ஒண்டி ஏட்டும் அய்யனாரும் – சிறுகதை

அடர்ந்த காடுகளும் மலைகளும் ஒட்டிய சாலையில் அமைந்திருக்கும் சோதனைச் சாவடியுடன் கூடிய புறக்காவல் நிலையம் ஒன்றில்தான் ஒண்டி ஏட்டு பணிபுரிகிறார்,

மலையின் அடிவாரத்தில் உள்ள சில கிராமங்களுக்கும் சேர்த்துதான் இந்த காவல் நிலையம். ஒண்டி ஏட்டு இந்த கிராமங்களின் ஆதி அந்தத்தை அறிந்தவர்.

முக்கியமாக காடுகளில் பதுங்கி தீவிரவாத மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து தகவல் சொல்வதில் வல்லவர்.

ஒண்டி ஏட்டின் உண்மையான பெயர் சடகோபன், சிறுவயதிலியே தாய், தந்தையாரை இழந்து, அப்பன் வழி பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து, அந்த காலத்தில் ஓரளவுக்கு படித்து போலீஸ் வேலைக்கு சேர்ந்தவர்.

பாட்டியும் இறந்து விட்டார், இவருக்கும் 50 வயதாகி விட்டது, இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எதுவும் அமையவில்லை,

இதுவரை அப்படியே ஒண்டிக் கட்டையாவே வாழ்வதால் சடகோபன், “ஏட்டய்யா, ஒண்டி ஏட்டு ” எல்லோராலும் அழைக்கப்பட்டார் .

ஒண்டி ஏட்டுக்கு ஒரே துணை அவர் பாட்டி கொடுத்துவிட்டு போன ஒரு அடி உயர குலதெய்வமான அய்யனார் சிலைதான்.

காவல் நிலைய உள் வராண்டாவிலேயே ஒரு தடுப்பு போட்டு அய்யனாருக்கு அமைவிடம் ஏற்படுத்தி தினமும் பூஜை வழிபாடு நடத்தும் அளவுக்கு அய்யனார் பாசம் தீவிரம்.

“உனக்கு யாரும் இல்லை என்று நீ கவலைப்படாதே. அய்யனார் உன்னை பத்திரமாக பார்த்துக் கொள்வார்” என்று அவர்தம் பாட்டி சிறுகுழந்தையாக இருந்த போதிலிருந்து சொல்லி சொல்லி வளர்த்து அவருக்கு அய்யனார் தான் உலகம் என்றாகி விட்டது.

சாப்பிடாமல், தூங்காமல் இருந்தாலும் இருப்பாரே தவிர அய்யனாருக்கு பூஜை, படையல் செய்யாமல் ஒருநாளும் இருந்ததில்லை.

அந்த ஒரு அடி சிலையோடு பேசுவது, சிரிப்பது என்று ஒண்டி ஏட்டும் அய்யனாரும் இந்த புது யுகத்தில் நகைப்புக்கும் கேலிக்கும் நல்ல தீனி.

ஒருமுறை மின்சார கோளாறில் அந்த காவல் நிலையம் தீ பிடித்து எரிய, வெளியிலிருந்து வந்த ஒண்டி ஏட்டு யார் சொல்லியும் கேட்காமல் கொழுந்து விட்டெரியும் தீயில் உள்புகுந்து அய்யனாரை தூக்கி வந்து சாகசம் செய்த விபரம் டிஜிபி அலுவலகம் வரை தீயாய் பரவி அங்கிருந்து மெமோ வந்ததுதான் மிச்சம் . அதுக்கெல்லாம் ஒண்டி ஏட்டு கவலை படவில்லை.

ஆனால் ஆய்வுக்கு வந்த ஒரு வடநாட்டு அதிகாரி காவல் நிலையத்தில் ஒண்டி ஏட்டு வைத்திருக்கும் பூஜை அறை செட்டப்பை பார்த்து கடுப்பாகி, “இது என்ன காவல் நிலையமா? இல்லை ஆண்டி மடமா?” என்று கோபத்தில் கத்தினார்.

