ஒளி விளக்கு - சிறுகதை

ஒளி விளக்கு – சிறுகதை

பெண் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து பெண்ணின் தந்தை, சுபாசினியைப் பற்றிக் கூறியவைகள் ரமேசின் மனதில் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தன.

“அதிகம் படிக்க வைக்கல, யாரிடமும் கலகலவெனப் பேச மாட்டாள். ரொம்பவும் வெட்கப்படுவாள்.

அக்காவிடம் அவளுக்கு ரொம்பவும் அன்பு. அவளிடம் மட்டுமே பேசுவாள். வெளியே எங்கும் சென்று வந்து பழக்கமில்லை!

வயசுதான் இருபத்தி மூணு, ஆனால் இன்னும் அவள் குழந்தை மாதிரி தான். ரொம்பவும் பயந்த சுபாவம்”

பெண் பார்க்கச் சென்ற அன்று மாப்பிள்ளை வீட்டார் சுபாசினியிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்த போதே அவள் ஒருவித பதட்டத்தோடுதான் பேசியதாக ரமேசிடம் கூறினர்.

அனைவரது முன்னிலையிலும் பேச வெட்கப்படுகிறாளோ என நினைத்துத் தனியாக அழைத்துச் சென்று பேசியும் அவளின் படபடப்பு மாறவில்லை!

‘எல்லோரையும் கலந்தாலோசித்து விட்டுச் சொல்கிறோம்’ எனப் பெண் வீட்டாரிடம் கூறிவிட்டு வந்துவிட்டதால் இப்போது ரமேசிடம் அவனது கருத்து குறித்து அனைவரும் கேட்டபோது தான் பெண்ணின் தந்தை கூறியவைகள் அவன் மனதில் ஒலித்தன.

மாமா கேட்டார் “ரமேசு, பெண் எப்படி?”

அவன் பதில் சொல்வதற்குள் ரமேசின் பாட்டி “பெண்ணோட அக்கா வீட்டுக்காரர் உன்னை மட்டும் தனியாக வெளியே அழைத்துச் சென்று ஏதோ பேசினாரே? என்ன சொன்னார்?” எனக் கேட்க, ரமேசு சொல்ல ஆரம்பித்தான்.

“சுபாசினிக்கு வயதிற்கேற்ப மனவளர்ச்சி இல்லையாம். பிறர் உதவியின்றி தானாக எதுவும் செய்து கொள்ள முடியாதாம்.

நம்ம வீட்டில் ஒரு பெண் இதே நிலையில் இருந்தால் அவளை எப்படி நடத்துவீர்களோ அதுமாதிரிதான் நடத்தணுமாம்.

நாம் அவளிடம் நடந்து கொள்ளும் விதத்திலும், காட்டுகிற அன்பு, பரிவிலும் தான் அவளது தற்போதைய நிலை படிப்படியாக மாறுமாம்.

திருமணம் செய்து வைப்பதில் தப்பில்லை! ஆனால் அவளுக்கு வரும் கணவன் அமைவதைப் பொறுத்தே அவன் வாழ்க்கை அமையும்” என மருத்துவர் கூறியிருக்கிறார் என்றான்.

“உனக்கென்ன தலை எழுத்தா? நமக்கு இப்படி ஒரு பெண் தேவையா? இதை ஒரு கெட்ட கனவாய் நினைத்து மறந்திடு. வேறு வரன் பார்ப்போம்.”

அனைவரும் ஒட்டு மொத்தமாக இப்படிக் கூறியதும் பதில் ஏதுவும் சொல்லாமல் மௌனமாகவே இருந்தான் ரமேசு.

“என்னடா பேசாமயிருக்கே?”

“இந்தப் பெண்ணையே முடிச்சிடுங்க” ரமேசு தீர்மானமாகச் சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியுற்றனர்.

“ரமேசு, நன்றாக யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்தாயா? இது உன்னோட வாழ்க்கை” ஆதங்கப்பட்டாள் அம்மா.

“எல்லோரும் என்னைப் பற்றி கவலைப்படறீங்களே…. அந்தப் பெண்ணைப் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பாருங்க!

பெண் பார்க்க வரும் ஒவ்வொருத்தருமே அவளை ஒதுக்கிட்டா அவள் கதி? அவளது வாழ்க்கை?

‘வருகிற பையன்களில் யாராவது ஒருவன் இவளைப் புரிந்து கொண்டு வாழ்க்கை கொடுக்க மாட்டானா?’ என எவ்வளவு தன்னம்பிக்கையுடன் உள்ளதை உள்ளபடி,

எதையும் மறைக்காமல் வெளிப்படையாக சுபாசினியைப் பற்றி அவளது அக்கா வீட்டுக்காரர் சொன்னார். அந்த அணுகுமுறையே எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.

இப்படிப்பட்ட மனவளர்ச்சியில்லாத பெண்களுக்கு வாழ்க்கை தர என்னைப் போன்ற இளைஞர்கள் முன்வர வேண்டும். அதுக்கு நானே முன் உதாரணமா இருக்கப் போகிறேன்.

சுபாசினியை மனைவியாக இல்லாமல் ஒரு குழந்தையாகப் பாவித்து நான் அவளை ஏத்துக்கப் போறேன்.

அவள் வாழ்க்கை இருண்டு போய்விடாமல் அவளது வாழ்க்கையில் நல்ல ஒளிவிளக்காய் திகழ இதை ஓர் வாய்ப்பாக நான் நினைக்கிறேன்.”

ரமேசின் ஆணித்தரமான பேச்சில் பதிலேதும் கூறமுடியாமல் அனைவருமே வாயடைத்துப் போய் நின்றனர்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.