தேவி 96 கிலோ இருக்கிறாள். 30 வயதாகிறது. எந்த துணிக்கடையிலும் எந்த ரெடிமேட் துணியும் இவளுக்குப் பொருத்தமாய் கிடைப்பதில்லை.
ஒருநாள், நகரின் பெரிய ஜவுளி கடையில் நான்கு பக்கமும் கண்ணாடி கொண்ட ட்ரையல் ரூமில் தன் உருவத்தைப் பார்த்துத் தானே மிரண்டு விட்டாள்.
கல்லூரிக் காலத்தில் தேன்சிட்டு போல் திரிந்த தேவி, டிகிரி முடித்த கையோடு கால் சென்டர் வேலைக்கு போனது, துரித உணவு, தூக்கமின்மை, கூடுதலாய் வந்த தைராய்ட் மற்றும் பி சி ஓ டி பிரச்சினைகள் இவளை இப்படி அலங்கோலப்படுத்தியுள்ளது.
தேவி எங்கும் வெளியில் செல்வதில்லை. எத்தனயோ உருவக் கேலிகள், வரன் தேடி வருபவர்களின் மறுதலிப்பு என தேவி ரணப்பட்டுக் கிடக்கிறாள் .
அம்மா, அப்பா, தம்பி மூவரும்தான் தேவிக்கு உலகம். அதேசமயம் அவர்களுக்கு பாரமாய் இருப்பதையும் அதுவும் ரொம்ப பாரமாய் இருப்பதை தேவி விரும்பவில்லை, நிறைய முறை தற்கொலைக்கு முயன்றும் அதுவும் தோல்விதான்.
இதோ இப்போதும் யாரோ பெண் பார்க்க வருகிறார்களாம். தூரத்து சொந்தமாம்; ஜாதகம் எல்லாம் நன்றாக பொருந்தி போய் உள்ளதாம்; இருந்தும் பிடிக்கவில்லை என்றுதான் சொல்வார்கள்; என் உருவம் பேசு பொருளாகும்.
எவ்வளவு சொல்லியும் அம்மா, அப்பா கேட்பதாய் இல்லை. இந்த முறை ஏதோ மிலிட்டரியில் வேலை செய்யும் மாப்பிள்ளையாம் . தேவிக்கு அயற்சியாய் இருந்தது.
சொல்லி வைத்தார் போல் தேவி செலக்ட் ஆகவில்லை. இது தேவிக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான்.
ஆனால் தேவிக்கு அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது.
பெண் பார்க்க வந்தவர்கள் சொல்வது உண்மைதான். அவன் தம்பி போல்தான் தெரிந்தான்.
மிலிட்டரியில் வேலை செய்பவன் என்றால் ஒரு காட்டு மிராண்டி உருவமல்லவா இருக்க வேண்டும். இவன் எப்படி பிரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல இருக்கிறான். கனிவான உடல் மொழி; பேச்சு.
100-க்கும் மேல் மாப்பிள்ளைகள் வந்து போய் உள்ளார்கள். தேவிக்கு யார் மீதும் எந்த ஈர்ப்பும் வந்ததில்லை. ஆனால் இவனிடம் பேச நினைத்தாள்.
ஆனால் அந்த ஆப்பிள் தானாகவே எழுந்து வந்து பேசியது , “சாரி தேவி” என்றது,
தேவிக்கு ஒரே ஆச்சர்யம்.
‘நாம் நினைத்தது இவனுக்கு எப்படி தெரிந்தது?’
“பரவாயில்லை தம்பி” என்றாள் .
“ஹலோ, நான் தம்பி கிடையாது. உங்களை விட 4 வயது மூத்தவன்” என்று கோபித்தான்.
“உங்கள் பெயர் என்ன வித்தியாசமாக இருக்கிறது? அகிலாம்பரம்?” என்று கேட்டாள்.
“என் பெயர் அகிலன், என் தாத்தா பீதாம்பரம் பெயரையும் கொஞ்சம் சேர்த்து வைத்து விட்டார்கள் ” என்று சிரித்தான்.
அவன் அருகாமை, சிரிப்பு எல்லாம் தேவிக்கு அவன் ரொம்ப காலமாக பழகிய ஆள் போல் பட்டது.
“எப்படி உங்கள் உடலை இப்படி கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறீர்கள்? மிலிட்டிரி பயிற்சியா? என்னால் இப்படி ஆக முடியுமா?” சிறுகுழந்தை போல் தேவி கேட்டது, அகிலனுக்கு ரொம்ப பாவமாகப் பட்டது .