உடனே இது எல்லாம் தூக்கி வெளியில் போட வேண்டும் என்று உத்தரவிட்டார்,

ஒண்டி ஏட்டு “அய்யா, அய்யா” என்று காலை பிடிக்க ஓடினார்.

அதை சட்டை செய்யாமல் அந்த அதிகாரி அய்யனார் சிலையை தூக்கி வெளியில் வீசினார்.

தம் பூட்ஸ் காலால் மற்ற பூஜை சாமான்களையும் கலைத்து விட்டார்.

ஒண்டி ஏட்டு தலையில் அடித்துக் கொண்டு மயக்கமானர்.

அந்த அதிகாரியின் செயலால் மற்ற அதிகாரிகள், காவலர்கள் எல்லாம் வெறுப்படைந்தாலும் உயர் அதிகாரி முன் எதுவும் செய்ய முடியாமல் அவர் போன பின்பு, மறுபடியும் அந்த பூஜை அறையை கட்டமைத்து ஒண்டி ஏட்டை தேற்றினார்கள்.

ஒண்டி ஏட்டு சகஜ நிலைமைக்கு திரும்ப மாத கணக்கில் ஆனது.

சிலையோடு பேசினாலும், மனிதர்களை நேசிப்பதில் ஒண்டி ஏட்டுக்கு நிகர் எவருமில்லை.

சுற்று வட்டார கிராம மக்களுக்கு ஒண்டி ஏட்டுதான் காவல் தெய்வம் அய்யனார்.

குடும்ப பிரச்சனைக்கு தீர்வு, உடல் நலம் சரியில்லாதவர்களுக்கு நாட்டு மருந்து, சிறு,குறு கடன் வழங்குதல் என ஒண்டி ஏட்டின் கடமைகள் ஏராளம்.

ஒண்டி எட்டு அந்த சுற்று வட்டார கிராமங்களின் தலைப்பிள்ளை. நல்லதோ கெட்டதோ ஒண்டி எட்டு இல்லாமல் கிடையாது .

ஒண்டி ஏட்டால் இந்த கிராமங்களில் குற்றங்கள் குறைந்ததால் காவல் துறைக்கும் மகிழ்ச்சிதான்.

ஒருநாள் சிறையில் இருந்து தப்பிய 4 தீவிரவாதிகள் ஒண்டி ஏட்டு காவல் நிலைய எல்லைக் காடுகளில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது.

நிறைய காவலர்கள் வரவழைக்க பட்டு கிராம மக்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

வார கணக்கில் நடந்த தேடுதலில் எதுவும் முன்னேற்றம் இல்லாதால் வெளியிலிருந்து வந்த காவலர்கள் ஒண்டி ஏட்டிடம் ஏதேனும் நடமாட்டம் தெரிந்தால் தகவல் சொல்லும்படி சொல்லி விட்டு திரும்பினார்கள்.

ஒண்டி ஏட்டு கவலையுற்றார். அந்த தீவிரவாதிகள் வடநாட்டில் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் குண்டு வைத்து பல பிஞ்சுகளைக் கொன்றவர்கள்.

ஒண்டி ஏட்டு மனசு முழுவதும் அந்தத் தீவிரவாதிகள்தான் இருந்தார்கள். அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அன்று இரவு அய்யனாரிடம் பேசினார் ஒண்டி ஏட்டு; நடு நிசியாகியிருந்தது. ஸ்டேஷன் வாசலில் நாய் குலைத்தது. ஒண்டி ஏட்டு எழுந்து வெளியில் வந்தார்,

போர்வை போர்த்திய ஒரு கிராமவாசி , “அந்த நாலு பேரும் காட்டில் பதுங்க வில்லை; ஒரு ஜீப்பிலேயே சுற்றி வருகிறார்கள். இப்போது நம் ஸ்டேஷனுக்கு 3 கி.மீ தூரத்தில் ஜீப்பை நிறுத்தி சாப்பிடுகிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் நம் சோதனைச் சாவடியை கடப்பார்கள்” என்ற செய்தியை சொல்லி விட்டு மறைந்தான்.

