மதுரை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கும் சரஸ்வதிக்கு, அப்படி ஒரு ஆசை மனதில் தேங்கியிருந்தது.
38 வயது தாண்டிய பிறகும், அந்த ஆசை தொடர்வது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“என்னம்மா உன் ஆசை? எங்ககிட்ட சொன்னா தானே புரியும்”
“சொன்னா சிரிப்பீங்க”
“அப்ப சொல்லாத” என்று சொல்லி விட்டுச் சென்றான், பிளஸ் டூ படிக்கும் அவளது மூத்த மகன் கோபால்.
“அப்பா இறந்த பிறகு அம்மா மறுமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார்களோ என்னமோ?” கேட்க மனதில்லாமல், மனதிற்குள் நினைத்துக் கொண்டான் இளைய மகன் தினேஷ்.
தன்னுடன் வேலை பார்க்கும் சக தொழிலாளர்களிடம் சொன்னால், “இந்த வயசுல உனக்கு இது தேவையா? உன் பிள்ளைங்க வளர்ந்துட்டாங்க” என்று கேவலமாகச் சிரிப்பார்கள்.
‘வருவது வரட்டும் யார் என்ன சொன்னாலும், அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை’ என்று சரஸ்வதி ஒரு முடிவுக்கு வந்தாள்.
.
வேலை முடிந்து தினமும் 5 மணிக்கு வீடு திரும்பும் சரஸ்வதி இப்போது வீடு திரும்ப ஏழு மணிக்கு மேல் ஆனது.
“ஏம்மா தினமும் லேட்டா வர்ற?” கோபால் கேட்டான்.
.
“இனிமே அப்படித்தான்” திமிராகவே சொன்னாள் சரஸ்வதி.
அம்மா ஏதோ தப்பான காரியம் செய்கிறார்கள் என்ற சந்தேகம் இருவர் மனதிலும் எழுந்தது.
அன்று பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிய இருவரும் அம்மாவை கண்காணிக்க புறப்பட்டார்கள்.
துப்புரவு வேலை முடிந்து சரஸ்வதி ‘விறுவிறு’வென்று நடக்க ஆரம்பித்தாள். இருவரும் அவர்கள் பின்னால் தூரத்தில் நடந்து கண்காணித்தார்கள்.
சரஸ்வதி ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்த அந்த வீட்டிற்கு நுழைந்தபோது உஷாரானார்கள். ஜன்னல் வழியே உள்ளே எட்டிப் பார்க்க அசந்து போய் நின்றார்கள்.
.
சரஸ்வதி பத்தாம் வகுப்பு பரீட்சை எழுத டியூஷன் படித்துக் கொண்டிருந்தாள்.
“பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதப் போறத என்கிட்ட சொல்லி இருந்தா நானே உனக்கு சொல்லி தந்திருப்பேனே” என கோபால் தாயிடம் கேட்டான்.
மறுநாள் மகன் கோபால் அம்மாவுக்கு டியூஷன் எடுக்க, பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்ணோடு வெற்றி பெற்றாள் சரஸ்வதி.
எம்.மனோஜ் குமார்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!