“ஏன் முடியாது? மிலிட்டரியாவது , கிலிட்டரியாவது, யார் வேண்டுமானாலும் செய்யலாம். 6 மாதத்தில் உங்களை பாதி தேவியாக்கி மீதியை ஆவியாக்கலாம்” என்று அவள் தோள் தட்டி சிரித்தான்.
“உங்கள் வாட்சப்பில் உணவு மற்றும் பயிற்சி திட்டத்தை இன்று இரவே அனுப்புகிறேன், நாளை காலை 6 மணியிலிருந்து உங்களுக்கு பயிற்சி தொடக்கம்” என்று அகிலன் சொல்ல சொல்ல தேவியின் காதில் தேன் வந்து பாய்ந்தது.
தேவிக்கு இது வரை உணராத இனம் புரியாத உற்சாகம் பீறிட்டது. நம்பரை பரிமாறிக் கொண்டார்கள். அகிலன் கிளம்பினான்.
அதே தேதியில் வேறு ஒரு பெண் பார்க்கும் படலத்திற்கு அகிலன் குடும்பம் போனது.
அந்த பெண்ணை அகிலன் வீட்டாருக்கு ரொம்ப பிடித்து விட்டது. அவள் பெயர் செவ்வந்தி. கொள்ளை அழகு.
கண்கள் முழுதும் காதல். கணுக்கால் வரை கூந்தல். செவந்திக்கும் அகிலனை பிடித்து விட்டது. அகிலனுக்கு ஏற்ற ஜோடி. எல்லாம் பொருந்தி வர அன்று மாலையே நிச்சயம் செய்தார்கள்.
மிலிட்டரியில் சொன்ன நேரத்தில் விடுப்பு கிடைப்பது கஷ்டம் என்பதால் தேதி குறிப்பிடாமல் திருமணம் முடிவு செய்தார்கள்.
செவ்வந்தி முகம் சிவக்க, அகிலன் நெகிழ, காதல் ஒளிர்ந்தது; கேமரா மின்னியது.
அங்கு செவ்வந்திக்கு ‘இப்போதே அகிலனுடன் கிளம்பிப் போய்விட வேண்டும்’ என்று தோன்றியது .
இங்கு தேவி நூறாவது முறையாக அகிலனின் வாட்சப்பைத் திறந்து திறந்து மூடிக் கொண்டிருந்தாள்.
அகிலன் ஆப் லைன். பொறுமை தாள முடியாமல் “ஹாய்…” என்று ஒரு மெஸேஜும் அனுப்பினாள் .
அகிலன் நள்ளிரவில் வீடு திரும்பினான். அதற்குள் ‘மிஸ் யூ’ இன்று முதல் ‘நீ என் கணவன்’ என்று செவ்வந்தி செய்தி அனுப்பியிருந்தாள்.
அகிலன் ‘சரி’ என்று பதில் அனுப்பினான்.
தேவிக்கும் எடை குறைப்புத் திட்டத்தை அனுப்பினான். தவறாமல் விதிகளை கடைபிடிக்கச் சொல்லி, சந்தேகம் என்றால் வாரம் ஒரு முறை போன் செய்ய சொன்னான்.
தன் நிச்சயதார்த்தம் பற்றியும் சொல்லி விட்டு உடல் அசதியில் அகிலன் உறங்கி போனான்.
செவ்வந்தியும் தேவியும் அன்றிரவு முழுதும் உறங்கவேயில்லை.
அகிலன் பட்டாளம் திரும்பினான்.
வாரம் ஒருமுறை போன் செய்ய சொன்ன தேவி தினமும் தொடர்பு கொண்டாள்.
செவ்வந்தி கேட்கவே வேண்டாம். தினம் 10 முறை போன் செய்யலானாள்.
தேவிக்கு அகிலனின் வாக்கு வேதமானது. நாளுக்கு நாள் அதிவேகத்தில் அவள் எடை குறைந்தது.
நான்கே மாதத்தில் தேவி 96 லிருந்து 58 கிலோ தாஜ்மகாலாக மாறி நின்றாள். அகிலன் மட்டுமல்ல அகிலமே வியந்தது.
ஒரு எடை குறைப்பு நிறுவனம், விளம்பரத்தில் தேவியை நடிக்கக் கூப்பிட்டது . யூடிபில் பேட்டி எடுத்தார்கள்.
தேவி மிதந்தாள். எல்லாப் புகழும் அகிலனுக்கே என்பதில் உறுதியானாள். ‘இந்த உடலும், உயிரும் அகிலனுக்கே’ என்ற முடிவுக்கு வந்தாள் .
