இன்றைய நாளில் ‘அறுவை சிகிச்சை’ என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.
உடலின் பாகங்களில் ஏற்படும் பிரச்சினைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படும் போது, அறுவை சிகிச்சையை கடைசி ஆயுதமாக மருத்துவர்கள் கையிலெடுக்கிறார்கள்.
ஒரு காலகட்டத்தில் அறுவை சிகிச்சை என்றாலே நோயுற்றவர் முதல் குடும்பத்தில் உள்ளவர்கள் வரை அனைவருமே கதிகலங்கிப் போய் பயத்தில் கையைப் பிசைந்து கொண்டு அரண்டு போயிருந்ததுபோய், இன்றைய நவீன உலகத்தில் சர்வ சாதாரணமாக அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளுமளவுக்கு விஞ்ஞான வளர்ச்சி விஸ்வரூபமெடுத்துள்ளது.
இருதய மாற்று சிகிச்சை, மூட்டு மாற்றுச் சிகிச்சை, பை-பாஸ், கர்ப்பப்பை நீக்கம், சிசேரியன், சிறுநீரக மாற்று சிகிச்சை, கண்புரை, ரெட்டீனா நீக்கம் என கலிகாலத்திற்கேற்ப பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்பெல்லாம் அறுவை சிகிச்சை என்றதும், பயத்திலேயே நோயாளியின் உயிர் பாதி போய்விடும்.
அந்த நிலை மாறி மருத்துவ உலகம் சாதனைகள் பல புரியும் நிலை வந்து விட்டது.
அறுவை சிகிச்சையில் மிகமுக்கிய பங்கு வகிப்பது அனஸ்தீசியா எனப்படும் மயக்க மருந்து.
நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின் போது வலி தெரியாமலிருக்க அனஸ்தீசியா கொடுத்து ஒரு சிறப்பு மருத்துவர் நோயாளியை நினைவிழக்கச் செய்கிறார்.
1799-ல் சர்.ஹம்ப்ரி டேவி என்பவர் ‘சிரிப்பூட்டும் வாயு’ என்று சொல்லப்படும் ‘நைட்ரஸ் ஆக்ஸைடு‘ உபயோகத்தின் மூலம் நினைவிழக்கச் செய்ய முடியும் என்பதைக் கண்டறிந்தார்.
19 ஆண்டுகளுக்குப் பின் மற்றொரு ஆங்கிலேயே விஞ்ஞானியான ‘மைக்கேல் ஃபாரடே’ வலி தெரியாமலிருக்க ‘ஈதர்‘ என்னும் திரவ வாயுவை உபயோகிக்கலாம் என்பதைக் கண்டுபிடித்தார்.
1842-ல் ‘கிராஃபோர்டு டபிள்யூ லாங்’ என்னும் அமெரிக்க மருத்துவர் இந்த ஈதர் திரவத்தை நோயாளியைச் சுவாசிக்கச் செய்து நினைவிழக்க வைத்து சிறிய கட்டி ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார்.
‘ஹொரேஸ் வெல்ஸ்’ என்கிற பல் மருத்துவர் நைட்ரஸ் ஆக்ஸைடைப் பயன்படுத்தி வலி தெரியாமல் பல்லைப் பிடுங்கிக் காண்பித்தார்.
1846-ல் பாஸ்டனிலிருந்து பல் மருத்துவர்களான டபிள்யூ.டி.ஜி.மார்டன் மற்றும் சார்லஸ் ஜாக்ஸன் மஸ்ஸாச்சுசெட்ஸ் பொது மருத்துவமனையில் ‘ஈதர்’ திரவ அனஸ்தீசியா மயக்க மருந்தின் உபயோகத்தை செய்முறை விளக்கமளிக்க, டாக்டர் ஜே.சி.வாரென் அறுவை சிகிச்சை ஒன்றை அனஸ்தீசியா கொடுத்து நோயாளிக்கு வலி உணர்வின்றி வெற்றிகரமாக செய்து முடித்தார்.
இப்படித்தான் முதன்முதலாக அனஸ்தீசியா மயக்க மருந்து பிறந்தது.
அதன் பிறகு மருத்துவ துறையில் மாற்றங்கள் நிகழ்ந்து பொது மற்றும் ‘லோக்கல்’ அனஸ்தீசியா வகைகள் வர ஆரம்பித்தன.
பொது அனஸ்தீசியா என்பது திரவ வாயுக்களான குளோரோபாம், ஈதர், எத்திலீன், பெண்டோதால் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு போன்றவைகளால் மயக்க மருந்து தயாரித்து அதை சுவாசிக்கச் செய்வதின் மூலம் நினைவிழக்கச் செய்வது.
இவ்வகை மயக்க மருந்து மூலம் நோயாளி முழுவதுமாக நினைவிழந்து விடும் நிலை ஏற்படும்.
‘லோக்கல்’ அனஸ்தீசியா என்பது நார்கோடிக் என்னும் மயக்க மருந்தை நோயாளியின் பாதிக்கபட்ட உறுப்பைச் சுற்றி ஊசிமூலம் செலுத்தியும், நரம்புகளில் செலுத்தியும் மரத்துப் போகச் செய்து அறுவை சிகிச்சையை மேற்கொள்வது.
மருத்துவர்கள் செய்யும் அறுவை சிகிச்சையை இம்முறையின் மூலம் நோயாளி கண்கூடாகவே காண முடியும்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!