“நிலா சோறு, அப்படினா என்னம்மா?” என்றாள் மூன்று வயது மகள் வாணி, தன் தாய் ரமாவிடம்.
“என்ன, திடீருன்னு நிலா சோறு பத்தி கேட்க?”
“இல்லம்மா பக்கத்து வீட்டு பரணி, சித்ரா பௌர்ணமிக்கு நிலா சோறு சாப்பிடப் போறதா எங்ககிட்ட சொன்னான். அதான் பாப்பா அதப்பத்தி கேட்கா.” என்றான் ஐந்து வயது ரமணி.
“சித்திரை மாசம் பௌர்ணமி அன்னைக்கு இரவு, எல்லோரும் வீட்ல வட பாயசத்தோட விருந்து சமைச்சு மொட்ட மாடியில, ஆத்தங்கரையில, வீட்டு முத்தத்துலன்னு கூட்டமாக உட்கார்ந்து சாப்பிடுவாங்க. அதத்தான் நிலா சோறுன்னு சொல்லுவாங்க.
வர்ற சித்திரா பௌர்ணமிக்கு, நம்ம வீட்ல எல்லாரும் மொட்ட மாடியில நிலா சோறு சாப்பிடுவோம் சரியா?” என்றாள் ரமா.
ரமா கூறியதைக் கேட்டதும் குழந்தைகள் இருவரும் “ஹே ஜாலி, ஜாலி” என்று குதித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
கிராமத்தில் பிறந்து வளர்ந்து பின்பு கல்லூரிப் படிப்புக்காக சென்னைக்கு வந்து, பின்னர் அங்கேயே வேலை வாங்கி, கல்யாணத்திற்குப் பின்பும் சென்னையிலேயே செட்டிலாகி விட்டவள் ரமா.
நிலா சோறு என்ற வார்த்தையைக் கேட்டதும், அவளுக்கு ஊரில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது சாப்பிட்ட நிலா சோறு நினைவிற்கு வந்தது. வித்தியசமான நிகழ்வு அது.
சென்னையில் யாருக்கும் அப்படியொரு நிலா சோறு சாப்பிட்ட அனுபவம் இருக்காது என்ற பெருமிதத்தோடு, பழைய நினைவுகளில் மூழ்கினாள் ரமா. (மேலும்…)