அகிலாம்பரம் என்ற பெயரில் ஜிம் ஆரம்பித்தாள். பெயர்க் காரணம் கேட்டவர்களுக்கு அது என் இஷ்ட தெய்வத்தின் பெயர் என்றாள்.
அகிலனைத் தீவிரமாகக் காதலிக்கத் தொடங்கினாள். வீட்டார்கள் எதிர்த்தார்கள்.
‘வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் ஆன அகிலன் எப்படி உனக்கானவனாக ஆக முடியும்? எடை குறைந்ததும் புத்தியும் தொலைந்ததா? வியாதி குணமானவுடன் வைத்தியம் பார்த்த டாக்டரை கல்யாணம் பண்ணிக் கொள்வோமா?’
அகிலனும் நிறைய சொல்லி பார்த்தான். வேறு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்ப்பதாகச் சொன்னான்.
அகிலனுக்கும் தனக்கும் இடையில் காற்று கூட வரக்கூடாது என்று எண்ணும் செவ்வந்தி, இதைக் கேட்டவுடன் பத்ரகாளியானாள்.
தேவி எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
‘எனக்கும் அகிலனுக்கும் இடையில் காதல், கல்யாணம், காமம் எல்லாவற்றையும் தாண்டிய ஒரு உணர்வு, ஒரு உறவு. நான் எப்போதோ செத்துப் போயிருக்க வேண்டியவள். என் வாழ்வும் மரணமும் இனி அகிலாம்பர நாதனுக்கே’ என்று உறுதி காட்டினாள் .
‘கண்ணா இரண்டு லட்டு திண்ண ஆசையா?’ நண்பர்கள் கிண்டலடித்தார்கள்.
ஆனால் அகிலன் ஒரு பெருங்கசப்பை ஜீரணிக்க வேண்டிய நிர்பந்தம் வந்தது. எல்லையில் போர் மேகம் சூழ்ந்தது.
உள்ளே உறுதியும், வெளியே நெகிழ்வும் கொண்ட உளவுத் துறையில் பெரிய அனுபவம் வாய்ந்த அகிலனுக்கு அண்டை நாட்டுக்குள் புக உத்திரவு வந்தது.
அந்த நாட்டில் ஏற்கனேவே உளவு பணியில் இருக்கும் அதிகாரியிடம் மட்டுமே ரிப்போர்டிங். தாய் நாட்டில் யாரோடும் தொடர்பு கொள்ளக் கூடாது அகிலன் மரணமடைந்தால் மட்டுமே வீட்டுக்கு தகவல் வரும்.
போனில் எல்லவற்றையும் எல்லோருக்கும் சொல்லி விட்டு அகிலன் புறப்பட்டான்.
உணர்ச்சிகளை விடுத்து பாறை போல் நின்ற அகிலனை பார்த்த அதிகாரிகள் மிரண்டார்கள்.
முகாமில் ‘பாரத் மாதா வாழ்க’ என்ற கோஷம் விண்ணை பிளந்தது .
இங்கே தேவியும் செவ்வந்தியும் உணவின்றி உறக்கமின்றிப் பித்து நிலைக்குப் போனார்கள். 6 மாதத்திற்கு மேலாகியும் அகிலனைப் பற்றிய எந்த தகவலும் இல்லை.
கடைசியாக செவ்வந்தியிடம் பேசிய அகிலன், “தேவி சொல்வது சரிதான். காமம் அற்ற ஒரு பெருங்காதல் எனக்குள்ளும் உணர்கிறேன். அவள் நான் வளர்த்த குழந்தை. அவளை எக்காரணம் கொண்டும் காயப்படுத்தி விடாதே. இது நம் காதல் மீது ஆணை” என்று சொல்லியிருந்தான்.
செவ்வந்தி கிளம்பி தேவியிடம் வந்தாள். தேவியும் செவ்வந்தியும் டில்லி இராணுவ தலைமையகத்தின் கதவுகளை தட்டினார்கள் .
அரை குறை ஆங்கிலத்திலும் தமிழிலும் இவர்கள் பேசிஅழுதது எல்லோருக்கும் தெளிவாகப் புரிந்தது.
அதிகாரிகள் எல்லை முகாமைத் தொடர்பு கொண்டார்கள்.
‘அகிலன் உயிருடன்தான் இருக்கிறான், அவன் நாடு திரும்புதல் இப்போதைக்கு இல்லை’ என பதில் வந்தது.
