இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தான் வாசுதேவன். அவனது அலைபேசி சிணுங்கியது. எடுத்துப் பார்த்தான். அழைத்தது அவனது மனைவி.
“என்னங்க! வரும்போது சூப்பர் மார்க்கெட்ல ஒரு கவர் தயிர் வாங்கிட்டு வாங்க!”
.
“சரி. வாங்கிட்டு வந்துடுறேன்!”
வாசுதேவன் சூப்பர் மார்க்கெட் நுழைந்து தயிர் மட்டும் எடுத்துக் கொண்டு, பில் போடும் இடத்திற்கு வந்தான்.
நாற்பது ரூபாய் பில் தொகைக்கு, பர்ஸ்லிருந்து நூறு ரூபாய் எடுத்து நீட்டினான்.
பணத்தை வாங்கிய பில் போடும் நபர், அதை 500 ரூபாய் என்று நினைத்துக் கொண்டு, மீதி 460 ரூபாய் கொடுத்தார். வாசுதேவன் தயங்கியபடியே வாங்கிக் கொண்டான்.
‘சார், நீங்க 400 ரூபா அதிகமா கொடுக்குறீங்க! இந்தாங்க!’ என்று பணத்தை திருப்பிக் கொடுத்து இருக்க வேண்டும்.
‘தப்பு என்னோடது இல்ல! அவனோடது. எதுக்கு நான் திருப்பிக் கொடுக்கணும்?’ என்று மனதிற்குள் நினைத்தபடியே வெளியேறினான்.
‘ஆஹா! இன்னைக்கு யார் முகத்துல முழிச்சனோ தெரியல. 400 ரூபாய் வரவு!” என்று ஏதேதோ நினைத்தபடியே வண்டியை ஓட்டினான்.
‘டமால்’ என்று சத்தம் கேட்க, வண்டியோடு கீழே சரிந்தான் வாசுதேவன். சவாரிக்கு நின்றிருந்த ஆட்டோவின் பின்னால் மோதியதில், ஆட்டோவின் பின்பகுதி நொறுங்கியது.
மொத்த ஆட்டோ ஓட்டுநர்களும் ஒன்று சேர்ந்து கொண்டு அவனை சூழ்ந்து நிற்க நிலைகுலைந்தான் வாசுதேவன்.
“ஆட்டோவ சர்வீஸ் பண்றதுக்கு 2000 ரூபாய் ஆகும். கொடுத்துட்டு, இங்கிருந்து கிளம்பு!” எல்லோரும் மொத்தமாய் குரல் கொடுக்க, வேறு வழியின்றி 2000 ரூபாய் எடுத்துக் கொடுத்தான் வாசுதேவன்.
‘சூப்பர் மார்க்கெட்டில், பணம் அதிகம் தந்த போது திருப்பிக் கொடுத்து இருக்கலாம். கொடுக்காமல் வந்ததற்கு, இப்படி ஒரு இழப்பு!’ தன்னைத் தானே நொந்தபடி, வீட்டுக்கு புறப்பட்டான் வாசுதேவன்.
எம்.மனோஜ் குமார்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!