உளுந்து களி செய்வது எப்படி?

உளுந்து களி சத்தான அனைவரும் கட்டாயம் உண்ணக்கூடிய உணவுப் பொருள். பொதுவாக உளுந்தில் களி என்றலே அது தோலுடன் கூடிய முழு உளுந்தில் செய்யப்படுவதையே குறிக்கும்.

உளுந்தின் தோலில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் தோலுடன் கூடிய உளுந்தினையே பயன்படுத்தி களி செய்ய வேண்டும்.

இதில் கருப்பட்டி மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து செய்வதால் இதற்கு சுவை அதிகரிப்பதோடு உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

உளுந்து மற்றும் கருப்பட்டியில் உள்ள சுண்ணாம்புச்சத்து எலும்புகளைப் பலப்படுத்துவதால் குறிப்பாக பெண்கள் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் மிகவும் அவசியமான ஒன்று.

நம்முடைய பராம்பரிய உணவான உளுந்து களி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

களி மாவு தயார் செய்ய

கறுப்பு உளுந்து பயறு – 2 கப்

கவுனி அரிசி (கருப்பரிசி) – 1/4 கப்

மாப்பிளைச் சம்பா அரிசி (சிவப்பரிசி) – 1/4 கப்

ஏலக்காய் – 4 எண்ணம்

களி தயார் செய்ய

களி மாவு – 1 கப்

கருப்பட்டி (தூளாக்கியது) – 1 கப்

தண்ணீர் – 2& 1/2 கப்

நல்லெண்ணெய் – 1/4 முதல் 1/2 கப் வரை

உளுந்து களி செய்முறை

கருப்பு உளுந்து பயறினை தண்ணீரில் அலசி உடனே தண்ணீரை ஒட்ட வடித்துவிட்டு வாணலியில் போட்டு அடுப்பினை மிதமான தீயில் வைத்து வறுக்கவும்.

உளுந்தம் பயறிலிருந்து நல்ல வாசனை வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும்.

உளுந்தினை வறுகும் போது

கவுனி அரிசி மற்றும் மாப்பிளைச் சம்பா அரிசியினை தண்ணீரில் களைந்து உடனே தண்ணீரை ஒட்ட வடித்து வாணலியில் போட்டு நிறம் மாறி வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

அரிசினை வறுகும் போது
அரிசினை வறுகும் போது

மிக்ஸியில் வறுத்த உளுந்தம் பயறு, வறுத்த அரிசி வகைகள், ஏலக்காய் சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும்.

மிக்சியில் சேர்த்ததும்

பின்னர் அரைத்த மாவினை சல்லடையில் போட்டு சலித்துக் கொள்ளவும். சலித்த மாவே களி மாவு ஆகும்.

களி மாவு

சலித்த மாவிலிருந்து ஒரு கப் மாவினை எடுத்துக் கொள்ளவும்.

இதற்கு நன்கு தூளாக்கிய கருப்பட்டி ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.

நொறுக்கிய கருப்பட்டி

ஒரு கப் மாவிற்கு இரண்டரைப் பங்கு தண்ணீர் இருக்குமாறு இரண்டரை கப் அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.

எடுத்துக் கொண்ட தண்ணீரில் கருப்பட்டித் தூளைக் கரைத்துக் கொள்ளவும். கருப்பட்டி கரையவில்லை எனில் கரைசலை அடுப்பில் வைத்து கருப்பட்டி கரைந்ததும் இறக்கி ஆற விட்டு வடிகட்டிக் கொள்ளவும்.

தண்ணீரில் கருப்பட்டியைச் சேர்த்ததும்
வடிகட்டிய கருப்பட்டிக் கரைசல்

கருப்பட்டித் தண்ணீரில் ஒரு கப் களி மாவினை கட்டியில்லாமல் ஒருசேரக் கரைத்துக் கொள்ளவும்.

உளுந்த மாவினை கருப்பட்டி தண்ணீரில் கரைத்ததும்

அடுப்பில் வாணலியை வைத்து அதில் கரைத்து வைத்துள்ள மாவுக் கரைசலை ஊற்றி அடுப்பினை மிதமான தீயில் வைத்து கைவிடாது கிளறவும்.

கிளறும் போது

சிறிது நேரத்தில் கரைசல் கெட்டிப்படத் தொடங்கும்.

சற்று நன்கு கெட்டியானதும் எடுத்துக் கொண்ட நல்லெண்ணெயில் சிறிதளவு சேர்த்துக் கிளறவும்.

நல்லெண்ணெய் சேர்த்ததும்

எண்ணெய் முழுவதும் உள்ளிழுக்கப்பட்டு கலவை கெட்டியானதும் மீண்டும் சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கிளறவும்.

இவ்வாறாக எல்லா எண்ணெயையும் கலவையில் சேர்த்துக் கிளறவும்.

எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது

சிறிது நேரத்தில் கலவையிலிருந்து எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும்.

இப்போது கைவிடாது கலவையைக் கிளறவும்.

ஓரிரு நிமிடங்களில் கலவை ஒருசேரத் திரண்டு அல்வா பதத்திற்கு வரும்.

கலவையை கரண்டியில் எடுத்து கரண்டியைச் சாய்க்கும் போது கலவை தானாக கீழே விழும். மேலும் விரல்களுக்கிடையே வைத்து உருண்டியால் நன்கு உருளும். இதுவே சரியான பதம்.

அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான உளுந்து களி தயார். சூடாகப் பரிமாறவும்.

மேற்கூறிய முறையில் செய்யும்போது ஆறிய பின்பும் களி மிருதுவாகவே இருக்கும்.

குறிப்பு

களி தயார் செய்ய இரும்புக் கடாயைப் பயன்படுத்தவும்.

களியை இறக்கியதும் இரும்புக் கடாயிலிருந்து எடுத்து தனியே வைக்கவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.