சென்னையின் பிரபல ஜவுளிக்கடையில் இருந்தனர் கோமளம் குடும்பத்தினர்.
ஆயிற்று, அனைவர்க்கும் ஜவுளி எடுத்து முடித்தாயிற்று, இனி கிளம்ப வேண்டியதுதான்.
மகன் அஜய் பில் பணம் சரிபார்த்து கொடுக்க எத்தனிக்கையில் மருமகள் சுஜா, அவனது காதில் ஏதோ கிசுகிசுப்பதைப் பார்த்தாள் கோமளம்.
அஜையும் அவள் சொல்வதை கேட்டு தலையாட்டி விட்டு அம்மாவிடம் வந்தான்.
“அம்மா, சுஜா உள்ளாடை வாங்க மறந்திட்டாளாம், நாங்க போய் எடுத்திட்டு வந்திடறோம், இந்த பில்லுக்கு பணம் தரேன், கட்டிட்டு பார்சல் வாங்கிட்டு போய் கார்ல உட்கார்ங்க” சொல்லிக் கொண்டே பணத்தை அம்மாவிடம் நீட்டினான் அஜய்.
“சரிப்பா, அவனிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்ட கோமளம் அதை கல்லாவினுள் செலுத்தினாள்.
இன்று என்னவோ கடையில் அவ்வளவாக கூட்டம் இல்லை.
பணத்தை செலுத்திவிட்டு துணிப்பையைப் பெற்றுக் கொண்ட கோமளத்தின் பார்வை எதிரே இருந்த சிசிடிவி திரையின் மீது எதேச்சையாகப் பதிந்தது.
அதில் அஜய்யும் சுஜாவும் சேலைப்பிரிவில் நின்றபடி புடவையை விரித்து பார்த்த வண்ணமிருந்தனர்.
‘உள்ளாடை தானே வாங்கறேன்னு சொன்னாங்க, ஆனா புடவையைப் பார்த்திட்டிருக்காங்க, தேவையான துணிவகை அனைத்தும் எடுத்தாகிவிட்டது. இப்ப போய் யாருக்கு எடுக்கறாங்க? அதுவும் என்னிடம்கூட சொல்லாமல்’
யோசித்தவாறே துணிப்பையை பெற்றுக் கொண்டு காரில் சென்று அமர்ந்தாள் கோமளம்.
‘ஒருவேளை சுஜாவின் அம்மாவிற்கு சேலை எடுக்கறாங்களோ? ஏன் அதை என்னிடம் சொன்னால் தான்என்ன? தடுக்கவா போகிறேன்.
மருமகளை மகள் போல் பார்க்கிறேன்னு சிலர் சொல்லுவாங்க, ஆனா நான் சிநேகிதியா பார்க்கறேன்னு சுஜாகிட்டயே சொல்லியிருக்கேனே!
சுஜா கூட அடிக்கடி சொல்வாளே, அத்தை நீங்க ஜெனரேஷன் கேப் இல்லாம பழகறீங்க, நான் அஜய்ய விட உங்ககூட ரொம்ப சௌகர்யமா ஃபீல் பண்றேன் அப்படின்னு சொல்வாளே!
ஆனா அவ அம்மாவுக்கு புடவை எடுக்கறத ஏன் என்கிட்ட மறைக்கணும், என்னைப்பற்றி அவள் புரிந்து கொண்டது அவ்வளவு தானா?’
தலையை வலிப்பது போல் இருந்தது கோமளத்திற்கு.
அரைமணி பொறுத்து துணிப்பையோடு வந்த மகனும் மருமகளும் எடுத்த புடவையைப் பற்றி ஏதும் பேசாமல் மௌனித்தது அவளது வருத்தத்தை மேலும் அதிகரித்தது.
இரவு மௌனமாக இருளில் கழிந்து. பகல்பொழுது ஆதவனின் வருகையால் சற்றே சிவந்திருந்தது.
‘விடிந்து ரொம்ப நேரமாயிட்டதா?’ வாரிச் சுருட்டியபடி எழ ஆரம்பித்தாள் கோமளம்.
“அத்தை, பொறுமை! பொறுமை!” சொல்லியவாறு சிரித்தபடி வந்தாள் சுஜா,
“இன்னைக்கு நீங்க எந்த வேலையும் செய்யக்கூடாது. எல்லாம் நான் பார்த்துக்கறேன்.”
சுஜாவை கேள்வியோடு நோக்கினாள் கோமளம்.
“இன்னைக்கு என்ன?”
“இன்னைக்கு என்னவா?” மீண்டும் அழகாக சிரித்த சுஜா, மென்மையாக கூறினாள்.
“இன்னைக்கு என் அத்தைக்கு அதாவது என் இனிய சிநேகிதிக்கு பிறந்தநாள். அதற்கு என் பரிசாக இந்த புடவை.” பின்புறம் மறைத்திருந்த புதுப்புடவையை நீட்டினாள்.
“பிடிச்சிருக்கா அத்தை?”
‘நேற்று கடையில் எனக்கு தெரியாமல் எடுத்தது இதற்குத் தானா?’
புடவையோடு சேர்த்து மருமகளையும் ஆரத் தழுவிக் கொண்டாள் கோமளம்.
மஞ்சுளா ரமேஷ்
ஆரணி