எல்லாம் அவன் செயல் – சிறுகதை

பட்டாபிராமன் குருக்கள் உடலால் மட்டுமல்லாமல் மனதாலும் மிகவும் ஒடுங்கிப் போனவராய் கோவில் பிரகாரத்தில் அமர்ந்திருந்தார்,

காலைவேளை பூசையை அப்போதுதான் முடித்திருந்தார்.

டவுனிலிருந்த வந்த ஒரு குடும்பம் அபிஷேகத்தை முடித்த கையோடு, கோயில் சுற்றுப் பிரகாரத்தில் அமர்ந்துகொண்டு, ஆரவாரமாய் காலை உணவை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தனர்,

பட்டாபிராமன் அவற்றை பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர மனதில், காலையில் வீட்டில் நிகழ்ந்த மனைவியின் அர்ச்சனையே திரும்ப திரும்ப வலம் வந்து கொண்டிருந்தது,

இதொன்றும் புதிதில்லைதான், ஏழை குருக்களுக்கு வாழ்க்கைப்பட்ட அவளது இயலாமைதான் அங்கலாய்ப்பாக வெளிப்படுகிறது,

என்ன செய்ய? கோவிலுக்குக் கூட அது அமைந்த ஊரைப் பொறுத்துதான் பேரும் புகழும். அதற்கேற்றாற்போல் தான் கோயில் வருமானமும் ஓகோ என்றிருக்கும்.

ஆனால் இவரின் பிறந்த ஊரான சிறுபாடி, பெயருக்கேற்றாற் போல் சின்னஞ்சிறு கிராமம்,

அதிலுள்ள ஒரு சிறிய கோயிலின் குருக்களின் வருமானம் பெரிதாக என்ன வந்து விடப்போகிறது? வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி என்பது போல்தான் வாழ்க்கை.

ஓரளவு லலிதா இந்த வாழ்க்கைக்கு பழக்கப்பட்டிருந்தாலும், அவ்வப்போது குத்தூசி போன்ற அவளின் சொற்கள் மனதை ரணப்படுத்திதான் விடுகின்றன. காலையில் நிகழ்ந்த அர்ச்சனையும் அதன் வெளிப்பாடே.

ஒரே மகன் அரவிந்தன் பள்ளி இறுதிப் படிப்பில் இருந்தான், அரசுப்பள்ளி என்பதால் எந்த செலவுமில்லாமல் போய்க் கொண்டிருந்தது,

ஆனால் இந்த பாழாய்போன கொரானா வந்து, பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் கிளாஸ் என்று ஆரம்பிக்கப்பட்டதன் வினைதான் இது.

“பிள்ளைக்கு படிக்க பெரிய ஸ்கூல்லதான் சேக்கல, ஆன்லைன் கிளாஸ் அட்டன் பண்ண நல்ல போனாவாது வாங்கித் தரலாம்ல. பாவம் குழந்தை வாயத் திறந்து எதுவும் கேக்காம அமைதியா கிடக்கு.

அதுக்காக நாம அப்படியே விட்டுட முடியுமா, நான் என்ன எனக்கா போன் கேட்கிறேன்.

ஊர்ல தயிர் விக்கிற ஆயாம்மா கூட ஸ்மார்ட் போன் வெச்சுக்கிட்டு திரியறாங்க, ஆனா எனக்குதான் விதியில்லை,

சரி போகட்டும், பரவாயில்ல, படிக்கிற பிள்ளைக்காவது வாங்கித் தரலாம்ல, கையில காசு இருக்காதுதான், அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா?

