கேன்டீனில் சுந்தரியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்த ரமேஷைப் பார்த்ததும், அழுது கொண்டே கம்பெனி வாசலை விட்டு வெளியேறினாள், செல்வி.
செல்வி அழுதுகொண்டு போவதைப் பார்த்த அகிலன், அவளின் பின்னே ஓடி வந்தான்.
“செல்வி! செல்வி! நில்லு. ஏன் இவ்ளோ வேகமாப் போற? உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றபடி மூச்சிரைக்க ஓடி வந்தான் அகிலன்.
“ஏன் யாருக்குமே என்ன பிடிக்க மாட்டேங்குது?”
“அப்படில்லாம் சொல்லாத, உன்ன எல்லோருக்கும் புடிக்கும்.
நீ எதுக்கும் கவலப்படாத, நீ வேணா பாரு ஒருநாள் அவனாவே உன்ன தேடி வருவான்” என்று அவளை ஆசுவாசப்படுத்தினான்.
ஆறுதல் வார்த்தைகளுக்கு இடையே பேருந்து வரவே, பேருந்தில் ஏறினார்கள். பேருந்து சென்றுகொண்டே இருந்தது.
திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய், “ஆமா நீ ஏதோ ஒரு விஷயம் சொல்லணும்னு சொன்னியே, என்னனு சொல்லு” என்றாள், செல்வி.
“ஆ… அது வந்து… ஒரு கவித எழுதி இருக்கேன் படிச்சிப் பாத்து, எப்டி இருக்குன்னு சொல்லு” என்று பாக்கெட்டில் மடித்து வைத்திருந்த பேப்பரை அவளிடம் நீட்டினான்.
“எல்லோருக்கும் காதல் பிடித்திருக்கிறது.
ஆனால், காதலுக்கு ஒரு சிலரை மட்டுமே பிடித்திருக்கிறது.
இப்போதைக்கு நீயும் நானும்” என்று எழுதியிருந்தது.
அந்தக் காகிதத்தின் ஓரத்தில் “ஐ லவ் யூ” என்றும் எழுதப்பட்டிருந்தது.
படித்து முடித்த அவள் ஒன்றுமே சொல்லவில்லை. மௌனமாகவும் பதட்டமாகவும் இருந்தாள்.
எதுவும் பேசாமல் இருவரும் பேருந்தை விட்டு இறங்கி அவரவர் வீட்டிற்குச் சென்றார்கள்.
அகிலன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான். ஏதேதோ தனக்குள்ளே பேசிக் கொண்டிருந்தான். வெட்கம் ஒரு பக்கம், அவள் என்ன சொல்வாளோ என்கிற பயம் ஒரு பக்கம் அவனை உருட்டிக் கொண்டிருந்தன.
ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் அவளின் பதிலுக்காக வாட்ஸ் ஆப்பை திறந்து வைத்தபடி தூங்காமல் காத்திருந்தான்.
சரியாக மணி 2:30 இருக்கும். ஒரு நோட்டிபிகேஷன் சத்தம் காதில் விழுந்தது.
கண்களைக் கசக்கிக் கொண்டே தூக்கக் கிறக்கத்தில் வாட்ஸ்ஆப் மெசேஜைப் பார்த்தான் அகிலன்.
“எல்லோருக்கும் காதல் பிடித்திருக்கிறது. ஆனால், காதலுக்கு ஒரு சிலரை மட்டுமே பிடித்திருக்கிறது. இப்போதைக்கு நீயும் நானும்”
பாவம் அகிலன்… சந்தோசம் வெகு நேரம் நீடிக்கவில்லை.
மகிழ்ச்சியின் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த அகிலனின் கனவில் நீர் வாரி இறைத்து விட்டது செல்போன் அலாரம்.
கனவைக் கலைத்த செல்போனைத் திட்டிக்கொண்டே அவசர அவசரமாய்க் கம்பெனிக்குக் கிளம்பினான்.
கேன்டீனில் டீ ஆர்டர் செய்துவிட்டு எதார்த்தமாகத் திரும்பிப் பார்த்தான்.
கனவுக்கு மாறாகச் செல்வியும் ரமேஷும் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. “டீ”யைக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு கோபமாக வெளியேறினான்.
அகிலன் கோபமாக வெளியேறிதைப் பார்த்த சுந்தரி பின்னே ஓடி வந்தாள்.
உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்றபடி ஒரு கடிதத்தை அவனிடம் நீட்டினாள்.
“எல்லோருக்கும் காதல் பிடித்திருக்கிறது.
ஆனால், காதலுக்கு ஒரு சிலரை மட்டுமே பிடித்திருக்கிறது.
இப்போதைக்கு நீயும் நானும்”
திசை சங்கர்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!