அப்பத்தா – சிறுகதை

“அப்பத்தா, பரண்ல இருக்கிற உழக்க காணல” என்று கத்தினாள் மஞ்சு.

“நல்லா பாருத்தா, அங்கதான வைச்சேன். ஒருவேள உங்க ஐயன் காச எடுத்திட்டு உழக்க எங்கேயும் போட்டுட்டானோ? சரி, மரப்பீரோலு மேத்தட்டுல சேலைக்கு அடியில சின்ன பையில காசு வைச்சிருக்கேன். அத எடுத்து கொய்யாப் பழம் வாங்கு” என்றாள் செல்லம்மா.

“சரி, அப்பத்தா”

“இப்படிதான் என்னப் பாடாப் படுத்துறான். நாத்து நட்டு, கள பிடுங்கின்னு குறுக்கு ஒடிய காட்டு வேலைக்கு போயி, மாட்டுல பால் கறந்து வித்துன்னு, நாலு காசு பார்க்குறதுக்கு என்ன கஷ்டப்படுறேன். இந்த மனுசன் அதப் புரிஞ்சுக்காம, உழக்குல இருந்த காச எடுத்திட்டு, உழக்கையுமுல்ல காணாமப் போட்டுட்டான் பாரு தங்கம்” என்று மஞ்சுவின் அம்மாவிடம் புலம்பினாள் செல்லம்மா.

“விடு அப்பத்தா, ஐயன் அப்படித்தான்னு தெரியுதுல. நீ எதுக்கு காச உழக்குல வைக்கிற?” என்றபடி கொய்யாப் பழத்துடன் உள்ளே நுழைந்தாள் மஞ்சு.

“ஆமா, உங்கிட்ட எல்லாத்தையும் சொல்லனும் பாரு. போயி கொய்யாக்காய கழுவித் தின்னு” என்று அலுத்துக் கொண்டாள் செல்லம்மா.

செல்லம்மாவும் கண்ணையாவும் மஞ்சுவிற்கு அப்பா வழி தாத்தா, பாட்டி ஆவர். அவர்கள் ஊருக்குள் இருந்த பழைய வீட்டிலும், மஞ்சுவின் குடும்பம் ஊருக்கு வெளியே கட்டிய புது வீட்டிலும் தனித்தனியே வசித்து வந்தனர்.

மஞ்சுவிற்கு விவரம் தெரிந்த நாள் முதல் கண்ணையா வேலை ஏதும் செய்வதில்லை. மஞ்சுவின் அப்பா கொடுக்கும் பணத்தையும் கை,காலில் தெம்பு இருக்கும் வரையிலும் தானே உழைத்து உண்பேன் என்று சொல்லி செல்லம்மா வாங்கிக் கொள்வதில்லை.

கண்ணையாவுக்கு இருந்த ஒரு ஏக்கர் வயலில் நெல், பருத்தி, எள் என ஏதேனும் ஒன்றைப் பயிர் செய்து வரும் வருமானத்திலும், பசு மாடு இரண்டு வளர்த்து பாலை விற்று வரும் வருமானத்திலும் வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருந்தாள் செல்லம்மா.

தங்களுடைய செலவு போக மீதமிருக்கும் தொகையை மஞ்சுவின் அப்பாவிற்கும், அத்தைக்கும் பகிர்ந்து கொடுத்து விடுவாள் செல்லம்மா.

கண்ணையா தன்னுடைய செலவுக்கு தேவைப்படும் பணத்தினை, செல்லம்மாவின் பணப்பெட்டியான பரணிலிருக்கும் உழக்கில் இருந்து அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் எடுத்துக் கொள்வார். சில நேரங்களில் உழக்கினை வீட்டில் எங்காவது எறிந்து விடுவார்.

எழுதப் படிக்கத் தெரியாத செல்லாம்மா அதனைக் கண்டறிந்து அவரைத் திட்டிக் கொண்டுதான் இருப்பாள். ஆனால் கண்ணையா அதனைப் பெரிதுபடுத்தாது ஏதும் நடக்காதது போலவே இருப்பார்.


கண்ணையா செல்லம்மாவுக்கு தாய்மாமா மகன். செல்லம்மாவுடன் பிறந்தவர்கள் இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள்.

எல்லோருக்கும் இளையவளான செல்லம்மாவை, சொந்தம் விட்டு விடாமல் இருப்பதற்காக, செல்லம்மாவின் விருப்பமின்றியே கண்ணையாவுக்கு கட்டிக் கொடுத்து விட்டாள் செல்லம்மாவின் அம்மா.