“யாரிடம் பேசுகிறீர்கள் ஏட்டய்யா?” என்று ஸ்டேஷன் சென்ட்ரி கேட்டார்.

“யாரு வராங்க, யாரு போறாங்கன்னு கூட தெரியாம நீ டூட்டி பாக்கிற லட்சணம்” என்று ஒண்டி ஏட்டு அவரை திட்டிக் கொண்டே வயர்லெஸ் செட்டையும், டார்ச்சையும் எடுத்துக் கொண்டு ரோட்டுக்கு விரைந்தார்.

வயர்லெஸ் செட்டில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொன்னார். உடனே படையை அனுப்பும்படி கேட்டார்.

ஸ்டேஷன் சென்ட்ரிக்கு ஏதும் புரியவில்லை. ‘யாருமே வரவில்லையே? ஒண்டி ஏட்டு தூக்கத்தில் ஏதோ உளறுகிறார்’ என்று நினைத்துக் கொண்டார்.

ஒண்டி ஏட்டு நடுரோட்டில் போய் நின்று கொண்டார். அந்த ஜீப் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.

ஸ்டேஷன் சென்ட்ரி “ஓரமா வாங்க ஏட்டையா!” என்று கத்தினார்,

ஒண்டி எட்டு திரும்பி பார்க்க எத்தனித்த போது 100 கி.மீ வேகத்தில் வந்த ஜீப் அவர் மீது மோதியது.

ஒண்டி ஏட்டு 20 ஆடி உயரத்தில் பறந்து பாறையில் மோதி, 50 அடி பள்ளத்தில் ரத்தம் சொட்ட உருண்டு காணாமல் போனார் .

ஒண்டி ஏட்டு மீது மோதிய ஜீப் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அந்த நாலு பேரும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டு கட்டுப்பாட்டு அறை காவலர்களால் கைது செய்யப்பட்டார்கள்.

தனி படை அமைத்து அந்த ஸ்டேஷன் சென்ட்ரி கை காட்டிய மலையடிவாரத்தில் ஒண்டி ஏட்டை விடிய விடிய தேடினார்கள்,

மொத்த கிராமமும் கண்ணீரும் கம்பலையையுமாய் மொத்த காட்டையும் சல்லடை போட்டு தேடியது. மோப்ப நாய்கள் கொண்டு வந்தார்கள். ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது .

மூன்று நாட்களாகி விட்டது. ஒண்டி ஏட்டை கண்டு பிடிக்க முடியவில்லை.

ஒண்டி ஏட்டு இறந்திருக்க வேண்டும், மிருகங்கள் பாடியை இழுத்து சென்றிருக்கலாம் என்று தனி படை ரிப்போர்ட் கொடுத்தார்கள்.

தங்கள் குல சாமியை தொலைத்த சோகத்தில் மொத்த கிராமமும் அழுது கரைந்து கோவிலில் விளக்கேற்றி சாமியை தேடி தரச்சொல்லி சாமியிடமே மண்டியிட்டர்கள்.

வேண்டுதல் பலித்தது. ஒண்டி ஏட்டு தலையில், கை காலில் கட்டுடன் அதிகாலையில் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தார் .

மொத்த கிராமமும் திரண்டது. தங்கள் குலசாமியை கண்டு நெகிழ்ந்து பிளறியது .

ஒண்டி ஏட்டை தலைமையகத்துக்கு கொண்டு போய் தப்பித்த விபரம் கேட்டார்கள் .

“முன்னொரு நாளில் ஆய்வுக்கு வந்து அய்யனார் சிலையை எட்டி உதைத்த வடநாட்டு அதிகாரிதான் ஜீப்பில் வந்து என்னை கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். என்னை டிஸ்சார்ஜ் பண்ணி ஸ்டேஷன் வாசலில் இறக்கி விட்டார்” என்று ஒண்டி ஏட்டு சொன்னதும் எல்லோருக்கும் பேரதிர்ச்சி.

