அப்படியும் இப்படியும் – சிறுகதை

அப்படியும் வாழ்க்கை

மாமனாரையும் மாமியாரையும் நினைக்க நினைக்க எரிச்சல் மண்டியது பாபுவிற்கு.

ஹாலில் ஓடிக்கொண்டிருந்த டிவி சத்தம் எரிச்சலை அதிகப்படுத்தி தலை ‘கிண் கிண்’ என வலிப்பது போல் தோன்ற குரல் எடுத்து கத்தினான்.

“ஏய் ராணி!” அவனது அலறலை கேட்டு புயல் போல் அறைக்குள் ஓடி வந்தாள் ராணி.

“என்னங்க ஏன் இப்படி கத்தறீங்க?”

“ஏன் கத்தறேனா? கேக்க மாட்ட. ஆபீஸ் டென்ஷன் முடிந்து நிம்மதியா வீட்டுக்கு வந்தா இங்கயும் அதே டென்ஷன். மணி பத்து ஆவுது. இன்னும் யார் டிவி பாக்கறது? தலையே வெடிக்குது.”

கத்திய கணவனை சமாதானப்படுத்தும் விதமாக அவன் கைகளைப் பிடித்த ராணி, “ப்ளீஸ் மெதுவா பேசுங்க. அப்பா, அம்மா காதுல விழுந்துடப்போது. நான் போய் உங்களுக்கு சூடா காபி போட்டு எடுத்து வரவா?”

“அதெல்லாம் ஒரு மண்ணும் வேணாம்.” என்று சொன்னான்.

கணவன் கூறியதை கேட்டதும் மனதில் பொங்கிய வேதனையை மறைத்து கேட்டாள் “வேற என்ன வேணும் உங்களுக்கு?”

“ம்ம்…..நிம்மதியா தூங்கணும். அது முடியுமா? இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க அப்பாவோட இருமல் ஆரம்பிச்சுடும். சை! என்ன பொழப்புடா இது.”

சலித்துக்கொண்டான் பாபு.

‘என்னவோ மாமனார், மாமியாரை காலம் முழுக்க தானே பராமரிப்பதுபோல்’ பேசும் கணவனின் மேல் ‘கபகப’ என பொங்கிய கோபத்தை அதே வேகத்தில் கட்டுப்படுத்தினாள் ராணி.

‘கூடாது. வெளியே அம்மா அப்பாவின் காதில் விழுந்தால் வேதனைப்படுவார்கள். எல்லா கஷ்டமும் என்னோட போகட்டும்.’

“என்ன. அப்படி முறைக்கிற?”

பாபுவின் குரல் கேட்டு சுயஉணர்விற்கு வந்த ராணி, “ஒண்ணுமில்லீங்க நாளை மதியம் அப்பாவும் அம்மாவும் ஊருக்கு கிளம்பறாங்களாம். அதத்தான் நெனச்சுகிட்டிருந்தேன்.”

உள்ளுக்குள் எழுந்த சந்தோஷத்தை அடக்கிக் கொண்ட பாபு, “சரி சரி எனக்கு தூக்கம் வருது.நீயும் வேலைய முடிச்சுட்டு வந்து படு.”

அவனின் மனவோட்டத்தை புரிந்து கொண்ட ராணி அறையை விட்டு வெளியேறினாள்.

சமையல்கட்டில் பாத்திரங்களை சுத்தம் செய்த பின் படுக்கையில் விழுந்தாள். தன் கணவனது பேச்சுகளை நினைத்து மனம் வெம்பிக் கொண்டிருந்தாள்.

‘இதுவே தன்னோட வீட்டினர் வந்தால் என்ன உபசரிப்பு! என்ன கவனிப்பு!

அப்பா அம்மாவிற்கு பிடித்ததா செய். சாயந்திரம் வேலய முடிச்சுட்டு அம்மாவையும் அண்ணியையும் பக்கத்துல எங்கயாவது கோயிலுக்கு அழைச்சுட்டு போய் வா.

மூஞ்சிய தூக்கி வெச்சுக்காத. எல்லார்கிட்டயும் கலகலப்பா இரு. அப்பப்பா என்ன ஒரு கட்டளை! என்ன ஒரு அதிகாரம்!

