இன்னொரு வானவில் – இரஜகை நிலவன்

மாலையின் மயக்கத்தில் பூமி இருளாகிக் கொண்டிருந்தது. வானம் சிவப்பாகிக் கொண்டே போக சூரியன் போதை மயக்கத்தோடு கடலில் விழுந்து கொண்டிருந்தான்.

எதிர் வீட்டில் நிச்சயதார்த்தத்திற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன‌. இந்துமதி இறுக்கமாக நிம்மதியில்லாமல் நடந்து கொண்டிருந்தாள்.

“இந்து, நீயில்லாமல் எனக்கு ஒரு வாழ்க்கையா? அதை நான் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது” கையில் முத்தமிட்டு விட்டுச் சென்ற குமரனை நினைத்து அவளுக்குள் குமைந்தாள்.

அந்தக் குமரனுக்கு எதிர் வீட்டு மாலினிக்கும்தான் திருமண நிச்சயதார்த்தம் நடக்கப் போகிறது.

“இந்துமதி உன்னைத்தவிர இந்த உலகத்தில் அழகானப் பெண்ணே கிடையாது. அதிலும் உன் கண்கள்…” குமரன் சொன்ன வசனங்கள் ஞாபகத்தில் வர அவள் கண்களிலிருந்து கண்ணீர் பொங்கி வழிந்தது.

‘எப்படியெல்லாம் குமரனோடு சேர்ந்து வாழ்க்கையை இரசிக்கலாமென்று கனவுகளோடு இருந்தபோது, பணத்திற்கு ஆசைப்பட்டு இப்படி மாலினியைத் திருமணம் செய்து கொள்ள எப்படி சம்மதித்தான்?’ என எண்ணிய வேளையில் வாசலில் நிழலாட நிமிர்ந்து பார்த்தாள். சித்தப்பா சுரேஷ்.

“நீ இன்னும் கிளம்பலியா? எட்டு மணிக்கு ரயிலைப் பிடிக்கணும். போய் புதுசா வேலையிலே சேரப் போறே. ம்.. சீக்கிரம் கிளம்பு” என்றார்.

“இதோ புறப்பட்டு விடுகிறேன் சித்தப்பா, கொஞ்சம் இருங்க. அம்மா சித்தப்பா வந்திருக்காங்க. காபி கொண்டாங்க” என்று சொல்லி விட்டு உள்ளே போனாள்.

இரவு முழுவதும் இரயிலில் பயணத்தில் தூக்கம் வரவில்லை.

‘குமரன் என்னைத் துரத்தித் துரத்திக் காதலித்தாயே! எல்லாமே போலி வேசம்தானா? சீ! நீயெல்லாம் ஒரு மனிதனா? உன்னை என் மனதிலிருந்து துடைத்தெறிய வேண்டும்’ என்று கருவினாள்.

“ஆனால் இந்தப் பாழாப்போன மனசு கேட்கமாட்டேன் என்கிறதே. எவ்வளவு விழுந்து விழுந்து சிரித்துப் பேசி எளிதாக என் இதயத்தில் இடம் பிடித்தாய்? இந்த உலகமே நீதானே என்று என்னை ஒரு எல்லைக்குள்ளே போட்டுவிட்டு இப்போது நிறைய வரதட்சணை கிடைக்கிறது என்று என்னை மறக்க முயன்றவனே’ என்று மாய்ந்தாள்.

இந்துமதி அந்த இன்சூரன்ஸ் கம்பெனிக்கு வந்து ஒர் ஆண்டு ஆகிவிட்டது. குமரன் அடிக்கடி வந்து இதயத்தில் வந்து சிரித்து விட்டுப்போன தருணங்கள் கொஞ்சம் வலிகளை தந்தாலும் அவள் வரிந்து கட்டிக்கொண்டு அவனை மறக்க முயல, நிறைய வேலைகளை இழுத்துப் போட்டிக்கொண்டு அதிகமாக வேலைகள் செய்ய, கம்பெனியின் எம்.டி.அவளுக்கு மூன்று முறை சம்பள உயர்வும், பதவி உயர்வும் கொடுத்து விட்டார்.

இரவில் வந்து வீட்டிலே சமைத்துக் கொண்டிருக்கும் போது, அலுவலகத்தில் புதிதாக வந்து சேர்ந்திருக்கும் அடுத்த டிபார்ட்மெண்ட் மேனேஜர் வசந்தன் சிரித்துக் கொண்டே பேசியது மனதிற்குள் சிறிய சலனத்தை ஏற்படுத்தியது.

தலையை ஆட்டிக் கொண்டு தோசை மாவை வார்த்துக்கொண்டு இருக்கும் போது காலிங்பெல் சப்தம் கேட்டு வாசலுக்கு வந்து கதவைத் திறந்தாள்.

வசந்தன் நின்று கொண்டிருந்தான். கையில் ஒரு ரோஜாப் பூங்கொத்தோடு “ஏய்… வசந்தன் என்ன விசயம்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

“இன்று உனக்குப் பிறந்த நாள். பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று கைக்குலுக்க கை நீட்டியவன் “என்ன மாவுக் கரண்டியோடு?” என்றான்.

“சாரி. என் பிறந்தநாள் எனக்கே மறந்து போச்சு. உள்ளே வாங்க” என்றவள் கை கழுவி விட்டு வந்து அவன் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டு. “என் பிறந்த நாளை எப்படிக் கண்டுபிடித்துக் கொண்டீர்கள்?” என்று சிரித்தபடி கேட்டாள்.

“இது ஒண்ணும் பெரிய விசயமில்லை இந்துமதி, அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்து கொண்டேன். நான் சொன்ன விஷயம் பற்றிப் பேசி விட்டுப் போகலாம்ன்னு” என்று நாற்காலியில் அமர்ந்தான்.

ஜூஸ் கொண்டு கொடுத்து விட்டு “நான் ஏற்கனவே வாழ்க்கையில் காதலில் தோற்றவள்” என்றாள் மேலே பார்த்துக் கொண்டே.

“இதை ஏற்கனவே சொல்லி விட்டீர்கள். இப்போது என்னோடு வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள முடியுமா? என்று கேட்கத்தான் வந்திருக்கிறேன்” என்றான் வசந்தன்.

மனதை கொஞ்சம் கண்களை மூடி தேடி, அங்கே ஒரு வானவில் வந்து விட்டுப் போனதை உணர்ந்த இந்துமதி “எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்க” என்றாள்.

“தாராளமாக” என்று சிரித்துக் கொண்டு எழுந்தான் வசந்தன்.

இரஜகை நிலவன்
மும்பை

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.