட்டில் அறைந்தது போல் படம் சொல்லிவிடுகிறது..
கோடிகளைக் கொட்டி வெளிநாடுகளில் போய் நடிகைகளை ஆடவிட்டு படமெடுத்து அதில் ஓரிரு கருத்துக்களை பஞ்ச் டயலாக் மூலம் சொல்லி மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் திரையுலகத்திற்கு இவர்கள் எழுதிய, எடுத்த, வசனம் இல்லா இரண்டு நிமிட திருக்குறள் படம் சரியான பாடம்..
படத்தை எமக்கு பார்க்க சொல்லி தூண்டிய பாரதி சந்திரன் ஐயாவுக்கு எப்பொழுதும்போல் நன்றியும் வாழ்த்துக்களும்..
சிறந்த குறும்மடங்களை எங்களுக்கு பரிச்சயப்படுத்தும் சந்திரசேகரன் அய்யாவிற்கு நன்றிகள் பல.