ஏனெனில் அந்த அதிகாரி மாரடைப்பால் இறந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. ஆனால் ஒண்டி ஏட்டு அவர்தான் என்று உறுதியோடு சொல்கிறார்.

பெரும் குழப்பம் மூண்டது. உடனே தனிப்படை ஒன்று, ஒண்டி ஏட்டு சொன்ன மருத்துவமனைக்கு விரைந்தது.

விசாரித்ததில் அந்த சுற்று வட்டாரத்தில் எந்த மருத்துவமனையும் இல்லை என்ற தகவல் எல்லோருக்கும் இன்னும் குழப்பத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

தலையில் அடிபட்டதால் நினைவு தப்பியருக்குமோ என்ற கோணத்தில் ஒண்டி ஏட்டை பல விதமான டெஸ்ட் எடுத்து மருத்துவர்கள் சோதித்தார்கள்.

பொய் கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது. எல்லாம் சரியாக இருந்தது.

மேலும் “ஒருவர் 20 அடி உயரத்தில் பறந்து பாறைகளில் மோதி ரத்த வெள்ளத்தில் 50 அடி பள்ளத்தில் உருண்டு சிறு காயங்களுடன் உயிர் பிழைத்து எழுந்து நடந்து வருவது என்பது வாய்ப்பே இல்லை” என்று மருத்துவர்கள் சொன்ன தகவலைக் கேட்டு விசாரணை அதிகாரிகள் தலையை பிய்த்துக் கொண்டார்கள் .

மயங்கிய நிலையில் இருந்த போது உயரமாய், சிகப்பாய் அந்த அதிகாரி அவரை தூக்கி வண்டியில் ஏத்தியது, திருப்பி ஸ்டேஷன் வாசலில் இறக்கி விட்டது, அவரிடம் தப்பு தப்பாய் ஹிந்தியில் பேசியது, சிலையை தூக்கி எரிந்ததற்கு அவர் மன்னிப்பு கேட்டது எல்லாம் ஒண்டி ஏட்டுக்கு ரொம்ப தெளிவாக நினைவில் உள்ளது.

அதே சமயம் அவர் தற்சமயம் உயிரோடு இல்லை என்பதும் நிஜம். அந்த நிலப்பரப்பில் எந்த மருத்துவ மனையும் வேறு கிடையாது . ஒண்டி ஏட்டுக்கும் ஒரே ஆச்சிரியமாக இருந்தது .

ஒண்டி ஏட்டு ஸ்டேஷனுக்கு வந்தார் , அன்று இரவு பணியில் இருந்த அதே சென்ட்ரி நின்று கொண்டிருந்தார்.

“ஏட்டய்யா அன்னைக்கு எந்த கிராம வாசியும் வரலைய்யா , நீங்களா போய் நடுரோட்டில் நின்று ஜீப்பை மறைத்தீர்கள்.” என்று அவர் ஒரு குண்டை போட்டார்.

ஒண்டி ஏட்டு அய்யனார் அறையை திறந்தார், ஒரே மருத்துவமனை நெடி , ரத்த வாசம் , உபயோகிக்கபட்ட ஊசிகள் எல்லாம் சிதறிக் கிடந்தன.

மொத்த உடம்பும் சிலிர்த்தது. ஒண்டி ஏட்டுக்கு எல்லாம் புரிந்து விட்டது . ” நீதான் என்னைக் காப்பற்றினாயா?” சிலையை தூக்கி முத்தமிட்டார். சிலையின் பின்புறத் தலைப்பகுதி லேசாக சிதிலமடைந்திருந்தது …

“சடகோபா, சடகோபா” என்று தம் பாட்டி அழைப்பது போல் குரல் கேட்டது.

உடனே வெளியில் வந்தார் ஒண்டி ஏட்டு. சென்ட்ரி மட்டும் நின்று கொண்டிருந்தார்.

” என்ன ஏட்டய்யா?” என்று கேட்டார்.