ஆனால் வருடத்திற்கு ஓரிரு முறை வரும் என் அப்பா அம்மாவிற்கு இவ்வளவு ஏச்சும் பேச்சும்.

ஆண்களே இப்படித்தானா?. என்றுதான் திருந்தும் இந்த ஆண் ஜென்மங்கள்.’ மனதில் புகைந்த மனக்குமுறலோடு சற்றே கண் மூடினாள் ராணி.

தூக்கம் வருமா? ராணிக்கு மட்டுமல்ல. இன்று பெரும்பாலான பெண்களுக்கும் இது கேள்விக்குறி தான்.

இப்படியும் வாழ்க்கை

“காயு!.. காயூ…” உற்சாகமாக அழைத்துக்கொண்டே வந்த கணவனை திரும்பிப் பார்த்தாள் கண்ணாடி முன் அமர்ந்து தலை பின்னிக் கொண்டிருந்த காயத்ரி.

“எதுக்கு இப்படி கத்தறீங்க?”

“அப்பா ஊர்லேந்து போன் பண்ணாருமா.”

“அதான் டெய்லி நடக்குதே. அப்புறம் என்னவாம்?”

“அதில்லே காயூம்மா. ரவிக்கு இங்க சென்னையில ஒரு வரன் வந்திருக்குன்னு சொன்னேன்ல. ஜாதகம் அருமையா பொருந்தியிருக்காம். பெண்ணும் பையனும் பாத்தா போதுமாம்.

அதனால நாலு நாட்கள் இங்க தங்கி எல்லாத்தையும் முடிச்சி கல்யாணத்துக்கு நாள் குறிச்சிடலாம்னு நினைக்குறாங்க. அதனால நாளைக்கு அம்மா அப்பா தம்பி இங்க வராங்களாம்.” சேகர் உற்சாகம் பொங்க சொல்லிக்கொண்டே போனான்….

அதைக்கேட்ட காயத்ரிக்கு காதில் அமிலம் ஊற்றியதுபோல் எரிந்தது.

கணவனை முறைத்தாள். “இந்த மாசம் வரதுக்கு இது ஒரு சாக்கா. போன மாசம் உங்க பங்காளி வீட்ல விசேஷம். அதுக்கு முன்மாசம் உங்கப்பாவுக்கு கண் ஆபரேஷன். எனக்கு மட்டும் பத்து கையா இருக்கு. எல்லார்க்கும் வடிச்சிக் கொட்ட…”

புலம்பித் தள்ளும் மனைவியை செய்வதறியாது பார்த்த சேகர் மென்மையாக கூறினான், “அம்மா வந்தால் உனக்கு ஒத்தாசையாத்தான இருக்காங்க.”

“என்னய குத்திக் காட்றீங்களா. வயசானவங்கள வேல பாக்க விட்டு நான் உக்காந்து சாப்பிடறேன்னு சொல்லவரீங்க இல்ல?”

“ஐயோ அப்படி இல்ல காயு”

“உங்களபத்தி எனக்கு நல்லா தெரியும். சும்மாவாச்சும் உளறாதீங்க. எல்லாம் என் தலயெழுத்து” தலையில் அடித்துக் கொண்டு உள்ளே சென்ற மனைவியை வெறுப்போடு பார்த்தான் சேகர்.

‘இதே இவள் வீட்டினர் வந்தால் இறக்கை இல்லா குறையா பறக்கிறாள். என் அம்மாவுக்கு இது பிடிக்கும் வாங்கிட்டு வாங்க.

ஒரு ரெண்டு நாள் ஆபீஸ்க்கு லீவ் போடுங்க. அப்பா அம்மாவோட வெளிய போய் வரலாம். அப்பப்பா எத்தனை கட்டளை.

ஆனால் மாமனார் மாமியார் எனும்போது அதெல்லாம் அப்படியே மாறுகிறதே. இந்த பெண்களே இப்படித்தானா? எப்போதுதான் இவர்கள் திருந்துவார்கள்?

இந்த கேள்வி கேட்பது சேகர் மட்டுமல்ல . அவனைப் போன்ற சில ஆண்களும்தான்.

ஆக வாழ்க்கை என்பது அப்படியும் இப்படியும் தானா!

மஞ்சுளா ரமேஷ்
ஆரணி