கருப்பு உளுந்து தோசை செய்வது எப்படி?

கருப்பு உளுந்து தோசை சத்தான சிற்றுண்டி ஆகும். பொதுவாக தோசை செய்வதற்கு வெள்ளை உளுந்தம் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. கருப்பு உளுந்து தோசையினைச் செய்வதற்கு முழு உளுந்தம் பயறு பயன்படுத்தப்படுகிறது.

கருப்பு உளுந்தினைக் கொண்டு களி, லட்டு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் செய்யப்படுகின்றன. அதே வரிசையில் கருப்பு உளுந்து தோசையும் செய்யப்படுகிறது.

கருப்பு உளுந்து தோசையினைச் செய்வதற்கு முழு தோல் உளுந்துப் பயறும் நல்லெண்ணெயும் பயன்படுத்தப்படுவதால் எலும்புக்கு உறுதியும் தசைக்கு வலுவும் கிடைக்கும். எனவே இதனை அடிக்கடி செய்து உண்ணலாம்.

இனி சுவையான கருப்பு உளுந்து தோசையினைச் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி – 1 கப்

கருப்பு உளுந்து பயறு – 1/4 கப்

வெந்தயம் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

நல்ல எண்ணெய் – தோசை சுட தேவையான அளவு

கருப்பு உளுந்து தோசை செய்முறை

இட்லி அரிசி, உளுந்தம் பயறு மற்றும் வெந்தயத்தை கழுவி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.

கிரைண்டரில் அரிசி, உளுந்தம் பயறு, வெந்தயத்தை சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.

மாவினை தோண்டுவதற்கு முன்னர் தேவையான உப்பினைச் சேர்த்து அரைத்து அள்ளவும்.

இட்லி அரிசி, உளுந்தம் பயறு மற்றும் வெந்தயம் ஊறும்போது
இட்லி அரிசி, உளுந்தம் பயறு மற்றும் வெந்தயம் ஊறும்போது

தோண்டிய மாவினை ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும்.

தோசை மாவினை ஒருசேரக் கலந்து கொள்ளவும்.

மாவு புளித்ததும்
மாவு புளித்ததும்
மாவினைக் கரைத்ததும்
மாவினைக் கரைத்ததும்

தோசைக் கல்லினை அடுப்பில் வைத்து கல் சூடேறியதும் மாவினை மெல்லிய தோசையாக வார்க்கவும்.

சுற்றிலும் நல்லெண்ணெயை ஊற்றவும்.

தோசையாக வார்த்ததும்
தோசையாக வார்த்ததும்

தோசை லேசாக சிவந்ததும் எடுத்து விடவும்.

சுவையான கருப்பு உளுந்து தோசை தயார்.

விருப்பமுள்ளவர்கள் மாவினை தடிமனாக ஊற்றி நல்ல எண்ணெயை சுற்றிலும் விட்டு ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிவிட்டு வேக வைத்து எடுக்கவும்.

தடிமனான தோசையின் மீது நல்லெண்ணெய் கலந்த தோசைப் பொடித் தடவி உண்ண சுவை மிகும்.

குறிப்பு

அரிசி மற்றும் உளுந்தம் பயறினை ஊற வைக்கும் முன்பு கழுவி ஊற வைக்கவும். ஊற வைத்த தண்ணீரைக் கொண்டு மாவினை அரைக்கவும்.

விருப்பமுள்ளவர்கள் உளுந்தம் பயறினை கழுவி உடனே கிரைண்டரில் நன்கு தண்ணீர் தெளித்து அரைத்து தோசை மாவினைத் தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.