அப்பாசாமிக்கு அட்வைஸ்

ஒருவன் தனியாக நடைப்பயணம் மேற்கொள்கிறான்.

அவன் செல்லும் வழியில் ஓர் மரத்தை கண்டு ஓய்வெடுக்க நினைத்து, மரத்தின் அருகே உறங்குகிறான்.

உறக்கத்தின் போது கனவு தோன்றுகிறது. கனவினிலே ஓர் பெண்ணிடம் காதல் மலர ஆசைப்பட, சப்பென்று ஓர் அடி மேலே விழுகிறது.

திடீரென ஆழ்ந்த உறக்கத்திலிருந்து மீண்டெழுகிற ஆள் நடந்தது யாதென்று அறியாமல் திகைக்க, அருகில் ஓர் வழிப்போக்கன் நிற்கின்றான்.

அவனைப் பார்த்து “நீ யார்?” கேட்க,

“வழிப்போக்கன்.”

“உன் போல் நானும் ஓர் வழி போக்கன்தாய்யா. சரி நீ யார்? நான் உன்னை இந்த பக்கம் பார்த்ததே இல்லையே”

“யாருயா நீ? இங்கே உறங்குகிறாய்.”

“இது நான் தினமும் களைப்பாறும் இடம்யா” என முதலாமவன் கூறினான்.

பின், உறக்கம் தெளிந்து, மெல்ல குரலை உயர்த்தி “ஐயா எனது பெயர் அப்பாசாமி” எனத் தொடங்கினான்.

“சரி எந்த ஊரு? என்ன விசேசமாக இந்த பக்கமா வந்தீரு?” என கேட்டான் வழிபோக்கன்.

“ஐயா நான் அருகிலுள்ள கிராத்தை சேர்ந்தவன். கால் போன போக்கில் போகலாம்னு வந்தேன். இங்க உறங்கிட்டேன்” என்றான் அப்பாசாமி.

“சரி இப்படியே எங்க போலானு முடிவு?”

மிகுந்த சலிப்புடன், “க்ம்..எங்கே போறேன்னு சொல்ல”

“ஏன்?” என்றான் வழிபோக்கன்.

“என் கதையைக் கேட்டா எனக்கே சிரிப்பு தான் வருது….சில சமயம் வெறுப்பும் வருதுங்க…..”

“….ஆ! அப்படியா…அப்படி என்ன ஆச்சி?”ன்னு கேட்டான் வழிபோக்கன்.

அப்பாசாமி பேச ஆரம்பித்தான்.

“நான் எப்போதும் எனது நண்பர்களுடன் எனது பொழுதைக் கழிப்பேன். அப்போது சில தகவலை பற்றி கலந்துரையாடுவோம்.

இதைப்போன்று ஒரு நாள் பேசும் போது நான் உண்மையான ஒன்றை சொல்லும் போது அனைவரும் இல்லை என மறுத்தனர்.

நான் அதை நம்புகடா அப்பா சாமிகளே என்றேன். அப்படி பேசுவதே என் வழக்கமாக மாறியது. நாளடைவில் என்னை அப்பாசாமி என அழைத்தனர்.

ஆனால் எனது பெயரோ…..அய்யாசாமி….. பாருங்க நீங்க கேட்கும் போது கூட நான் எனது பெயரை அய்யாசாமினு சொல்லாமல், அப்பாசாமி…ன்னு …சொல்லிட்டேன். அந்த அளவுக்கு என்னை மாற்றிவிட்டது. “

“ஓகோ. சரி இப்போ என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?” என்றான் வழிபோக்கன்.

“அடப்போங்க! எதுவும் வேணாம்னுதான் நான் இப்படி வந்து தூங்குறேன்; நண்பர்களை வெறுத்து விட்டேன்” என்றான் அப்பாசாமி.

“அப்பாசாமி, நண்பர்களிடம் உரையாடுங்கள்.

ஆனால் அளவுடன் வைத்து கொள்ளுங்கள்.

உறவை முறித்து கொள்ளும் அளவுக்கு உங்களது வாதிடும் முறையினைக் கொண்டு செல்லாதீர்.

ஆரோக்கியமான உரையாடல் நல்லது. ஆனால் அதன் அளவு முக்கியம்” என்றான் வழிப்போக்கன்.

“போதும்டா சாமி. உன் அட்வைஸ். நான் வரேன்” சொல்லிவிட்டு, மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கினான் அப்பாசாமி.

சதிஷ்

அ.சதிஷ்ணா
உதவிப் பேராசிரியர்
அருணை மருந்தியல் கல்லூரி
திருவண்ணாமலை
கைபேசி: 8438574188

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.