அக்கறை – எம்.மனோஜ் குமார்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நுழைந்த நிகிதா ‘ஷாக்’ ஆனாள். அவளது கைப்பையை ஆட்டோவில் தவற விட்டிருந்தாள்.

சட்டென்று அவளுடன் வந்த தோழியை அழைத்துக் கொண்டு, ‘ஆட்டோ நிற்கிறதா?’ என்று பார்க்க வெளியே ஓடி வந்தாள். ஆட்டோ அங்கு இல்லை.

“இப்ப என்னடி பண்றது?” நிகிதாவிற்கு உடலெங்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது

“நீ பேமெண்ட் ஜிபே மூலமாகத் தான குடுத்த, அந்த ட்ரான்ஸ்ஷாக்ஷன் செக் பண்ணிப் பாரு. ஒரு வேள போன் நம்பர் கிடைக்கலாம்” என்று தோழி சொல்ல, நிகிதா அவசரமாக கூகுள் பே சரி பார்த்தாள்.

ஆட்டோ டிரைவரின் அலைபேசி எண் இருந்தது. நிகிதா போன் செய்ய தயங்கினாள். காரணம் ஆட்டோவில் ஏறும் போது நடந்த பிரச்சனை தான். நிகிதா ஒரு கணம் நினைத்துப் பார்த்தாள்.

” ஏங்க! பேமெண்ட் யூ.பி.ஐ-ஆ? கார்டா ? கேஷா?” கேட்டார் ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம்

“கேஷ் தான். ஏன் கேக்குறீங்க?”

” கார்டு, யூ.பி.ஐ-னா பிரச்சனை இல்ல. கேஷ்ன்னா இந்த ரெஜிஸ்டர்ல உங்க பேரு, போன் நம்பர் எழுதி கொடுங்க”

“நான் எதுக்குங்க கண்டவங்களுக்கெல்லாம் என் பேரும், போன் நம்பரும் எழுதி கொடுக்கணும்? அதெல்லாம் முடியாது! நான் யூ.பி.ஐ யூஸ் பண்ணிக்கிறேன். ஜிபேல பண்றேன்” நிகிதா நடந்த நிகழ்வுகளை நினைத்தபடியே, ஆறுமுகத்தின் அலைபேசி எண்ணிற்கு டயல் செய்தாள்.

“என்னோட கைப்பை உங்க ஆட்டோவுல மிஸ் பண்ணிட்டேன்” என்றாள்.

“ஆட்டோல தாங்க இருக்கு. நான் ரயில்வே ஸ்டேஷன் வந்துகிட்டு இருக்கேன். நான் கேஷா இருந்தா, ரெஜிஸ்டர்ல பேரும், அலைபேசி எண்ணும் எழுதச் சொன்னதுக்கு காரணமே இது மாதிரி எதையாவது மிஸ் பண்ணிட்டா அவங்கள கூப்பிட்டு பொருளை ஒப்படைக்க தான்” என்றார் ஆட்டோ டிரைவர் ஆறுமுகம்.

“சாரிங்க !” என்று அசடு வழிந்து ஆட்டோ வருகைக்கு காத்திருந்தாள் நிகிதா.

எம்.மனோஜ் குமார்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.