ஓய்வுக்குப் பின் அமைதி – சிறுகதை

“அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, அவத்திக்கீரை, வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி…” ராகம் போட்டு கூவிக் கொண்டே வந்த காய்கறிக்காரி செங்கமலம் வழக்கம் போல் ரங்காச்சாரியார் வீட்டுத் திண்ணை மீது கூடையை மெதுவாக இறக்கி வைத்து “அம்மா! கீரை..” என உரக்கக் குரல் கொடுத்தாள்.

மூக்குக் கண்ணாடி சற்றுச் சரிந்து கீழே இறங்கியிருக்கக் கண்களை மேலே உயர்த்திப் பார்த்துக் கொண்டே வாசலுக்கு வந்தார் ரங்காச்சாரியார்.

“இந்தாங்கைய்யா, கட்டு ஒண்ணே முக்கால் ரூபா” என்றவாறே அரைக்கீரை கட்டு ஒன்றை எடுத்து நீட்டினாள் செங்கமலம்.

“கட்டு ஒண்ணு, முக்கால் ரூபாயா?”

“சாமி! இந்தக் கிண்டல் தானே வேண்டாங்கிறது. ஒரு கட்டு ஒண்ணே முக்கால் ரூபா. சீக்கிரம் துட்டைக்குடு சாமி. வெய்யில் ஏறிக்கிட்டே போகுது.”

“நீ சொல்ற விலை ஏறிக்கிட்டுப் போற வேகத்தைவிட வெய்யில் வேகம் ஒண்ணும் அவ்வளவு ஜாஸ்தியில்லை”

தினம் ஒரு பத்து நிமிடங்களாவது செங்கமலத்திற்கும், ரங்காச்சாரியாருக்கும் காய்கறி பேரம் நடக்கும். பாதிக்குப் பாதி குறைந்து குறைத்துக் கேட்பார். செங்கமலமும் விடாமல் வாயாடுவாள்.

பொறுமையிழந்து போய் ரங்காச்சாரியார் பாரியாள் அம்புஜம் கரண்டியுடனேயே வாசலுக்கு விரைந்து வந்து, அவர்கள் பேரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து காசைக் கையில் கொடுத்து செங்கமலத்தை அனுப்பி வைப்பாள்.

புடலங்காய், தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய் என வெகு சாதாரண காய்கறிகூட கிலோ எட்டு ரூபாய், பத்து ரூபாய் விற்பதை நினைத்து ரங்காச்சாரியார் மனம் புழுங்கினார்.

“இந்தக்கீரை, கெட்ட கேட்டுக்கு ஒரு கட்டு ஒண்ணே முக்கால் ரூபாயாம்; வாழைக்காய் ஒன்று ஒண்ணே கால் ரூபாயாம்…” நினைத்து நினைத்து உருகினார்.

உள்ளே வந்த ரங்காச்சாரியார் மனைவியிடம், “அம்புஜம், நாளையிலிருந்து செங்கமலம் வந்தால் காய்கறி எதுவும் வாங்க வேண்டாம். திருப்பி அனுப்பிவிடு” என்றார்.

அம்புஜம் ஆச்சரியமுற்றாள்!

ஒருநாள் ஏதாவது காய்கறி இல்லாமல் சமைத்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பவர் இப்படிச் சொன்னால்…?

“இன்னும் சில மாதங்களுக்கு வெறும் ரசமும் வத்தக் குழம்பும் அப்பளமும் போதும்”

அம்புஜத்திற்கு அவரது பேச்சு புரியாத புதிராக இருந்தது.

அன்று மாலை முதலே வீட்டின் முன்புறத்தையும் கொல்லைப்புறத்தையும் தானே வெட்டிக் கொத்தி சுத்தம் செய்து வேலி அமைத்து, அனைத்து காய்கறி விதைகளையும் வாங்கி வந்து தூவி, மறுநாள் முதல் தினம் தண்ணீர் பாய்ச்சி, உரம் போட்டு அக்கறையுடனும் பொறுப்புடனும் கண்காணித்து வர ஆரம்பித்தார் ரங்காச்சாரியார்.

ஒருசில மாதங்களுக்குப் பின் கீரை முதல் அனைத்து ரகக் காய்கறிகளும் ரங்காச்சாரியார் வீட்டுத் தோட்டத்தில் பச்சைப் பசேலெனக் காய்த்துக் குலுங்கின.

ரங்காச்சாரியாருக்கு காய்கறிப் பிரச்சனை தீர்ந்தது மட்டுமின்றி, அத்தெருவிலிருந்த அனைவருக்கும் மிகக்குறைந்த விலையில் அவரே காய்கறி சப்ளை செய்யவும் தொடங்கினார்.

ஓய்வு பெற்றதும், வாழ்க்கையே சூன்யமாகப் போய்விட்டாற் போல் ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திக் கொண்டு, யந்திரத்தனமாய் நாட்களைத் தள்ளிக்கொண்டு மனைவி முதல் வீட்டிலுள்ள பிற நபர்கள் மீது காரணமின்றி எரிந்து விழுந்து கொண்டு மனவியாதியையும் வலிய வரவழைத்து கொள்பவர்களை நினைத்து ரங்காச்சாரியார் பரிதாபம் கொண்டார்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

One Reply to “ஓய்வுக்குப் பின் அமைதி – சிறுகதை”

Comments are closed.