ஆன்மீகம் என்றால் அன்புதான். அன்பு செலுத்த தெரியாதவர்களால் நிச்சயமாக பக்தி செலுத்த முடியாது.
அன்பில்லாதவன் கடவுளை அறிய முடியாது. ஏனென்றால் அன்புதான் கடவுள்.
‘அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார், அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்‘ என்பது நம் திருமூலர் திருமந்திரமாகும்.
‘உங்களுக்கு தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்’ என்று பாரதி நம்மைப் பார்த்து சுட்டு விரல் நீட்டி உத்தரவு போடுகிறான்.
அன்பில் துன்ப நினைவுகள் அழியும். சோர்வு அழியும், பயம் அழியும். ஆனால் அன்பு ஒருபோதும் அழியே அழியாது.
எங்கோ வானத்தில் நீண்ட தூரத்தில் இருக்கும் நிலாவில் கூட ஈரப்பசை இருக்கிறது. ஆனால் இங்கே பக்கத்தில் உள்ள மனித உள்ளத்தில் தான் அது இல்லை.
ஈரம் – அன்பு. அன்பு சுரந்தால் தான் மனம் விசாலமாகும். மனிதன் என்பவன் தெய்வமாகலாம். அன்பு தான் மனம். அன்பு தான் குணம். அன்பு தான் மதம். இது எல்லா மதங்களுக்கும் சம்மதம்.
திருமூலர் அருளிய திருமந்திரத்தில் ஒரு மந்திரம்
‘யாவர்க்குமாம்
இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம்
பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம்
உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம்
பிறர்க்கு இன்னுரைதானே’
இந்த மந்திரம் வேதத்திற்கு சமமானது ஆகும். எளிமையான ஆனால் வலிமையான பதப்பிரயோகம். இதில் உபதேசிக்கப்பட்ட தர்மங்களை யாரும் எவ்வித கஷ்டமும் இல்லாமல் எப்போதும் செய்யலாம்.
பகவான் பக்தியைத் தான் பார்க்கிறார். பக்தன் என்ன கொண்டு வந்திருக்கிறான் என்று பார்ப்பதில்லை.
சில பச்சிலைகளைப் போட்டால் பரமேஸ்வரன் திருப்தி அடைந்து விடுகிறார். இதை யாரும் செய்யலாம்.
ஒரு பிடி புல்லை கோமாதாவான பசுவுக்கு ஊட்டலாம். இதில் முப்பத்து முக்கோடி தேவதைகளும் திருப்தி அடைந்து விடுகிறார்கள். இதை யாரும் எளிதில் செய்யலாம்.
தான் சாப்பிடும் உணவில் ஒரு கைபிடி ஒரே ஒரு கைப்பிடி அடுத்தவனுக்கு வழங்கலாம். இதுவும் யாவரும் செய்யக் கூடிய எளிமையானதே.
இவைகளில் எதையும் செய்ய முடியாவில்லையா பரவாயில்லை. அடுத்தவரோடு பேசும்போது கடுப்படிக்காதே; இதமாகப் பேசு; பதமாகப் பேசு.
இல்லையென்னு சொன்னாலும் அதையும் இனிமையாகச் சொல். இதையாவது செய்யலாமே. நாம் மூச்சடக்க வேண்டாம். பேச்சடக்க வேண்டும்.
நம்மை கடைத்தேற்றக் கூடிய எளிமையான அறங்கள் இவை. இதில் ஒன்றையாவது செய்து பார்க்கலாம்.
ஒரு கை புல், ஒரு கை பொரி அன்போடு படைத்தால் விநாயகர் வசப்படுவார். சில துளசி இலைகளில் மகாவிஷ்ணு வசப்பட்டு விடுவார்.
சில துளி கங்கா தீர்த்தத்தால் பரமேஸ்வரன் உச்சி குளிர்ந்து விடுவார். சின்ன சின்ன அகல் விளக்குகளில் மகாலட்சுமி பிரசன்னமாகி விடுகிறாள்.
இப்படி அன்போடு செய்யப்படும் பக்தியால் இறைவனை அடையலாம். எனவே ஆன்மீகம் என்றால் அது அன்பு தான்.