உள்ளுணர்வுகளின் வழியாக உறவுகளை புதுப்பிப்போம் – 2

முகம் தெரியாத எழுத்தாளருக்கு அல்லது பாடலாசிரியருக்கு நீங்கள் ரசிகராக இருக்கலாம்.

நேரில் பார்க்காத ஒரு எழுத்தாளனின் மீது நீங்கள் கொண்ட நேசம், வெள்ளை தாளில் எழுதப்பட்ட கருப்பு (அ) நீலநிற மையினால் எழுதப்பட்ட வார்த்தை தந்ததா?

அப்படியெனில் மையினால் எழுதப்பட்ட வார்த்தைக்கு அவ்வளவு வலிமையா?

இப்படி ஆயிரமாயிரம் விஷயங்கள். இவைகளுக்கு பின்னணியில் நடப்பது என்ன?

பொறுமை, விட்டு கொடுத்தல், சகிப்புத்தன்மை, பிறருக்கு உதவுதல், கோபம், போட்டி, பொறாமை போன்ற உணர்வுகள்தான். நல்ல, கெட்ட குணங்கள் என்று நாம் பேசி வருகின்ற அனைத்தும் உணர்வுகளின் வெளிப்பாடுதான்.

ஒரு பேப்பரை எடுங்கள். உங்களுக்கு என்னென்ன குணம் இருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். பட்டியலிடுங்கள்.

அதுபோல் உங்கள் நெருங்கிய நண்பர்களிடம் உங்களுக்குத் தெரிந்த குணங்களை பட்டியலிடுங்கள். இரண்டையும் ஒப்பீடு செய்து பாருங்கள். ஆச்சர்யப்பட்டு போவீர்கள்.

உங்கள் இரண்டு நபர்களின் குறைந்தப ட்சம் மூன்று குணங்களாவது ஒத்துப்போகும். உங்கள் இருவருக்குமான உரையாடல் நீங்கள் ஒப்பீடு செய்த குணங்களின் பின்னணியில் அமைந்திருக்கும்.

உங்களுக்குள் மனஸ்தாபம், சண்டை ஏற்பட்ட நிகழ்வுகளில் உங்களில் யாரோ ஒருவருக்கான குணங்கள் அங்கே ஒன்றுபட்டு இருக்காது. ஒன்று படாத குணங்களின் உணர்வுகள் உங்களை பிரித்து விடுகிறது.

உதாரணத்திற்கு எனக்கு பொறுமை என்ற குணம் 80% இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

எனது பொறுமை என்ற இந்த உணர்வு எங்கோ ஒரு மூலையில் பொறுமை 80% உள்ள ஒருவரின் உணர்வோடு சேர்ந்து பின்பு அது நம்மை நண்பனாக்குகிறது.

எனக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருப்பது போல் எங்கோ ஒருவரிடம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருக்கும் உணர்வுகளின் சங்கமம் நண்பனாக இணைய வைக்கிறது.

எனவே உங்கள் குணங்கள் [உணர்வுகள்] எத்தனை காலம் உங்கள் நண்பர்களோடு ஒத்துப்போகிறதோ அத்துனை காலம் வரை உங்கள் நட்பு நீடிக்கும்.

குணங்கள் மாறுகின்ற போது நட்பும் மாறும். 1 -5ஆம் வகுப்பு படிக்கும்போது உள்ள நண்பர்கள் பெரும்பாலும் அதற்கு மேல் தொடர்வதில்லை.

6-10ஆம் வகுப்பு படிக்கும்போது நெருக்கமான நண்பர்கள் மேல்படிப்பில் பெரும்பாலும் நீடிப்பதில்லை. 11-12ஆம் வகுப்பு இணை பிரியாத நண்பர்கள் கல்லூரி காலங்களில் வேறு நண்பர்களோடு சுற்றுவதை பார்க்கலாம்.

வேலைகளில் சேர்ந்த பின் அங்கு அவருக்கு நடக்கும் கஷ்டங்களை மேலோட்டமாக அவர் இப்படி, இவர் இப்படி என்று பேசுவதற்கு நபர்கள் இருப்பார்களே தவிர, பள்ளி, கல்லூரி காலங்களில் இருந்தது போல் மனம் விட்டு பேசும், மனம் நிறைந்து பேசும் நண்பர்கள் பெரும்பாலும் அமைவதில்லை.

‘என் நண்பன் சில விஷயங்களை என்னிடம் மறைக்கிறான்’ என்று சொல்லப்படுகின்ற, பெரும்பாலான பிரச்சனைகளுக்கு பின்னால், நீங்கள் சம்பந்தப்படாத குணங்கள் அவரிடம் நிறைந்திருக்கும்.

இப்போது நான் மேற்சொன்ன உதாரணங்களை சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள்.

வகுப்பில் முதல் இரண்டு வரிசையில் அல்லது நீங்கள் யாரோடு கல்லூரியில் அமர்ந்தீர்களோ அவர்களின் குணத்தையும் உங்கள் குணத்தையும் சோதித்துப் பார்த்தால் உங்கள் நண்பர்களின் குணம் உங்கள் குணத்தோடு ஒத்துப் போயிருக்கும்.

