புது மடிப்புக்
கலையாத
புத்தகத்தையேனும்
படுக்கையில்
கிடக்கும்
மாமாவிற்கான
நலம் விசாரிப்பையேனும்
மனைவி சொல்லி
அலுத்துப் போய்விட்ட
குழாய்
ஒழுகலையேனும்
“ஒரு போன் கூட
இல்லை”
குற்றம் சாட்டும்
சுற்றங்களின்
குசல விசாரிப்பையேனும்
வேலையைக்
காரணம் காட்டி
ஒத்திப் போட்ட
அப்பாவின் கண்
பரிசோதனையையேனும்
நேரமில்லை
என்ற பாவனையில்
மறுத்துக் கொண்டிருக்கும்
மகளின்
சினிமா ஆசையையேனும்
பணமில்லை என்ற
காரணத்தால்
பாதியில்
விட்டு விட்ட
அம்மாவின் குலசாமிக் கோவில்
கோரிக்கையையேனும்
சோம்பல்
காரணமாக
தள்ளிப் போட்டுக்
கொண்டிருக்கும்
அறை ஒழுங்குபடுத்தலையேனும்
ஆள்காட்டி
அட்டையின்
அடையாள
மாற்றத்தையேனும்
கோவில் கொடையில்
கோபித்துக் கொண்ட
பொறந்தவளிடம்
சமாதானப்
பேச்சுவார்த்தையையேனும்
இன்றே முடித்திடலாம்
என்றே நினைக்கிறேன்.
விடுமுறைகளை
விழுங்கும்
காட்சி ஊடகங்களில்
தொலைந்து
மீள்கையில்
அலாரம் அடிக்கிறது
அலுவலகம் செல்ல
அன்றே முடித்திருக்கலாமோ
என்று என் மீதே
கோபம் வருகையில்
“என்றேனும் ஒருநாள் முடித்திடலாம்”
என்னை நானே
தேற்றிக் கொள்கிறேன்
அ.ஈடித் ரேனா
சிறப்பு
மிகவும் சிறப்பு!