“இந்தப் பையன் சரியா சம்பாதிக்கல; அதனால கட்டிக்க மாட்டேன்னு இப்ப இருக்குற பெம்பள பிள்ளைகளல மாதிரி பேசுற தைரியம் எனக்கு அப்ப இல்ல. இல்லன்னா குடிப்பழக்கமும், கூத்தியா பழக்கமும் இருக்குற இவுகளப் போயி நான் கட்டிருப்பனா? அம்மா சொன்னா சரி; அண்ணே சொன்னா சரின்னுதான் இவுகளக் கட்டிக்கிட்டேன்.” என்று அவ்வப்போது செல்லம்மா சொல்லிக் கொண்டே இருந்ததை மஞ்சு கேட்டிருக்கிறாள்.

எவ்வளவுதான் கண்ணையாவை குறை சொன்னாலும், இரவு 10 மணிக்கு கண்ணையா வீட்டிற்கு வரவில்லை என்றால், அவருக்கு இரவு சமைத்த உணவினையும், பாலினையும் தனியே எடுத்து சூடாக இருப்பதற்காக விறகடுப்பு மேட்டில் வைத்துவிட்டு உறங்குவாள்.

கண்ணையா வந்து கதவைத் தட்டியதும், பாய்ந்து சென்று கதவைத் திறந்து விட்டு உணவையும், பாலையும் கூடத்தில் வைத்துவிட்டு படுத்து விடுவாள். சிலநாட்கள் கண்ணையா உணவையும் பாலையும் சாப்பிடுவார். பலநாட்கள் பாலை மட்டும் குடித்துவிட்டு சாப்பாட்டை அப்படியே வைத்து விடுவார்.

இரவில் கண்ணையா உண்ணாமல் வைத்திருந்த உணவை காலையில் செல்லம்மா உண்ணுவாள். கண்ணையாவுக்கு புதிதாக சமைத்த உணவினையே கொடுப்பாள். செல்லாம்மாவின் வீட்டில் தங்கும் சமயங்களில் மஞ்சுவும் இதனை கவனிக்கத் தவறியதில்லை.

“ஏன் அப்பத்தா, ஐயன் நைட்ல சாப்பிடாம வைச்ச சாப்பாட்ட, அவருக்கே வைக்க வேண்டியது தான. நீ ஏன் காலையில சாப்பிடுற? பழைய சாப்பாட்ட வைச்சாத்தான், நமக்காக எடுத்து வைச்ச சாப்பாட்ட சாப்பிடாம இருக்கக் கூடாதுங்குறது அவருக்கு தெரியும்.”என்று மஞ்சு கூறுவாள்.

“ஐயோ, பாவம் போவுது விடு” என்று சொல்லி சிரிப்பாள் செல்லம்மா.

“உனக்கு கொஞ்சம்கூட ஒத்தாச இல்லாத இவருக்குப் போயி இப்படி சப்போட் பண்ணுற” என்று மஞ்சு கோபப்படவே செய்வாள். ஆனால் செல்லம்மா அதை எல்லாம் காதில் வாங்க மாட்டாள்.

நாட்கள் நகர்ந்தன. கண்ணையாவுக்கு சிக்குன்குனியா காய்ச்சல் வந்து காது கேட்காமல் போனது.

வெளியில் சென்றால் வண்டி, பஸ் ஹார்ன் அடித்தால் தன்னால் ஒதுங்கி வழிவிட முடியாது என்று எண்ணி அவர் அவ்வளவாக வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தார். காது கேட்காத குறை அவரை மனநோயாளியாக்கியது.

கண்ணையாவுக்கு உணவளிப்பது, குளிக்க வைப்பது என அவரை கவனித்து கொள்ளவே செல்லம்மாவுக்கு நேரம் சரியாக இருந்தது. ஆதலால் பால் மாட்டை விற்று விட்டாள். வயலையும் குத்தகைக்கு விட்டாள்.

மாட்டிலிருந்தும் வயலிலிருந்தும் வந்த பணத்தை பேங்கில் டெப்பாசிட் செய்து, வட்டியை மட்டும் மாதந்தோறும் செலவுக்கு எடுத்துக் கொள்ளுமாறு செய்து கொடுத்தார் மஞ்சுவின் அப்பா.

கண்ணையா மனநோயாளியாக வீட்டில் இருந்த போது விழித்திருக்கும் நேரங்களில் கதவு, ஜன்னலை அடிப்பதும், தண்ணீரைக் கொட்டுவதும் செல்லம்மாவை அடிப்பதுமாகவே இருந்தார். அவருக்கு உணவு கொடுப்பதும், குளிக்க வைப்பதும் செல்லம்மாவுக்கு பெரிய சவாலாகவே இருந்தது.

