அலுவலகம் முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் ரோகிணி.
வீட்டில் வரன் பார்க்க துவங்கிவிட்டனர். இனியும் சொல்லாமல் மூடி மறைப்பது ஆபத்து. இன்றே என் முடிவை அம்மா அப்பாவிடம் சொல்லிவிட வேண்டும்.
தாமோதருக்கு இது பற்றி இரு தினங்களுக்கு முன்பே விவரமாக கடிதம் எழுதி அனுப்பியாகி விட்டது. இனி அப்பா, அம்மா சம்மதம் மட்டும் கிடைத்தால் போதும்.
மனம் விடாமல் யோசித்துக்கொண்டிருக்கும் போதே வீட்டினருகில் வந்து விட்டிருந்தாள் ரோகிணி.
வண்டியினின்று இறங்கி வீட்டினுள் நுழைய முற்பட்டவள் ஒருகணம் அதிர்ந்து நின்றாள்.
உள்ளே ஹால் சோபாவில் உட்கார்ந்தபடி அப்பா, அம்மா, எதிரே தாமோதர், கையில் அவளின் கடிதத்தை பற்றியபடி.
உதட்டை அழுந்த கடித்த ரோகிணி, ‘இவர் ஏன் இப்படி சொல்லாமல் வந்து விட்டார்? அப்பா, அம்மாவிடம் பேசி, பிறகு சொல்கிறேன் என்றேனே’ மனதினுள் எண்ணியபடி உள்ளே மெதுவாக நுழைந்தாள் ரோகிணி.
அவள் வந்ததை கண்ணுற்ற தாமோதரன் அவளை நோக்கி முறுவலித்தான்,
“வா ரோகிணி இப்படி உட்கார்” அவன் கைகாட்டிய இருக்கையில் அமர்ந்தாள் ரோகிணி, பார்வையை தழைத்திருந்தாள்.
“ஸாரி ரோகிணி, உன்கிட்டே பதில் ஏதும் சொல்லாம அத்தை மாமா கிட்ட பேச வந்திட்டேன்.” சொன்ன தாமோதரன் அவளின் பெற்றோர் வசம் திரும்பினான்,
“உங்க எதிரே உட்கார்ந்து பேசற தகுதி எனக்கில்ல, வேறு வழியில்லை, சில விஷயங்களை மனம் விட்டு பேசியே ஆகணும்னு முடிவு எடுத்து வந்திருக்கேன்.”
எந்தவித பதிலும் சொல்லாமல் அவர்கள் மௌனிக்க தாமோதரன் தொடர்ந்தான்.
“உங்க மூத்த பொண்ணு அகிலாவை எனக்கு கட்டிக் கொடுத்தீங்க, அப்பா, அம்மா இல்லாத எனக்கு நம்பிக்கையா அகிலாவை கல்யாணம் பண்ணி வச்சீங்க. உங்க நம்பிக்கையை நான் காப்பாத்தல,
ஒருநாள்கூட நிம்மதியா இருக்க நான் அவளை விடல, ஏகப்பட்ட சித்ரவதையை என்னால அனுபவிச்சா. நந்தன் பிறந்தபிறகு கூட நான் மாறல. அவளோட கஷ்டங்களை பார்த்து நீங்க எவ்ளோ துடிச்சிருப்பீங்க,,?
எப்படிப்பட்ட அரக்கனா நான் இருந்திருக்கேன். இந்த அரக்கன் மனுஷனானது அந்த ஒருநாள்தான் . என் கண் எதிரிலேயே அகிலா சாலை விபத்துல அடிபட்டு உயிர்விட்டதை என்னால…” முடிக்க இயலாது தொண்டை கரகரக்க,
கேட்டுக் கொண்டிருந்த அகிலாவின் அம்மா விக்கி அழ, அப்பா சமாதானப்படுத்தினார், ரோகிணியின் கண்களில் கட்டுப்பாடின்றி கண்ணீர் பொங்கியது.
மூவரின் சோகத்தை உணர்ந்தவனாக தாமோதரன் விட்ட இடத்திலிருந்த தொடர்ந்தான்.
“உங்களை கஷ்டப்படுத்தணும்னு நான் இதையெல்லாம் சொல்லல. எனக்குள்ள இருக்கிற ரணம் ஆறக்கூடாது, அதற்கு மருந்தும் போட்டு ஆத்தக்கூடாது, அப்படீன்ற முடிவுல தான் நான் இருக்கேன்.
