இந்த நிலை மாறுமோ?

இன்றைக்கு பெண் இனம் வியக்கத்தக்க வளர்ச்சி பெற்று விட்டது. ஆணுக்குச் சமமாக எல்லாத்துறைகளிலும் சவாலாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் பெண்கள். அசைக்க முடியாத சக்தியாக ஓங்கி நிற்கிறார்கள். இவையெல்லாம் மறுக்கமுடியாத உண்மைதாம்.

பழங்கால வரலாற்றை ஒப்பிட்டு பார்க்கும்போது இது அசுர வளர்ச்சிதான்.

கற்காலத்தைப் பற்றி வரலாற்றில் உற்று நோக்கும்போது ஆண் வெளியே சென்று அலைந்து திரிந்து வேட்டையாடி கொண்டு வரும் பொருட்களை சமைத்துக் கொடுக்கவும், இன விருத்திக்காகவும் மட்டுமே கருதப்படும் நிலையாக பெண் இருந்து வந்திருக்கிறாள்.

நாள்பட்ட வளர்ச்சியில் நாகரிகம் தோன்றிய காலகட்டத்தில், பெண் கல்வி கற்கவும், இசை இலக்கிய ஈடுபாட்டிலும், ஏன் வீரத்திலும் சிறந்த பெண்கள் போர்முனைகளிலும் பங்கு பெற்று பெரும்புகழ் எய்தி இருக்கிறார்கள்.

ஆனால் இவையெல்லாம் 10 சதவீதத்திற்கும் குறைவுதான். வெகு சில பெண்மணிகள் தாம் கல்வியிலும், வீரத்திலும், தீரத்திலும் தங்கள் பங்கினை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அவர்களுக்கான வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருந்தன.

பெரும்பாலான பெண்மணிகள் திறமைகள் இருந்தும் வெளிப்படுத்த முடியா இருட்டறைகளுக்குள்ளே முடக்கப்பட்டிருந்தனர்.

ஆணாதிக்கமே அன்றைய காலகட்டத்தில் ஓங்கி இருந்தது. பெண் எதையும் துணிந்து சொல்லக்கூடிய நிலை அவளுக்கு மறுக்கப்பட்டிருந்தது.

‘பொட்டச்சிக்கு என்ன தெரிந்து விடப்போகிறது’ என்கிற அகங்காரம் நிறைந்த இருட்டுலகமாகவே இருந்த காலகட்டம் அது.

நாம் இருக்கும் தற்போதைய காலச்சூழலில் அந்தக் காலத்தைப்போல் தற்போது பெண் முடக்கப்படவில்லை என்பதை யாவரும் மறுக்க முடியாது.

இந்த காலப் பெண், ஆணைவிட கல்வியறிவு அதிகம் பெற்றவளாக பொருளாதாரத்தில் ஆணையும் விஞ்சியவளாக எல்லாத் துறைகளிலுமே பெருமைபட ஓங்கி நிற்கிறாள்.

படித்த பெண்கள் மட்டுமல்ல. படிக்காத பெண்களும் ஏன்? வயது முதிர்ந்த பெண்கள்கூட மூலையில் சோம்பிப் போய் உட்காராமல் அவளின் தகுதிக்கேற்ற வேலையில் தன்னை பிணைத்துக் கொண்டு ஆணை நம்பி வாழ வேண்டிய சூழலில்லாமல் தன் கையே தனக்கு உதவி என்கிற நிலையில் வாழ்கிறார்கள்.

இப்போது நம் முன்னே ஒரு கேள்வி எழுகிறது. அப்படியெனில் பெண் முழுமையாக, ஆணைப் போன்று கடமைகளும் உரிமைகளும் பெற்று விட்டாளா?

மேலோட்டமாக பார்க்கும்போது ஆம் என்றுதான் தோன்றும். உள்ளார்ந்து ஆராயும்போதுதான் இல்லை என்று சொல்லத் தோன்றும்.

என்னதான் ஆணுக்கு நிகராக பெண் வீட்டின் பொருளாதார பலத்தை தாங்கினாலும் வீட்டின் அத்யாவசிய பணிகள், குழந்தைகள் பராமரிப்பு என்று வரும்போது பெண்தான் அவற்றை எல்லாம் செய்ய வேண்டும் என்று முன் நிறுத்தப்படுகிறாள்.

எத்தனையோ பெண்கள் வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டு முடித்துவிட்டு, பின் அலுவலகத்திலும் சென்று ‘மாங்கு மாங்கு’ என்று உழைத்திடும் வர்க்கத்தினராகவே இருக்கின்றனர்.

அதே நேரத்தில் பெண்ணின் கடினத்தை புரிந்து கொண்டு அவளுக்கு பக்கபலமாக இருக்கின்ற ஆண்களும் இருக்கின்றனர்.

குடும்ப பொருளாதாரத்தில் தனது சுமையைக் குறைத்திடும் மனைவிக்காக வீட்டுப் பணிகளில் அக்கறையுடன் ஈடுபடும் கணவன்மார்களும் உள்ளனர். ஆனால் இவையெல்லாம் வெகு சொற்பமே.

எண்பது சதவீதம் பெண்கள் வீட்டிலும், வெளியிலும் அதிக அளவில் உழைப்பவர்களாகவே இருப்பதுதான் நிதர்சனம்.

இந்த நிலை எப்போது மாறும்? எப்படி மாறும்? இதற்கான பதில் நம்மிடமேதான் உள்ளது.

குழந்தை வளர்ப்பில் பாகுபாடு காட்டாமல் வளர்த்தல் அவசியம். ‘இது ஆண் வேலை’ ‘இது பெண் வேலை’ என்று பிரித்துப் பாராமல் இரு இனக்குழந்தைகளையும் சிறுவயது முதலே வேலைகளை பழக்கி விடவேண்டும். அப்போதுதான் பெண் மட்டுமே செய்யவேண்டும் என்ற நிலைப்பாடு மாறும்.

இயற்கை சில விஷயங்களை, பெண்ணுக்கு மட்டுமே என்று விதித்திருக்கிறது. அந்த நிலைகளை மாற்ற முடியாது. அதை அவள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால் அவளுக்கு உதவக்கூடிய பல விஷயங்களை நம்மால் பகிர்ந்து கொள்ள முடியும் தானே?

நமது பெண்ணோ, மருமகளோ, மனைவியோ, சகோதரியோ, தாயோ அவளுக்கு பக்கபலமாக இருந்து ‘பெண்தான் இல்லப் பணிகளை செய்ய வேண்டும்’ என்கிற முத்திரையை உடைத்தெறிய வேண்டும். ஆணிற்கு பெண் இளைப்பில்லை என்கிற பாரதியின் வரிகளுக்கு உயிர் கொடுக்க வேண்டும்.

மஞ்சுளா ரமேஷ்
ஆரணி

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.