கருவாடும் பூவும்

கருவாடும் பூவும் - சிறுகதை

களத்தூரில் கந்தப்பன் என்ற வியாபாரி ஒருவன் இருந்தான். அவன் கருவாடு வியாபாரம் செய்து வந்தான்.

கருவாடு வியாபாரம் செய்ய ஆரம்பித்தபோது கந்தப்பனுக்கு கருவாடு வாசனை பிடிக்கவில்லை

ஆனால் உழைத்துப் பிழைக்க எந்தத் தொழிலாக இருந்தால் என்ன என்று துணிந்து கருவாடு வியாபாரத்தைத் தொடங்கினான்.

விரைவிலேயே அதில் நிறைய லாபம் சம்பாதித்தான். அதனால் அதுவே தனக்கு ஏற்ற தொழில் என்று முடிவு செய்து அதனைத் தொடர்ந்தான்.

நாளடைவில் கந்தப்பனுக்கு கருவாடு வாசம் இல்லாவிட்டால் உறக்கம் வரவில்லை. கருவாடு குழம்பு இல்லாவிட்டால் சோறு இறங்கவில்லை. அப்படி ஒருநிலைக்கு அவன் மாறிவிட்டான்.

ஒருநாள் கருவாடு மூடைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்காக பக்கத்து ஊரான கொடுமுடிக்கு சந்தைக்குப் போனான்.

சரக்குகளை விற்றுவிட்டு களத்தூர் திரும்ப நினைத்தவன், கொடுமுடியில் இருந்த தன்னுடைய தங்கையின் வீட்டிற்குச் சென்றான்.

கந்தப்பனின் தங்கையின் கணவனான புண்ணியகோடி ஒரு பூ வியாபாரி.

மைத்துனனான கந்தப்பனின் வரவைக் கண்ட பூ வியாபாரியான புண்ணிய கோடி மட்டில்லா மகிழ்ச்சியுடன் வரவேற்றான்.

கந்தப்பனின் தங்கையோ கந்தப்பனுக்கு தடபுடலான விருந்து வைத்து அசத்தினாள். விருந்தினை முடித்துவிட்டு கந்தப்பன் தங்கையுடனும், மைத்துனனுடனும் சிறிது நேரம் பேசிவிட்டு உறங்கச் சென்றான்.

கந்தப்பனுக்கு பட்டுப் போன்ற மெத்தையும் இலவம் பஞ்சு தலையணையும் கொடுத்தான் பூ வியாபாரி புண்ணியகோடி.

பூ வியாபாரி புண்ணியகோடியும் அவன் மனைவியும் வேறு அறையில் படுத்து உறங்கிச் சென்றனர்.

பட்டுப் போன்ற மெத்தையில் படுத்தபோதும் கந்தப்பனுக்கு உறக்கம் வரவில்லை. அவன் புரண்டு புரண்டு படுத்தான்.

காரணம் அவன் தினமும் கருவாடு மூடைகளுக்குப் பக்கத்திலேயே படுத்து உறங்கிப் பழகியவன். அவனுக்கு கருவாடு வாசமே பழகிப் போய்விட்டது. அதனால் பூ வியாபாரின் வீட்டில் வந்த பூ வாசம் கந்தப்பனுக்குப் பிடிக்கவில்லை.

அதுமட்டுமல்ல. நேரம் செல்ல செல்ல கந்தப்பனுக்கு பூவின் வாசனை எரிச்சலை ஏற்படுத்தியது. அதனால் அவன் படுக்கையை விட்டு எழுந்தான். வேகமாக கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடினான்.

மொத்த வியாபாரி ஒருவருக்கு அவன் கருவாடு மூடைகளை விற்றிருந்தான். அதில் ஒரு மூடையை வாங்கிக் கொண்டு திரும்பினான்.

கதவைத் திறந்தது வீட்டிற்குள் நுழைந்ததும் கருவாடு வாசத்தைக் கண்டு பூ வியாபாரியான புண்ணியகோடியும் அவனுடைய மனைவியும் விழித்துக் கொண்டனர். அவர்கள் இருவருக்கும் கருவாடு வாசனை வயிற்றைக் குமட்டியது.

வெளியே வந்த அவர்களிடம் கந்தப்பன் “நீங்களும் ஆயிற்று. உங்கள் பூவும் ஆயிற்று, உங்கள் பூ வாசத்தால் எனக்கு தூக்கம் வரவில்லை. கருவாடு வாசனை இருந்தால்தான் எனக்கு தூக்கம் வரும். அதனால்தான் ஓடிப்போய் கருவாடு மூடையைத் தூக்கிக் கொண்டு வந்தேன்.” என்றான்.

‘கருவாடு நாற்றத்தை இவன் வாசனை என்று கூறுகிறானே’ என்று எண்ணிய புண்ணியகோடியும் அவன் மனைவியும் கருவாடு நாற்றம் தாங்க முடியாமல் விடியும் வரை வீட்டுக்கு வெளியே உட்கார்ந்திருந்தனர்.

ஆனால் கருவாடு வியாபாரியான கந்தப்பனோ கருவாடு மூடையின் மீது சாய்ந்து நிம்மதியாக குறட்டைவிட்டுத் தூங்கினான்.

Visited 1 times, 1 visit(s) today