“கடவுள் இவர சீக்கிரம் எடுத்துக்கிடனும். என்னால அடி தாங்க முடியல” என்று சொல்லி செல்லம்மா அழுவதைப் பார்க்கும் போது, மஞ்சுவும் ‘கடவுளே இவர சீக்கிரம் அழச்சிக்க’ என்று வேண்டுவாள்.

ஆடி அமாவாசை அன்று கண்ணையா இறந்து விட்டார். செல்லம்மா கண்ணையாவின் உடல் அருகே மௌனமாகவே இருந்தாள். இழவுக்கு வந்தவர்கள் அனைவரும் கண்ணையாவுடன் குடும்பம் நடத்திய செல்லம்மா மிகவும் திறமைசாலி என்றே பேசினார்கள்.

மஞ்சு வந்திருந்தவர்கள் கூறுவதை கவனித்துக் கொண்டே இருந்தாள். ‘இவ்வளவு நாட்கள் கழித்து எப்படியோ அப்பத்தாவிற்கு ஐயனிடமிருந்து விடுதலை கிடைத்தாயிற்று.’ என்றே மஞ்சு எண்ணினாள்.

கண்ணையாவின் இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடுகள் நடந்தன. கண்ணையாவின் உடலை குளிக்க வைத்து புதுசட்டை, வேஷ்டி கட்டி மாலைகள் போட்டனர்.

“சரி, இடுகாட்டுக்குத் தூங்குங்க. செல்லம்மா, கடைசியா முகத்த பார்த்துக்க” என்று ஊர் பெரியவர் சொன்னார்.

செல்லம்மா உச்சி முதல் பாதம் வரை கண்ணையாவின் உடலை தடவி விட்டாள். கடைசியாக நெற்றியில் முத்தமிட்டாள்.

மஞ்சுவின் அத்தை மகள் “உன்ன அடிச்சு கஷ்டப்படுத்துனத எல்லாம் மறந்துட்டியா அப்பத்தா? அந்தாளுக்கு போயி முத்தம் கொடுக்க?” என்று அழுது கொண்டே கேட்டாள்.

“ம்..ம்… தூக்குங்க தூக்குங்க” என்ற ஆண்களின் கூச்சலில் அந்த குரல் வெளியே கேட்கவில்லை. செல்லம்மாவின் செயல் மஞ்சுவிற்கும் ஆச்சர்யம் அளித்தது.

அன்று இரவு மஞ்சு செல்லமாவிடம் “இனிமே உனக்கு ஐயனோட தொந்தரவு கிடையாது அப்பத்தா. நீ நிம்மதியா இருக்கலாம். எங்ககூட புதுவீட்டுக்கு வந்திரு சரியா?” என்று கேட்டாள்.

செல்லம்மா பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

கண்ணையாவிற்கான காரியங்கள் முடிந்ததும் மஞ்சுவின் அம்மாவும், அப்பாவும் செல்லம்மாவை தங்களுடன் வந்து புதுவீட்டில் தங்கக் கேட்ட போது “ஐயனோடு நான் இருந்த இந்த வீட்லயே இருக்கேன். எனக்கு சாப்பாடு மட்டும் கொடுத்து விடுங்க.” என்று மறுத்து விட்டாள்.

அடுத்து வந்த நாட்களில் செல்லம்மா ஒருவேளை உணவை மட்டுமே உண்டாள். எல்லோரும் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. கண்ணையா இறந்து பதினாறாவது நாள் காலையில் செல்லம்மா இறந்து விட்டாள்.

“கண்ணையா கொடுமைக்காரனா இருந்தாலும், செல்லம்மாவால அவரப் பிரிஞ்சு இருக்க முடியல. அதனால அவருகிட்டே போயிட்டா” என்று செல்லம்மாவின் இறப்பிற்கு வந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.

‘அப்பத்தா கொடுமைக்கார ஐயனோட எப்படித்தான் வாழ்ந்து முடித்தாளோ? புரியாத புதிராக இருக்கிறதே’ என்று யோசித்தாள் மஞ்சு.

வ.முனீஸ்வரன்

2 Replies to “அப்பத்தா – சிறுகதை”

  1. சிறுகதை அருமை
    தாம்பத்தியம் ரகசியமானது.
    வேப்பம் பூவில் தேன்துளி இருப்பது போல தான் அது
    அந்த துளியையே அமுதமாக நினைப்பவர்கள் அப்பத்தா போன்றவர்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.