துளசி

துளசி உலகில் உள்ள சுமார் 3,50,000 தாவர வகைகளில் ஒன்று.  இது மருந்துப் பொருளாகவும் மணப்பொருளாகவும் இறைவழிபாட்டிற்கு உரியதாகவும் பயன்படுகிறது.

தாவரவியலில் செடி,கொடி,பூண்டு, மரவகைகளுக்குத் தனித்தனிப் பெயர்கள் உள்ளன. அவற்றின் இயல்புகளைக் கொண்டு தாவரங்களைப் பல குடும்பங்களாகப் பிரித்துள்ளனர். ‘ஆசிமம் சாங்டம்’ என்பது துளசியின் தாவரவியல் பெயர். இது ‘லேமியேஸி’ என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

துளசி என்னும் சொல்லைத் தமிழ்ச் சொல் ஆய்வாளர் து+ளசி எனப்பிரித்து ‘ஒப்பு இல்லாதது’ எனப் பொருள் விளக்கம் தருவர். ஆம்! துளசி ஓர் ஒப்பற்ற மருந்துப் பொருள். துளசியைக் குறித்துப் பல புராணக் கதைகள் வழக்கத்தில் உள்ளன.

துளசி கார்ப்பு சுவை உடையது. நல்ல துளசி, கருந்துளசி, செந்துளசி, கற்பூரத்துளசி, நாட்டுத்துளசி, சிவத்துளசி, சிறுதுளசி, நாய்துளசி, நிலத்துளசி, பெருந்துளசி எனத் துளசியில் பலவகை உண்டு. துளசி வகை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகை மருத்துவப் பண்பு உண்டு.

வயிற்று உளைச்சல், தாகம், கரமாந்தம், சூடு ஆகிய நோய்களை நல்ல துளசி போக்கும். நச்சு, கபம், கடிநச்சு ஆகியவற்றைச் செந்துளசி நீக்கும். இருமல், மார்புச்சளி ஆகியவற்றை கருந்துளசி குணப்படுத்தும். உடலுக்கு ஊட்டச்சத்தைக் கொடுப்பதோடு, குத்திருமல் நோய்க்கும் நாய்துளசி நல்ல மருந்தாகும். எலிக்கடி நச்சை நீக்கவும் பிற நச்சுக்கடிகளுக்கும் முள்துளசி நல்ல மருந்தாகும்.

மக்கள் வாழ்க்கைக்குப் பெரிதும் உதவும் துளசிச் செடியை, வீட்டுத் தாவரமாகவும் வளர்க்கலாம். துளசிச் செடி வகைகளை அழியாமல் பாதுகாப்பது நம் கடமையாகும். நம் நாட்டு மக்களில் பெரும்பாலோர் துளசியை பூசைப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.

Comments are closed.