உடல் உறுப்புகளில் கண்களின் செயல்பாடு எவ்வளவு இன்றியமையாதது என்பது நம் அனைவருக்குமே நன்கு புரியும்.
பார்வை இழந்துவிட்டால் வாழ்க்கையே இருண்டு விடும். இந்த அதிமுக்கியமான உடல் உறுப்பான கண்களைக் காப்பதற்காகத்தான் அவைகளுடன் சேர்த்து இமைகளையும் நமக்குத் தந்திருக்கிறான் இறைவன். எனவே கண்களை நாம் எந்தளவுக்குப் போற்றிப் பாதுக்காக்க வேண்டும் என்பது புலனாகிறது.
பார்வைக்குறைவு என்பது பெரும்பாலும் ஒருசில நோய்களாலும், விபத்தினாலும்தான் ஏற்படுகிறது. நோய்கள் வராமல் முன்னெச்சரிக்கையுடன் நாம் நம் உடல் நலத்தைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டால் பார்வைக்குறைவு ஏற்படாமல் தப்பிக்கலாம்.
உலகிலேயே எகிப்து மற்றும் ஒருசில ஆப்பிரிக்க நாடுகளைத் தவிர இந்தியாவில்தான் அதிகஅளவில் மக்கள் பார்வைக்குறைவினால் பாதிக்கப்படுகிறார்கள்.
கொஞ்சம் சிரத்தையுடன் உடல் நலத்தில் கவனம் ஏற்படுத்திக் கொண்டால் தொண்ணூறு சதவிகிதம் இக்குறைபாட்டைத் தவிர்க்க முடியும்.
சாதாரணமாக கண்களைப் பாதிக்கக்கூடிய ஒருசில நோய்களைப் பற்றி ஆராய்வோம்.
கண்புரை நோய்
வலி இல்லாமல் பார்வை மங்குவதின் மூலம் இந்நோய் வளர்கிறது.
இந்நோயால் பீடிக்கப்படுவதற்கு முக்கிய காரணங்கள் முதுமை, வைட்டமின் ஏ,பி,சி மற்றும் புரோடீன் (புரதச்சத்து) பற்றாக்குறை, விஷத்தன்மை வாய்ந்த போதை வஸ்துகளை உபயோகித்தல், நீரழிவு நோய் மற்றும் சிபிலிஸ் என்னும் பால்வினை நோயால் பீடிக்கப்பட்டிருந்தல்.
இந்நோயில் சிலவகை விபத்தினாலும் ஏற்படலாம். குழந்தைகள்கூட ஒருவகை கண்புரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்நோயைக் குணமாக்க ஒரே வழி அறுவைச்சிகிச்சை ஒன்றே. வேறு எந்த மாத்திரையினாலோ, கண் சொட்டு மருந்தாலோ, ஊசி மூலமாவோ குணப்படுத்த முடியாது.
ஒரு திறமை மிக்க மருத்துவரால் இந்நோய்க்கு அறுவைச் சிகிச்சை செய்து கொள்வதின் மூலம் 95 சதவீதப் பார்வையைப் பெற முடியும்.
குளுக்கோமா
இந்நோயின் ஆரம்ப காலகட்டத்தில் தகுந்த சிகிச்சை மேற்கொள்ளப்படாவிடில் கண்கள் முற்றிலும் குருடாகி மேற்கொண்டு எந்த சிகிச்சை மூலமாகவும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
கண்களில் சுரக்கும் ஒருவித திரவத்தின் அழுத்தம் அதிகமாகும்போது இந்நோயின் அறிகுறி எனக் கொள்ளலாம்.
பெரியவர்கள் தான் இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கண்களில் அதிக ரத்த அழுத்தம், மூளை பாதிக்கப்படுதல் போன்றவைகளால் அழுத்தம் அதிகரிக்கும் சமயம் நோயாளிக்குத் தலைவலியும் ஏற்படுகிறது.
விளக்கு வெளிச்சத்தைப் பார்க்கையில் சுற்றிலும் வானவில் நிறங்களாய் தோன்றும்.
கண்களில் அதிக ரத்த அழுத்தம், மூளை பாதிக்கப்படுதல் போன்றவைகளால் அழுத்தம் அதிகமாகும்போது உச்சந்தலையில் அடிப்பது போல் நோயாளிக்குத் தோன்றும்.
தீவிர மருத்துவச் சிகிச்சையும், அறுவைசிகிச்சையும் ஒருவேளை நிலைமையைச் சரி செய்யலாம்.
முழுமையாகக் குணம் பெற முடியாவிட்டாலும், நோயாளி மிகமோசமான நிலைக்குத் தள்ளப்படுவதைத் தவிர்க்க முடியும்.
தலைவலி
பெரும்பாலான கண் நோயாளிகள் அவதிப்படுவது தலைவலியால்தான்.
அதிக வேலை மூலம் உடலை வருத்திக் கொள்ளுதல், மலச்சிக்கல், ஜலதோஷம், அதிக ரத்த அழுத்தம், மூளை பாதிக்கப்படுதல் போன்றவைகளால் பலருக்கு தலைவலி ஏற்படலாம்.
இன்னும் சிலருக்கு தவறான முறையில் கண்களை உபயோகித்து புத்தகங்களைப் படிப்பதாலும், எழுதுவதாலும் திரைப்படங்களைப் பார்ப்பதாலும் தலைவலி ஏற்படுகிறது.
முறையாக செயல்படுவதின் மூலம் இந்நோயை தவிர்க்கலாம். சிலருக்குக் கண்ணாடி அணிந்து கொண்டதும் தலைவலி வரலாம்.