“ஒன்றுமில்லை” என்று சொன்னார். இனி யாரிடமும் எதுவும் சொல்வதற்கில்லை என தீர்மானித்தார். சொன்னாலும் யாரும் நம்ப போவதில்லை.

அந்த மூன்று நாள் ஒண்டி ஏட்டு எங்கிருந்தார் ? எப்படி உயிர் பிழைத்தார்? என்ற விபரத்தை கடைசிவரை விசாரணை அதிகாரிகளால் சேகரிக்க முடியவில்லை.

ஒண்டி ஏட்டுக்கு அடிபட்ட அந்த சில நாட்கள் மட்டும் மனச்சிதைவு ஏற்பட்டது என்றும், தற்போது அவர் நல்ல உடல், மன நலத்துடன் உள்ளதாகவும் என்று ரிப்போர்ட் எழுதி விசாரணையை முடித்தார்கள்.

தீவிரவாதிகள் பிடிபட்ட வழக்கில் ஒண்டி ஏட்டுக்கு பாராட்டும் பதவி உயர்வும் கிடைத்தது. அதே காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டார் .

அய்யனார் அறையிருந்து “சடகோபா, சடகோபா” என்று பாட்டி கூப்பிடும் சத்தம் வந்தது.

ஒண்டி ஏட்டு உள்ளே போய் தம் பதவி உயர்வு கடிதத்தை சிலைக்கு முன் வைத்து சல்யூட் அடித்தார். ஒண்டி ஏட்டு ஒண்டி எஸ் ஐ ஆனார் .

பெயரில்தான் ஒண்டி இருக்கிறது. நிஜத்தில் அவர் பெரும் கூட்டத்துடன் இருக்கிறார்.

முனைவர் க.வீரமணி
சென்னை
கைபேசி: 9080420849

6 Replies to “ஒண்டி ஏட்டும் அய்யனாரும் – சிறுகதை”

 1. பக்தி, காதல், அன்பு, தியாகம், போன்ற மனரீதியான தத்துவங்கள் அறிவியல் என்னும் தத்துவத்தை எதிர்க்கவில்லை என்றாலும் பல சமயம் அதனை தோற்கடித்து இருக்கிறது என்பதை அறிவியல் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்…

  மனித சக்தி என்பது விலங்குகளின் சக்தியை காட்டிலும் பெரியது.
  ஆக, மனித சக்தியை காட்டிலும் பெரியது இருக்கத்தான் வேண்டும்.

  ஒண்டி ஏட்டை காப்பாற்றியதும் அப்படி பட்ட ஒரு சக்தி தான்..

  பின் கதைகளை காட்டிலும் மாறுபட்ட கதைகளமாக இருந்தாலும் இதிலும் பக்தி என்னும் காதலின் சாயல் தெரிகிறது…

  தனித்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள்…

  அமானுஷ்யம், பக்தி, ஊருக்காக வாழும் பண்பு போன்ற அமைப்புகள்…

  தனி நன்று ஒண்டி ஏட்டை காண வேண்டும். சாத்தியமா?

 2. பிறருக்காக வாழ்பவர்களிடம் எப்போதும் ஒரு பெரிய சக்தி உறைந்திருக்கும். அதை இறையருள் என்றும் சொல்லலாம்; இயற்கையின் அருட்கொடை என்றும் சொல்லலாம்.

  அந்த சக்திதான் அவர்களைப் பிறருக்காகத் தன்னைப் பணயம் வைக்கத் தூண்டுகிறது; மனித எல்லைகளை விரிக்க வைக்கின்றது.

  அத்தகையோர்களால் தான் இந்த உலகம் இயங்குகின்றது.

  இது என் கருத்தல்ல; புறநானூற்றின் கருத்து.

  தமக்கென முயலா நோன்றாள்
  பிறர்க்கென முயலுநர் உண்மையானே!

  ஊருக்கு உழைப்பவருக்கு ஒண்டி ஏட்டின் உள்ளம் புரியும்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.