அவல் கட்லெட் அருமையான மாலை நேர சிற்றுண்டி. இதனைத் தனியாகவோ, தேநீருடனோ சுவைக்கலாம். இதனை எளிதாகச் செய்யலாம்.
சுடசுட இதனைச் சுவைக்கும்போது இதனுடைய சுவை அலாதி. திடீரென விருந்தினர் வருகையின் போதும் இதனைச் செய்து அசத்தலாம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை விரும்பி உண்பர். இனி சுவையான அவல் கட்லெட் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அவல் – 1 கப் (தோராயமாக 50 கிராம்)
கடலை மாவு – 1/2 கப்
உருளைக்கிழங்கு – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – 1 கொத்து
மிளகாய் வற்றல் பொடி – 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா பொடி – 1 டீஸ்பூன்
தாளித்து கொட்ட
நல்ல எண்ணெய் – 1 ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கீற்று
பெருங்காயம் – 1 சிட்டிகை
அவல் கட்லெட் செய்முறை
அவலில் தண்ணீர்விட்டு இரண்டு அல்லது மூன்று தடவை நன்கு அலசிக் கொள்ளவும்.
பின்னர் அவலில் இரண்டு கையளவு தண்ணீரைத் தெளித்து ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

உருளைக் கிழங்கனை வேக வைத்து தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் கடலை மாவினைச் சேர்த்து, மிதமான தீயில் நன்கு வாசனை வரும் வரை வறுத்து ஆறவைத்துக் கொள்ளவும்.

கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலையை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் ஊற வைத்த அவல் மற்றும் வறுத்து ஆறவைத்துள்ள கடலை மாவினைச் சேர்க்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும் அதில் சீரகம், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயப் பொடி சேர்த்து தாளிதம் செய்யவும்.

தாளித்தவற்றை அவல் மற்றும் கடலை மாவுடன் சேர்க்கவும்.

பின்னர் அதில் மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய் வற்றல் பொடி, மஞ்சள் பொடி, உப்பு, கரம் மசாலா பொடி மற்றும் நறுக்கிய கொத்த மல்லி இலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.


எல்லாவற்றையும் ஒருசேர நன்கு பிசைந்து கொள்ளவும்.

பின்னர் அதிலிருந்து சிறிதளவு மாவினை எடுத்து வட்டமாக அல்லது படத்தில் உள்ளபடி விரல் வடிவில் ஒரே அளவாக இருக்கும்படி தட்டிக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவு எண்ணெயை ஊற்றி காய விடவும்.
எண்ணெய் காய்ந்ததும் அதில் தட்டியவற்றைச் சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்.

ஒருபுறம் சிவந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு சிவந்ததும் எடுத்து விடவும்.

சுவையான அவல் கட்லெட் தயார்.

இதனை அப்படியோ அல்லது சாஸ் தொட்டுக் கொண்டோ சாப்பிடலாம்.
குறிப்பு
அவல் கட்லெட் செய்ய சிவப்பு அவல், தட்டை அவல், வெள்ளை அவல் என ஏதெனும் விருப்பமான ஒன்றைத் தேர்வு செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் எண்ணெயில் முழுவதுமாக பொரித்தும் கட்லெட் தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!