இதற்கு காரணம் அவரின் பார்வைக்கேற்ற சக்தி கண்ணாடியில் இல்லாமலிருக்கலாம். அல்லது கண்ணாடி பொருத்தப்பட்டிருப்பதில் ஏதேனும் தவறு இருக்கலாம்.
நீரழிவு
பார்வைக் குறைவுக்கான பொதுவான காரணங்களில் நீரழிவும் அடங்கும்.
நீரழிவு நோயின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க நோயாளியின் கண்களில் மாற்றம் தோன்றும். கண்புரை நோய், கண்களுக்குள் ரத்தப் பெருக்கு, பார்வைக்குறைவு போன்றவைகள் ஏற்படுகின்றன.
மாறுகண்
நாம் இரண்டு கண்களால் ஒருபொருளைப் பார்க்கும்போது ஏற்படும் இரண்டு பிம்பங்கள் பின் ஒன்றாக இணைவதால், இத்தகைய ஒருமைப்பாடு மூலம் தான் நம் பார்வை ஒரே சீராகவும் நல்ல நிலையிலும் அமைகிறது.
இந்த ஒருமைப்பாட்டில் ஏற்படும் கோளாறுதான் மாறுகண்.
மனவேதனையை உண்டு பண்ணும் இத்தகைய கோளாறினால் பார்வை கீழ்நோக்கித் தாழ்ந்து போவது மட்டுமின்றி நோயாளியின் முகபாவமும் மாறிவிடுகிறது.
மாறுகண் ஏற்படுவதற்கான காரணங்கள் எதுவாயிருப்பினும் உரிய காலத்தில் தாமதமின்றி சிகிச்சையை மேற்கொள்வதின் மூலம் நல்ல பார்வையைப் பெறமுடியும்.
இரண்டு பிம்பங்கள் இணைந்து ஒன்றுபடும் செயல் மூளைக்கட்டுப்பாட்டில் (மூளைமையத்தின் வளர்ச்சி) இருப்பதால் இந்நிகழ்வு பெரும்பாலும் குழந்தைகளின் ஐந்து அல்லது ஆறுவயதில் தான் ஏற்படுகிறது. ஆகவே மாறுகண் சிகிச்சை நான்கு வயதிற்கு முன்பே தொடங்கப்படவேண்டியது அவசியமாகிறது.
நான்கு வயதுக்கு முன் மாறுகண் சரிசெய்யப்படாவிடில், குழந்தையின் பார்வைக் கோளாறு நீங்காமலிருப்பது மட்டுமின்றி பின்னால் சிகிச்சையை மேற்கொண்டாலும் எவ்விதப் பயனுமின்றிப் போகிறது.
கண்களில் நீர் வடிதல்
குழந்தைகள் சிலருக்கு ஒரு கண்ணிலிருந்தோ அல்லது இருகண்களிலிருந்தோ நீர் வடியும்.
இக்குறைபாடு சரி செய்யப்படாவிடில் மூக்கிற்கும் கண்ணிற்கும் இடையிலுள்ள பாதை அடைக்கப்பட்டு பிரச்சினை உருவாகிறது.
இப்பாதையின் மூலம்தான் அதிகமாகக் கண்களில் சுரக்கப்படும் கண்ணீரானது மூக்கின் வழியாக வெளியேறுகிறது.
குழந்தைப் பருவத்திலும், இளமை மற்றும் முதுமைப் பருவத்திலும் அடிக்கடி ஏற்படும் தொற்று நோய் பாதிப்பால் இப்பாதை அடைக்கப்படுகிறது.
கண்ணீரானது வெளியேற முடியாமல் தடைசெய்யப்படும் போது கண்களில் நீர் வடிதல் மூலம் மிக எளிதாக நோய்கள் தொற்றிக் கொள்கின்றன.
விழித்திரை அகற்றப்படுதல்
விழித்திரையை அகற்றக்கூடிய நிலை உருவாகக் காரணம் அதிக சக்தி வாய்ந்த கண்ணாடிகளை அணிவதாலும், நீரழிவு நோய் தாக்குவதாலும்தான்.
கண்களில் ஏற்படும் காயங்களாலும் விழித்திரையை அகற்றக்கூடிய அபாயம் ஏற்படலாம். விபத்தினால் மட்டுமின்றி இயற்கையாகவே விழித்திரையை அகற்றக்கூடிய சூழ்நிலை ஏற்படுவதும் உண்டு.
மற்றொரு வகை பார்வைக்குறைவு கண்களில் ஜன்னல் என்று சொல்லப்படுகிற கார்னியா பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது.
கார்னியா பாதிக்கப்பட்டு அவதியுறும் நோயாளிகளுக்கு அதை அகற்றி இறந்தவர்களின் கண்ணிலுள்ள கார்னியாவை எடுத்துப் பொருத்தி பார்வை பெறச் செய்வதும் உண்டு.
கண்களில் ஏதேனும் தூசி விழுந்தால்கூட இமைகள் படபடக்கக் கண்களை காப்பாற்றத் துடிப்பதை நாம் அறிவோம். ‘கண் போல் காத்து வந்தேன்’ எனச் சொல்கிறோம். ‘என் கண்ணு’ எனக் கொஞ்சுகிறோம்.
வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்களையும் செயல்களையும் கண்ணிற்கு இணையாகக் கருதுகிறோம். சொல்கிறோம்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நம் கண்களை முறையாகப் போற்றிப் பாதுகாத்து கண்களை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்வோமாக.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998