அந்த ஒருநாள் நான் மனிதனா என்னை உணர்ந்த நாள். மறுபடியும் நான் அனாதையாகிப் போனேன். இருக்கும்போது என்னால சுகப்படாத அகிலா இறக்கும்போதும் துடிதுடித்துதான் போனாள்.
அவளின் எல்லா துன்பத்திற்கும் நான் ஒருவனே காரணம், நான் உயிரோடவே இருக்கக்கூடாதுன்னுதான் நினைச்சேன்,
ஆனா அகிலா எனக்கு கொடுத்த பொக்கிஷம் நந்தன், அவனை வளர்த்து ஆளாக்கற பெரிய. பொறுப்பு எனக்கு இருக்கு.
என்னைய மாதிரி மிருகமா வளர்க்காம, இந்த சமுதாயத்துல வாழத் தகுதியான நல்ல ஆண்மகனா அவனை உருவாக்கறதுதான் எஞ்சி இருக்கிற என் வாழ்க்கையோட லட்சியம்.” பேசிவிட்டு சற்றே கண் மூடி அமர்ந்திருந்தான்.
அகிலாவின் அப்பா சம்பந்தம் தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசினார்.
“எல்லாம் அகிலாவின் விதிதான் வேறென்ன சொல்ல”
மெதுவாக. கண்களைத் திறந்த. தாமோதரன், “விதின்னு சொல்லி அது மேல பழி போட்டு நான் சமாதானம் ஆகமாட்டேன் மாமா. இப்ப கூட ஏன் இதைப்பத்தி பேச வந்தேன்னா ரோகிணியோட இந்த லெட்டராலாதான்.” கையிலிருந்த கடிதத்தை காட்டினான்.
‘அக்காவோட இடத்துல வேறு ஒரு பெண் வர்றத விட நானே உங்களை கல்யாணம் பண்ணிகிட்டா, நந்தனுக்கு மாற்றாந்தாய் பிரச்சனையாவது இல்லாமல் போகும்.
அக்கா, நந்தன் இவர்களுக்காக நான் எடுத்த முடிவு பற்றி அம்மா, அப்பாவிடம் பேசிவிட்டு நேரில் உங்களை சந்திக்கிறேன்’ என்று எழுதியிருந்தாள்.
தாமோதரன் முடிக்குமுன்னே இடையில் நுழைந்தார் சம்பந்தம்,
“ரோகிணி மாதிரியே நாங்களும் இதுபத்தி யோசிச்சோம். அகிலாவோட இழப்பிற்கு பிறகு உங்க நடவடிக்கையை பார்த்து நாங்களே அப்படித்தான் நினைச்சோம். ரோகிணிகிட்ட கூட சொல்லல, ஆனா அவ எங்களை விட முந்திகிட்டா”
அவர் சொன்னதைக்கேட்டு கசப்பாய் புன்னகைத்தான் தாமோதரன்.
“என் மனசில இருக்கிற ரணங்கள் ஆறக்கூடாதுன்னு நான் சொல்றதே மறுமணம் பண்ணிக்க கூடாது அப்படீன்ற அர்த்தத்துலதான்.
நந்தனைத் தவிர எனக்கு வாழ்க்கையில ஏதுமில்ல. அதுவுமில்லாம அகிலா அடிக்கடி சொல்லுவா ரோகிணி தனக்கு தங்கை இல்ல, மூத்த மகள்ன்னு. அப்போ எனக்கும் அப்படித்தானே.
அவளுக்கு என்னை மாதிரி இல்லாம நல்ல குணமுள்ளவனா பார்த்து கல்யாணம் பண்ணனும். அந்த பொறுப்பை என்னை நம்பி கொடுப்பீங்க இல்ல?”
தயக்கத்துடன் கேட்ட தாமோதரனனைப் பார்த்து சம்மதமாய் தலையசைத்து கை கூப்பினார் சம்பந்தம்.
அங்கே இறுக்கம் குறைந்து இலகுவான சூழல் உருவானதாக உணர்ந்தாள் ரோகிணி.
மஞ்சுளா ரமேஷ்
ஆரணி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!