யார்கிட்டயாவது கடனோ உடனோ வாங்க வேண்டியதுதான்.
சொன்னா கேட்டாதானே, நான் யார்கிட்டயும் கடன் வாங்க மாட்டேன்னு வெட்டி வீராப்பு க்கு ஒண்ணும் குறைச்சலில்ல…”

நீண்டு கொண்டே போன அவள் வசவுகளை காதில் வாங்க இயலாமல் ‘விடு விடு’ என்று கிளம்பி அப்படியே கோயில் வந்தவர்தான், பூசை முடித்த கையோடு தனியே அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டி, கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார்,

மனம் சற்று சாந்தமாக, கண்களை மெல்ல திறந்தார், பார்த்த நொடியே திடுக்கிட்டார்,

அவருக்கு வெகு அருகாமையில் ஒரு தங்கச் சங்கிலி தகதகத்தது, இது யாருடையது? சுற்றுமுற்றும் பார்த்தார்,

சற்று முன் பார்த்த அந்த குடும்பம் கிளம்பிவிட்டிருந்தது, அவர்களைத்தவிர வேறு எவரும் கோயிலுக்கு வரவில்லை,

‘சர்வ நிச்சயம், இந்த சங்கிலி அவர்களுடையதாகத் தான் இருக்கும்’,

பரபரவென்று சங்கிலியை அள்ளி எடுத்து வெளியே ஓடி வந்தார், நல்லவேளை கார் கிளம்பவில்லை,

அந்த குடும்பத்தின் நபர் காரை விட்டிறங்கி வந்தார்,

“உங்ககிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தோம், நீங்க தியானத்துல இருக்கவே தொந்தரவு பண்ண வேணாம்னு வெய்ட் பசண்ணிட்டிருந்தோம்,”

அவர் சொல்ல பட்டாபிராமன் கையிலிருந்த சங்கிலியை அவர்முன் நீட்டினார்.

“இது உங்களுதா பாருங்க,?”

அதற்குள் காரிலிருந்த பெண்மணி கையில் குழந்தையோடு கீழே இறங்கினாள்.

குருக்களின் கையிலிருந்த சங்கிலியைப் பார்த்து திடுக்கிட்டாள்.

“ஐயோ, இது பாப்பாவோடதுங்க, கீழ விழுந்திட்டுது போல, நானே இப்பதான் பார்க்கிறேன்,”

அந்த நபர் அவளைக் கடிந்துகொண்டார்,

“குழந்தைக்கு நகை போட்டா கவனமா பார்க்கறதில்லையா?”

சங்கிலியைப் பெற்றுக்கொண்ட அவர்கள் நன்றிகள் பல கூறி கிளம்பினர்,

பட்டாபிராமனும் பகவானுக்கு நன்றி சொல்லி நடையை சாத்திவிட்டு வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமானார்,

‘இன்று நல்ல காரியம் பண்ணிட்டேன், காலையில கிளம்பும் போது மனக் கலக்கத்தோட வந்தேன். இப்ப பகவான் அருளால திருப்தியோட ஆத்துக்கு போறேன்,” நினைத்துக் கொண்டே நடக்கத் துவங்கினார்,

எதிரில் அரவிந்தன் ஆசிரியர் குறுக்கிட்டார்,

“குருக்களே உங்கள பார்க்கணும்னுதான் வந்தேன்”

இரு கைகளை குவித்து வணங்கினார் பட்டாபிராமன்.

“சொல்லுங்க ஐயா, அரவிந்த் பத்தி ஏதாவதா?” தயக்கத்தோடுக் கேட்க, ஆசிரியர் புன்னகைத்தார்,

“ஆமாம் அரவிந்தனைப் பத்திதான், ரொம்ப நல்லா படிக்கிற பையன், ஆன்லைன் கிளாஸ் அவனால அட்டெண்ட் பண்ண முடியாததால நாங்க ஆசிரியர்கள் எல்லாரும் சேர்ந்து அவனுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்கிறோம். தயவுசெய்து மறுக்காம வாங்கிக்கங்க.”

அவரது கையில் பலவந்தமாய் செல்போனைத் திணித்தார்,

பட்டாபிராமன் சற்றுத் தடுமாற்றம் அடைந்தாலும், ‘எல்லாம் அவன் செயல்’ என்ற மந்திரத்தை யாரோ காதில் ஓதுவது போல் உணர்ந்து பரவசத்துடன் அதைப் பெற்றுக் கொண்டார்.

மஞ்சுளா ரமேஷ்
ஆரணி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.