உள்ளுணர்வுகளின் வழியாக உறவுகளைப் புதுப்பிப்போம் – I

‘மிக்ஜாம்’ புயல் தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோர தாண்டவம் ஆடி விட்டு சென்றதைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் கனமழை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

வரலாறு காணாத புயல் மற்றும் மழையால் பெரும் பாதிப்புக்குள்ளானது மட்டுமின்றி வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இதனால் அடைந்த சேதம் விலைமதிப்பற்றது.

அரசுகள், அதிகாரிகள், தன்னார்வலர்கள், வழிபாட்டுத்தலங்கள் என அவரவர்கள் தங்கள் பணிகளை துரிதப்படுத்தி செய்து கொண்டிருப்பது பாராட்டுக்குரியது.

ஆனால் இதுபோன்று நடைபெறுகின்ற இயற்கை சீற்றங்களில் நமது ஒவ்வொருவரின் பங்களிப்பும் கடமையும் என்ன என்பதை யோசிக்க வேண்டி இருக்கிறது.

ஒவ்வொரு இடங்களிலும் பாதிப்புகள் ஏற்படுவதை சமூக வலைதளங்களில் பார்த்துவிட்டு ‘உச்’ கொட்டி விட்டு அந்த தகவலை பார்வேர்ட் [FORWARD] செய்கிறோம்.

ஒரு துன்பத்தை, ஒரு கஷ்டத்தை பிறருக்கு தெரியப்படுத்துவதும் நன்மைதான். நல்லது தான்.

இருந்த போதும் நமக்கான கடமை அவ்வளவுதானா?

நாங்கள் என்ன செய்ய முடியும்?

எங்களால் களத்திற்கு வந்து எப்படி உதவ முடியும் என்ற உங்கள் எதிர் கேள்வியும் நியாயம்தான்.

நீங்கள் பார்வர்ட் [FORWARD] செய்கின்ற மெசேஜின் தாக்கம் உதாரணத்திற்கு தண்ணீர் பீறிட்டு செல்வது, ஏரி உடைந்து வீட்டிற்குள் தண்ணீர் புகுவது, மின் இணைப்பு பல நாட்கள் துண்டிப்பது, குடிநீர் கிடைக்காமல் உணவு கிடைக்காமல் கஷ்டப்படுவது, வீடு இடிந்து விழுவது போன்ற ஏதேனும் ஓரிரண்டு பரிதாப நிலைகள் நமது வீடுகளில், நமது இரத்த உறவுகளுக்கு ஏற்பட்டு இருந்தால் நமது நிலை எப்படி இருக்கும்? என்பதை நாம் யோசித்துக் கொள்ள வேண்டும்.

எங்கேனும் ஒரு துயரம் ஏற்படுகின்ற போது, அந்த துன்பத்தில் இருந்து மீள பிரார்த்திப்பதும், உணர்வுகளின் வழியே அதை சரி செய்வதும் தானே நமது தமிழர்களின் மரபு.

காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று சொன்னவர் பாரதி;

கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும் என்று உரத்து சொன்னவர் வள்ளுவர்.

தெருவில் செல்லும்போது சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயம் பட்ட ஒரு சிறுவனை ஓடிச் சென்று தூக்கிவிட்டு, ஏம்ப்பா. பார்த்து போகக்கூடாதா! என்ற கரிசனத்தின் அளவு இன்றைய தலைமுறைகளிடம் குறைந்து வருகிறதோ என்ற அச்சப்பாடும் ஏற்படுகிறது.

மனிதர்களுக்கு மட்டுமல்ல ஐந்தறிவு விலங்குகளுக்கும் நம்மை போன்று நேசித்து அதற்கான அனைத்து உரிமைகளையும் வழங்கி அதன் உணர்வுகளை மதித்து வாழ்ந்த தமிழ் சமூகத்தின் இன்றைய நிலை?
நாம் என்ன செய்ய வேண்டும்?

ஏதேனும் ஒரு துன்பம், தீங்கு நேரிடும் போது அல்லது அதற்கான சூழல் எழும்போது அல்லது அதை கேள்விப்படும்போது, மனதை ஒருமுகப்படுத்தி, ‘இந்த தீங்கிலிருந்து இவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற உங்கள் ஆழ்மனதின் பிரார்த்தனை நிச்சயம் ஏதோ ஒரு வகையில் அவர்களை கரை சேர்க்கும்’ என்பது அனுபவ உண்மை.

நான் குறிப்பிடுகின்ற அனைத்து உதாரணங்களையும் உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பாருங்கள்.

கல்லூரியில் படித்த அனுபவம்; படிக்கின்ற அனுபவம் எல்லோருக்கும் உண்டு. உங்கள் வாழ்க்கையை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாருங்கள்.