உடைந்து அழுத இருவரையும் அப்பனை ஒத்த வயதுடைய அதிகாரி ஒருவர் இரண்டு கைகளாலும் அணைத்துக் கொண்டார்,
“அகிலன் என் பயிற்சி மாணவன். யாராலும் வெல்ல முடியாத மாவீரன். அவன் கட்டாயம் திரும்பி வருவான். எனக்கு மகள் இல்லை, இன்று முதல் இரண்டு மகள்கள் ” என்று அவர்களை ஆசுவாசப்படுத்தி, தன் ரகசிய நம்பரையும் கொடுத்து, இருவரையும் தம் சொந்த செலவில் விமானம் மூலம் சென்னைக்கு திருப்பி அனுப்பி வைத்தார்.
வருடங்கள் ஆகி விட்டது. அகிலன் இன்னும் வரவில்லை .
தேவிக்கும் செவ்வந்திக்கும் வேறு திருமணம் செய்ய வீட்டார்கள் வற்புறுத்துகிறார்கள். தேவிக்கு அதிகம் நெருக்கடி கொடுத்தார்கள்.
‘அகிலன் வந்தாலும் வராவிட்டாலும் நாங்கள் யாரையும் இனி நினைத்துக் கூடப் பார்க்க மாட்டோம்’ என்று இருவரும் மறுத்து விட்டார்கள் .
எல்லையில் போர் பதட்டம் ஓயவில்லை, அகிலன் தம் நாட்டுக்குள் இருப்பதை எதிரி நாட்டின் உளவுத் துறை மோப்பம் பிடித்து விட்டது. அகிலன் மாட்டிக் கொண்டால் சாம்பல் கூட திரும்பக் கிடைக்காது.
‘அகிலன் எப்படியாவது உயிருடன் திரும்பி வந்து விட வேண்டும்’ என எல்லோர் அடி மனதிலும் ஒரு கேவல் எழுந்து கொண்டேயிருக்கிறது.
முனைவர் க.வீரமணி
சென்னை
கைபேசி: 9080420849
Comments
“ஒரு கிளி உருகுது ஒரு கிளி தவிக்குது – சிறுகதை” அதற்கு 8 மறுமொழிகள்
இக்கதையில் வரும் இரு பெண்களும் கதாநாயகன் மேல் அன்பு செலுத்தினாலும் இருவரின் அன்பிலும் வேறுபாடுகள் உள்ளன… தேவியின் அன்பு பக்தியையும் செவ்வந்தியின் அன்பு காதலையும் வெளிப்படுத்துவது அழகாக பிரிக்க முடிகிறது… மேலும் தலைவனை பிரிந்த அக்காலத்து பெண்கள் *பசலை* என்னும் உடல் உபாதைக்கு ஆளாக நேர்ந்தது.. அந்த சாயல் இக்கதையிலும் தெரிந்தது… திறந்த முனை முடிவு (Open ended) நல்ல முயற்சி எனலாம்…
காத்துவாக்குல ரெண்டு காதல்….🤭
அருமையான கதைக்களம் அதனுள் ஒரு போர்க்களம். வாழ்த்துக்கள் ஐயா
highlights tittle💯💯
Story kku poruthamana tittle❣️
Good story waiting for agilan decision ✨
Veeramani sir portraits the character in this story is impeccable. Devi character is peculiar and her love for akilan is unique. Personally I felt devi character is more attached to a part of love which I held. Thank you for the present of character like this .
படம் பார்ப்பது போல் இருக்கிறது.
அகிலன் என்ன ஆனான்? யாரை திருமணம் செய்து கொண்டான்?
எல்லா கேள்விகளையும் கதையைப் படிப்பவர்கள் கேட்கும்படியும் பதிலற்று தவிக்கும்படியும் கதையை அமைத்திருப்பது ரொம்ப நன்றாக இருக்கிறது….
எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை
எப்போதும் போல் வாசிக்கும் போது கண்ணீர் துளிர்க்கிறது..
ஏதேதோ நினைவுகள்
நீங்கள் சொல்வது போல் காசு பணம் எதுவும் மிச்சம் இல்லை இது போன்ற அழிக்க முடியாத நினைவுகள் தான்…
Super pa.
அருமையான வரிகள்!
இரு மனதில் ஒரு காதல்…
சூப்பர் சார்
Defenceல் பணி செய்யும் கிராமத்தை சேர்ந்த வீரஇளைஞர்கள் பெரும்பாலோனோர் இந்த மனநிலையில் தான் உள்ளனர்
முடிவை முனைவர் கையில் எடுக்காமல் காலத்தின் கையில் விட்டுவிட்டார்…..ஆனாலும் அருமை