அனுபவம் – கதை

அந்த தனியார் நிறுவனத்தில், நேர்காணலுக்கு வந்து சேர்ந்தான் மணிகண்டன்.

“வணக்கம் மேடம். இங்க எச்.ஆர் சுகன்யா மேடம் யாரு?” மணிகண்டன் கேட்டான்.

“நான் தான் சுகன்யா. என்ன விஷயம்? சொல்லுங்க!” சுகன்யா அவன் கண்களை பார்த்துக் கேட்டாள்.

“மேடம். இந்த கம்பெனில ஆபீஸ் பாய் வேலைக்கு இண்டர்வியூக்கு வரச் சொல்லி, எனக்கு மெயில் வந்தது. ஆனா, எனக்கு ஆபீஸ் பாய் வேலைல சேர ஆர்வமில்ல.

எனக்கு சேல்ஸ் வேலைல அனுபவம் இருக்கு. என்னை சேல்ஸ் சம்பந்தமா இண்டர்வுயூ பண்ணி என்னை வேலைக்கு எடுத்தீங்கன்னா, பெஸ்ட் பெர்மாமென்ஸ் குடுத்து கம்பெனிய உயர்த்திக் காட்டுவேன் மேடம்” சொன்ன மணிகண்டனை ஏளனமாக மேலும் கீழும் ஏற இறங்கப் பார்த்தாள் சுகன்யா.

“யாரு நீயா? நீ போட்டிருக்கிற டிரஸ்ஸு பார்க்கிறதுக்கு படுகேவலமா படிக்காத அரைவேக்காடு மாதிரி இருக்கு. நீ வேலைக்கு இண்டர்வியூ  குடுக்க வந்தியா?” சுகன்யா மணிகண்டனை ஏளனம் செய்தாள்.

“ஆமாம் மேடம். நான் படிக்காதவன் தான். நான் வெறும் பத்தாவது வரைக்கும் தான் படிச்சிருக்கேன். ஆனா, சேல்ஸ் வேலையில எனக்கு பத்து வருஷம் அனுபவம் இருக்கு. நான் பல கடைகள்ல சேல்ஸ்மேனா வேலை பார்த்திருக்கேன்” மணிகண்டன் மனம் திறந்து சொன்னான்.

“உன்னை மாதிரி முட்டாளுக்கெல்லாம் சேல்ஸ் வேலை கொடுத்தா, நல்லா படிச்சவங்க, அழகா டிரஸ் போடுறவங்க, வேலைக்கு எங்க போவாங்க? உனக்கு வேலை கிடையாது. வெளியே போ!” சுகன்யா மணிகண்டனை மேலும் அவமானப்படுத்தினாள்.

“மேடம்! அப்படியெல்லாம் சொல்லாதீங்க. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. கொஞ்சம் நல்லா யோசியுங்க. என் மேல கருணை காட்டுங்க!” மணிகண்டன் அழுவாத குறையாக கெஞ்சினான்.

“ஆமா. உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? அதான் உனக்கு வேலை கிடையாதுன்னு சொல்லியாச்சி இல்லை. நீயா வெளியே போறியா? இல்ல செக்யூரிட்டியை கூப்பிட்டு கழுத்தை பிடிச்சி வெளியே தள்ளச் சொல்லவா?” சுகன்யா மணிகண்டனை மிக மோசமாக திட்டினாள்.



மணிகண்டன் மனவிரக்தியோடு வெளியே நடக்க ஆரம்பித்தான். அப்பொழுது, அவன் எதிரில் அவனது நண்பன் சிவகுமார் வந்தான்.

“டேய் மணி. நல்லா இருக்கியாடா?” சந்தோஷ மிகுதியில் கேட்டான் சிவகுமார்.

“நான் நல்லா இருக்கேன் சிவா. உன்னை பார்க்கும்பொழுதே, நீ நல்லா இருக்கேன்னு தெரியுது”

“ஆமா! என்ன இந்தப் பக்கம்?”

“இந்த கம்பெனில சேல்ஸ்மேன் வேலைக்கு அப்ளிகேசன் அனுப்பினேன். என் படிப்ப பார்த்துட்டு, எனக்கு ஆபீஸ்பாய் வேலைக்கு இண்டர்வியூ மெயில் அனுப்பினாங்க.

நான் எச்.ஆர்கிட்ட எனக்கு சேல்ஸ்ல அனுபவம் இருக்கு. என்ன சேல்ஸ்மேனா வேலைக்கு எடுங்கன்னு கேட்டேன். அவங்க என்ன கேவலப்படுத்தி திருப்பி அனுப்பிட்டாங்க” வருத்தம் படியச் சொன்ன மணிகண்டனை பரிதாபமாய்ப் பார்த்தான் சிவகுமார். இருவரும் எச்.ஆரிடம் வந்தார்கள்.

“சார்! இவரை உங்களுக்கு தெரியுமா?” சுகன்யா சிவகுமாரிடம் பதட்டமாகக் கேட்டாள்.

“ஆமா. இவன் என் உயிர் நண்பன். நாங்க ஒரே ஸ்கூல்ல, ஒன்னா படிச்சோம். இவன் நல்லா படிப்பான். இவன் பத்தாம் கிளாஸ்ல ஸ்கூல் ஃபர்ஸ்டு.

ரொம்ப கஷ்டப்படுற ஏழை குடும்பம். இவனை மேற்கொண்டு படிக்க வைக்க இவங்க அம்மா அப்பா கிட்ட தேவையான அளவு பணமில்லை; வசதியில்லை.

குடும்ப கஷ்டம், குடும்ப சூழ்நிலை காரணமா படிப்பை நிறுத்திட்டான். குடும்பத்தை காப்பாத்த வேலைக்கு போக ஆரம்பிச்சான்.