1. கல்லூரியின் முதல் நாள். கல்லூரி கலையரங்கத்தில் முதல்வர் மற்றும் பொறுப்பாளர்கள் கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து சுமார் இரண்டு மணி நேரம் பேசிவிட்டு சென்றதன் பின், அனைத்து மாணவர்களும் அவரவர்கள் வகுப்பறையை நோக்கி செல்லலாம் என்ற அறிவுரையோடு முதல் நாளில் பாதி நாள் கழியும். வகுப்பிற்குள் செல்லும் பொழுது வகுப்பிற்கு வெளியே அந்தந்த துறை சார்ந்த பேராசிரியர்கள் நின்று கொண்டிருப்பார்கள். 

தலையை உயர்த்தி கூட பார்க்காமல் வகுப்பிற்குள் நுழைந்த போது, எந்த இடம் காலியாக இருக்கிறதோ அந்த இடத்தில் அமர்ந்திருப்போம்.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து தலையை சற்று உயர்த்தி பார்த்த பின், இவன் நம்மகூட தான +2 படிச்சான்; இவனா! இவன் நம்ம ஏரியா ஆளாச்சே! என்று யோசித்து வகுப்பை விட்டு வெளியே வந்தது பின் உறவுகளை பரிமாறி இருப்போம். ஓரிரு வாரங்கள் அவர்களோடு அமர்ந்திருப்போம்.

மூன்று மாதங்களுக்குப் பின் நீங்கள் யார் யாரோடு உட்கார்ந்து இருந்தீர்களோ அந்த ஒழுங்குமுறை தான் கல்லூரி முடிந்து வெளிவரும் வரை தொடரும். நன்றாக படிப்பவர்கள் முதல் இரண்டு வரிசையில்.

50 மாணவர்கள் படிக்கும் ஒரு அறையில் சுமார் 10 மாணவர்கள் தனிமையில், ஆசிரியர்களையும் மாணவர்களையும் கிண்டலடிக்கும் கூட்டம் ஒருபக்கம்.

இப்படி ஒவ்வொருவரும் கூட்டத்தோடு அல்லது இரண்டு மூன்று நபர்களாக அல்லது தனியாக அமர்ந்திருப்போம். என்ன நான் சொல்வது சரிதானே.

சரி! இந்த ஒழுங்குமுறையில் அமர்ந்தவர்கள் எல்லாம் நாம் ஒன்றாக அமர வேண்டும் என்று திட்டம் தீட்டி உட்காந்தோமா அல்லது யதார்த்தமாக நடைபெற்றதா? என்றால் யதார்த்தமாக தான் நடந்தது என்று நீங்களும் நானும் சொல்வோம். இது எங்கோ ஒரு மூலையில் நடைபெற்ற ஒரு வகுப்பின் சம்பவம் மட்டுமல்ல! எல்லா இடங்களிலும் நடைபெறும் யதார்த்தமும் அதுதான்.

 1. ஒரு நண்பர் மற்றவருக்கு மிக்க நண்பராக மிகவும் நெருங்கிய நண்பராக இருப்பார். சிறிது காலத்தில் அந்த நட்பும் பிரியாமல் அவரிடம் எதுவும் பேசாமல் இன்னொரு நட்பு புதிதாக உருவாகும்.
 2. எந்த வீட்டுக்கு வாடகைக்கு போனாலும் ஒரு வீட்ல கூட ஒரு வருஷத்திற்கு மேல் என்னால் இருக்க முடியவில்லை என்ற புலம்பல்.
 3. நாம் யாரைப் பார்க்க வேண்டும் என்ற அதீத ஆர்வம் கொள்கிறோமோ எதிர்பாராத விதமாக அவரை பார்க்க நேரிடும் போது, உங்களைத்தான் இவ்வளவு நாளா பார்க்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன்னு முக பூரிப்போடு பேசும் வார்த்தைகள்.
 4. பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் சம்மந்தமே இல்லாத இருவர் மிகுந்த தோழமையோடு இருப்பது எப்படி? உங்கள் நட்பையும் யோசித்து பாருங்கள்…
 5. முகம் தெரியாத எத்தனையோ எழுத்தாளர்களுக்கு நீங்கள் ரசிகராக இருப்பது. நேரில் பார்க்காத ஒரு எழுத்தாளனின் மீது நீங்கள் கொண்ட நேசம், வெள்ளை தாளில் எழுதப்பட்ட கருப்பு (அ) நீல நிற மையினால் எழுதப்பட்ட வார்த்தை தந்ததா? அப்படியெனில் மையினால் எழுதப்பட்ட வார்த்தைக்கு அவ்வளவு வலிமையா?

இப்படி ஆயிரமாயிரம் விஷயங்கள்..

இவைகளுக்கு பின்னணியில் நடப்பது என்ன?

               [அடுத்த வாரம் சந்திப்போம்]

முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர், பொருளாதார துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 96000 94408

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.