இப்படித்தான் உங்கள் நெருங்கிய நண்பர்கள், அண்டை வீடு என எல்லாம், முகம் தெரியாத ஒரு எழுத்தாளரின் உணர்வுகளின் வழியே உந்தி தள்ளப்படுகின்ற எழுத்துக்கள் உங்களிடம் அதாவது அந்த எழுத்தாளரின் குணமும் உங்கள் குணமும் எங்கு, எதுவரை ஒத்துபோகிறதோ அதன் அடிப்படையில் நீங்கள் அவருக்கு ரசிகராக இருக்கிறீர்கள்.

எல்லா எழுத்தாளருக்கும் எல்லா வாசகர்களும் ரசிகர்கள் இல்லைதானே. தனது கண் பார்வையை வைத்து பிறரை தனது ஆளுமைக்குள் கொண்டுவர முடியும் என்பதை ஏழாம் அறிவு திரைப்படம் தெளிவாக பேசி இருக்கிறது.

பார்வை மூலம், மூச்சின் மூலம், உணர்வுகளின் மூலம் பிறரை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அவர்களுக்கு உடல் மற்றும் உள்ள [மன] நோய்களை தீர்ப்பது என்பது கதை அல்ல. அனைத்தும் கலைகள்.

அது நமது கலாச்சாரம்; அது நமது பண்பாடு. நமது கலையை நாம் கற்க தவறியதன் விளைவை இன்று கண் கூடாக பார்க்கிறோம் அல்லவா?

அறிவையும் அறிவியலை மட்டுமே நம்பி வளர்க்கப்படுகின்ற 21-ஆம் நூற்றாண்டின் செல்ல பிள்ளைகளுக்கு இது போன்ற கலைகளின் அவசியத்தை சொல்லிக் கொடுக்க தவறினால், நமது முன்னோர்களிடம் இருந்து பெறப்பட்ட கலைகளை நாமே சீர் கெடுத்ததாகி விடும்.

எனவே, பெரும் துயரங்கள், இயற்கை பேரிடர்கள் போன்ற காலங்களில் மட்டுமல்ல; நீங்கள் வண்டியில் செல்கின்ற போது, உங்களுக்கு முன் செல்கின்ற வண்டியின் பின்னால் அமர்ந்திருக்கின்ற ஒரு தாயின் சேலை வண்டி சக்கரத்தில் மாட்டி விடுமோ என்ற பயம் உங்களுக்கு ஏற்படும் போது அவர்களுக்கு குரல் கொடுங்கள்.

முடியவில்லை எனில் உங்கள் வண்டியை ஓரமாக நிறுத்தி மனதை ஓர் நிலைப்படுத்தி, அவர்களுக்கு எதுவும் ஆகிவிட கூடாது என்ற உங்களின் உரத்த உணர்வுகள் அவர்களை அறியாமலே அவர்களின் கரங்கள் சேலையை ஒழுங்குபடுத்தும்.

மீண்டும் சாதாரண நிலைக்கு வந்து வேகமாக சென்று யாருக்காக பிரார்த்தித்தீர்களோ அவர்களை பின்தொடர்ந்து பாருங்கள்.

உங்கள் உணர்வுகளின் உண்மைத் தன்மையை பொறுத்து உண்மையை நீங்களே விளங்கி கொள்வீர்கள்.

நமது உணர்வுகளை பக்குவப்படுத்துவதற்கும் பரிசுத்தப்படுத்துவதற்கும் ஆசிரியர்கள் உண்டு; அதற்கென்று வழியும் வழிமுறைகளும் உண்டு.

குறைந்தபட்சம் எங்கேனும் துன்பங்கள் துயரங்கள் ஏற்படும்போது அல்லது கேள்விப்படும் போது, தனிமையில் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி பிறருக்காக பிறர் கவலையில் உணர்வுகளின் வழியே பங்கெடுக்க பழகுவோம்.

அப்படி பழகினால், நமக்கு ஏதேனும் பிரச்சனைகள் வரும் போது நமக்கு தெரியாமல் எங்கோ ஒரு மூலையில் பிரார்த்திக்கின்ற பிரார்த்தனைகள் நமது கஷ்டங்களை தீர்த்துவிட்டு போகும்.

‘ச்சே! எவ்ளோ பெரிய பிரச்னை தெரியுமாடா? மாட்டி மட்டும் இருந்தேன், கைமா தான். எப்படின்னு தெரியலடா; தப்பிச்சிட்டேன்’ என்று நாம் பேசுகின்ற ஒவ்வொரு செயலின் தாக்கத்திற்கு பின்பும் நம்மை நேசிக்கும் உணர்வுகள் நமக்கு தெரியாமல் எங்கோ ஒரு இடத்தில் வாழ்ந்து வருகின்றன என்பதே உண்மை.

உள்ளுணர்வுகளின் வழியாக உறவுகளைப் புதுப்பித்து புது மனிதராக மாறுவோம். வரும் காலம் அனைவரையும் வசந்தமாக்கட்டும்.

வசந்தத்துடன்,
முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணைப் பேராசிரியர், பொருளாதார துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 96000 94408

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.