சரி! இதெல்லாம் விடுங்க. என் நண்பனை இண்டர்வியூ எடுத்தீங்களா? இவனுக்கு வேலை கொடுத்தாச்சா?” சுகன்யாவிடம் அதிகாரமாகக் கேட்டான் சிவகுமார், காரணம் அந்த நிறுவனத்தின் எம்.டி அவன் தான்.

“சார்! அது வந்து...அது வந்து...” சுகன்யா தயங்கினாள்.

“என்ன வந்து போயி? வேலை கொடுத்தாச்சா? இல்லையா? அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க!” சிவகுமார் சுகன்யாவை கடிந்தபடிக் கேட்டான்.

“இல்லை சார். இவர் போட்டிருக்கிற டிரஸ் நல்லா இல்லை. படிப்பும் அவ்வளவா இல்லை. அதனால, இவர் சேல்ஸ்மேன் வேலைக்கு க்வாலிபை கிடையாதுன்னு, நான் இவருக்கு வேலை கொடுக்காம ரிஜெக்ட் பண்ணிட்டேன்” சுகன்யா பதறியபடி பதிலளித்தாள்.

“என்னது க்வாலிபை கிடையாதா?

ஏம்மா படிப்பு, போட்டிருக்கிற டிரஸ்சை வெச்சா ஒருத்தர ஜட்ஜ் பண்ணுவ?

இதை வெச்சி க்வாலிபையா இல்லையானு எப்படி முடிவு பண்ணுவ?

மணிகண்டனுக்கு பத்து வருஷம் சேல்ஸ்ல அனுபவம் இருக்கு. இவன் பல கடைகள்ல சேல்ஸ்மேனா வேலை பார்த்திருக்கான்.

நீ அவன இண்டர்வியூ எடுத்தியா? இல்ல, அவனுக்கு டாஸ்க், கேஸ் ஸ்டடி ஏதாவது அசைன் பண்ணினியா?

எதுவுமே செய்யாம எப்படி சாதாரணமா ரிஜெக்ட் பண்ணுவ?

அவனவன் ஊருல, வேலை சரியா கிடைக்காம கஷ்டப்படுறான். நீ சர்வ சாதாரணமா ரிஜெக்ட் பண்ணுற.

நீ இவ்வளவு நாளா படிப்பு, போட்டிருக்கிற டிரஸ்சை வெச்சி தான் ரிஜெக்ட் பண்ணிக்கிட்டு இருந்தியா?” சிவகுமார் சுகன்யாவை திட்டி கடுமையாக சாடினான்.

“இல்லை சார்! அது வந்து...” சுகன்யா தயங்கினாள்.

“நீ எதுவும் பேசாத! இனிமேல உனக்கு இந்த கம்பெனில வேலை கிடையாது. நீ வேற புது கம்பெனில வேலைக்கு சேரு. நாளையிலிருந்து நான் வேற புது எச்.ஆரை வேலைக்கு வெச்சிக்கிறேன்.

மணிகண்டனுக்கு இண்டர்வியூ தேவையே இல்லை. அவன் ஆல்ரெடி க்வாலிபைடு. அவனுக்கு வேலை கொடுத்தாச்சி. நீ போயிட்டு வா!” சிவக்குமார் சுகன்யாவை பார்த்து எரிந்து விழுந்தான்.

“சார்! சார்! ப்ளீஸ் சார்! சாரி சார்! என்னை மன்னிச்சிடுங்க சார்! இந்த தடவை தெரியாம தப்பு பண்ணிட்டேன் சார். அடுத்த தடவையிலிருந்து இந்த மாதிரி எந்த தப்பும் பண்ணமாட்டேன் சார். கொஞ்சம் கருணை காட்டுங்க சார்!” சுகன்யா சிவகுமாரிடம் கெஞ்சினாள்.

மணிகண்டனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. தனது நண்பன் இந்த கம்பெனியின் எம்.டி என்ற ஆச்சரியம் ஒருபுறம், தனக்கு வேலை போட்டுத்தர அவன் காட்டும் அதிகாரம் மறுபுறம், மணிகண்டன் மனதில் சந்தோஷம் சூழ்ந்து கொண்டாலும் சுகன்யாவை வேலையை விட்டு தூக்குவது, அவனுக்கு நெருடலாக இருந்தது.

”சிவா, என் அனுபவத்த வெச்சி எப்பிடி என்ன நீ செலக்ட் பண்ணுனியோ! அதே மாதிரி, இப்போ என்கிட்ட நடந்துகிட்டது அவங்களுக்கு ஒரு அனுபவமாக ஆகியிருக்கும். இனிமே, அவங்க யார்கிட்டயும் அப்பிடி நடந்துக்க மாட்டாங்க. அவங்கள நீக்க வேண்டாம் ” மணிகண்டன் சொன்னபோது மறுபேச்சின்றி சம்மதித்தான் சிவகுமார்.

'பலரையும் வேலைக்கு எடுக்குறவ நான். இண்டர்வியூக்கு வந்தவன திட்டி வெளியே அனுப்பினவனே, எனக்கு வேலை போட்டுத்தர ரெக்கமெண்ட் பண்ணுறான். யாரையும் குறச்சு மதிப்பிடக் கூடாது' என்ற உண்மையை புரிந்து கொண்டாள் சுகன்யா.

மணிகண்டனை நன்றிப் பெருக்கோடு பார்க்க, அவன் முகத்திலும் புன்னகை விரிந்தது.

எம்.மனோஜ் குமார்

எம்.மனோஜ் குமார் அவர்களின் படைப்புகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.